கன்னி
விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! மனித நேயத்துடன் எதிர்பார்ப்புகள் இன்றி எதிரிக்கும் உதவுபவர்கள் நீங்கள். மன்னிப்போம், மறப்போம் என்றிருக்கும் நீங்கள், நல்ல நகைச்சுவையாளர்கள். உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சுருங்கிய முகம் மலரும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் தீர்வு கிடைக்கும். வீட்டில் எப்போதும் ஒரு மௌனம் நிலவியதே! ஏதாவது பேசப் போனால் சண்டையில் முடிந்ததே! இனி அன்யோன்யம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலநேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள். புது சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். இந்த வருடம் முழுக்க குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு சிலரை கடிந்து கொள்வீர்கள். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு, யூரினரி இன்பெஃக்ஷன் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரிடம் கோபப்படாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்தைப் போராடிப் பெற வேண்டி வரும். மற்றவர்கள் சில ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அப்படியே ஏற்காமல் யோசித்து சில விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.
சொத்து வாங்கும் போது பத்திரத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். அசிடிட்டி, வாயுக் கோளாறு வந்து போகும். இந்த ஆண்டு முழுக்க சனியும், கேதுவும் 4ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.
தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப்பாருங்கள். புகைப் பழக்கமுள்ளவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு முழுக்க ராகுவும் 10ம் வீட்டிலேயே தொடர்வதால் சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். யாருமே தன்னை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். 10.01.2020 முதல் 03.02.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6ல் மறைவதனால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ் பழுதாகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அலை பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
கன்னிப்பெண்களே! வயிற்றுவலி, முகப்பரு, கண்ணுக்குக் கீழே இருந்த கருவளையம் விலகும். கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
மாணவர்களே! நினைவாற்றல் கூடும். அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரிகளே! அதிரடி மாற்றங்கள் செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க ரேடியோவில் விளம்பரம் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புதிய கொள்முதல் செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி ஒத்துழைப்பார்கள். இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் நிதானமாக பதில் சொல்லுங்கள்.
உத்தியோகஸ்தர்களே! யாரோ செய்த தவறுக்கு உங்களை பலிகடா ஆக்கினார்களே! நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேருவீர்கள். உயர்மட்ட கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பி பணி புரிவீர்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையினர்களே! குடும்பத்தைப் பிரிந்து சென்று சம்பாதிப்பீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும், மாவட்டமும், வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடிவரும்.
கலைஞர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.
விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைந்ததே! இனி கிணற்றில் நீர் சுரக்கும். பழைய பம்புசெட்டை மாற்றுவீர்கள். வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும். இந்த புத்தாண்டு பிரச்னைகளிலும், செலவுகளிலும் சிக்க வைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருட்பாலிக்கும் ஸ்ரீவீரஆஞ்சநேயரை சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். ஏற்றம் உண்டாகும்.