கடகம்
வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மாறாதவர்கள். பதவி, பணத்திற்கு வளைந்து கொடுக்காத நீங்கள், பாசம், பந்தத்திற்கு அடிமையாவீர்கள். சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதை பளிச்செனப் பேசுவீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். எவ்வளவு போராடினாலும் சில பணிகளை முடிக்க முடியாமல் திணறினீர்களே! இனி விரைந்து முடிக்கும் அளவிற்கு நேரங்காலமும் முழு ஒத்துழைப்பு தரும்.
வீடு கட்டும் வேலை இனி சுறுசுறுப்பாக நடக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தாருடன் இனி வீண் வாக்குவாதங்கள் இருக்காது. கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். எப்பொழுதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் காணப்படுவார்கள். மகளின் கல்யாணத்தை தடபுடலாக நடத்த வேண்டுமென நினைத்துக் கொண்டுதானே இருந்தீர்கள்! இப்பொழுது அதுவும் நடக்கும். குருபகவான் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு அதிசார வக்ரமாகி 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே.
சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து முடிப்பீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். ஆனால் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு 6ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது. கணவன்மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்களை தவறான பாதைக்குத் தூண்டுவார்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிட வேண்டாம். இந்த வருடம் முழுக்க சனியும், கேதுவும் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வாய்தா வாங்கி தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவிற்கு வருமானம் உயரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்று மொழிக்காரர்கள் மற்றும் வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் ஆதாயம் உண்டு. இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்களை அவ்வப்போது நினைத்து தூக்கத்தை இழக்க வேண்டாம். சிலரை திருத்துவதற்கு முயற்சி செய்து தோல்வியடைவீர்கள். 22.11.2019 முதல் 16.12.2019 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவி வழி உறவினருடன் மனக்கசப்பு வரும். வாகன விபத்து வரக்கூடும்.
கன்னிப்பெண்களே! கண்ணுக்கழகான கணவர் அமைவார். வயிற்றுவலி, தலைச்சுற்றல், தோலில் நமைச்சல் விலகும். பெற்றோர் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பாதியிலேயே விட்ட படிப்பைத் தொடருவீர்கள்.
மாணவர்களே! அரட்டைப் பேச்சை தவிருங்கள். சந்தேகங்களைக் கேட்பதில் தயக்கம் வேண்டாம். கணக்கு கொஞ்சம் கசக்கும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு.
வியாபாரிகளே! தாராளமாக முதலீடு செய்து, விசாலமாக கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். இனி ஆழம் தெரிந்து கால் வைப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை ஏற்காமல் சொந்தமாக சிந்திப்பீர்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். சின்ன இடத்தில் அவஸ்தைப் பட்டீர்களே! பெரிய இடமாகவும், மக்கள் கூடும் முக்கிய இடமாகவும், புதுக் கடை அமையும். உணவு, ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங்களில் பிரச்னை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். உங்களின் நெடுநாள் கனவாக இருந்த பதவியுயர்வும், சம்பள உயர்வும் நிறைவேறும். இருந்தாலும் உங்கள் வளர்ச்சியை விரும்பாத சிலர் குறை கூறிக் கொண்டிப்பார்கள். சக ஊழியர்களின் ஆதரவு சுமாராகத் தானிருக்கும். வேலையைத் தேக்கி வைக்காமல் அவ்வப்போது முடிக்கப் பாருங்கள். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடுவதால் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
அரசியல்வாதிகளே! மேலிடத்தைப் பற்றி சகாக்களிடம் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களைப் பற்றி வீண் வதந்திகளை பரப்பிவிடக்கூடும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப் பாருங்கள்.
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகள் விலகும். கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். அரசு கவுரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்.
விவசாயிகளே! பயிர்களை நவீன ரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறுப் பிரச்னைகள் வரும். ஆக மொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளினாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் எனும் ஊரில் அருட்பாலிக்கும் அருள்மிகு பத்ரகாளியை சென்று வணங்குங்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். பிரச்னைகள் விலகும்.