துலாம்
கடமை உணர்வு கொண்ட நீங்கள் பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளரமாட்டீர்கள். ஒற்றுமையுணர்வு அதிகமுள்ள நீங்கள், மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். அதிகாரம் ஆணவத்தை விட அன்புக்கு கட்டுப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு பத்தாவது ராசியில் இந்த விகாரி வருடம் தொடங்குவதால் உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். என்றாலும் மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்குவீர்கள். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும்.
வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். சொந்தபந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். ராசிநாதன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கைமாத்தாக வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பிரார்த்தனைகளை முடிக்க நேரம் கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சனியும், கேதுவும் முகாமிட்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள்.
நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும். வருடம் முழுக்க ராகுபகவான் ராசிக்கு 9ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு வீண் டென்ஷன், கணுக்கால், முழங்கால் வலி வந்து செல்லும். தந்தை வழி உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வருட ஆரம்பம் முதல் 18.05.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசார வக்ரமாகி 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.
வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். 19.05.2019 முதல் 27.10.2019 வரை குருபகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை 3ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும்.
முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். தந்தை வழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 16.04.2019 முதல் 11.05.2019 வரை மற்றும் 04.02.2020 முதல் 29.02.2020 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனமாகக் கையாளுங்கள். 14.04.2019 முதல் 06.05.2019 வரை செவ்வாய் 8ல் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறி எந்த உறுதிமொழியையும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பணம் எடுத்துக் கொண்டு செல்லும் போதும், கொண்டு வரும் போதும் உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள்.
கன்னிப்பெண்களே! எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பெற வாய்ப்புகள் வரும். தள்ளித் தள்ளி போய்க் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக முடியும். வெளி நாட்டில் வேலை, மேற்கல்வி அமையும்.
மாணவர்களே! உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்விப் பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.
வியாபாரிகளே! போட்ட முதலை எடுப்பதற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததே! இனி கணிசமான லாபம் உண்டு. கம்யூனிகேஷன், புத்தகம், உணவு போன்ற புதுத்துறையிலும் கால் பதிப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் பங்குதாரர்களை விட்டுப் பிரிய வேண்டியது வரும். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று வரவு அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். புரோக்கரேஜ், ஹோட்டல், எலட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள் என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கணினி துறையினர்களே! அனாவசியமாக விடுப்பில் செல்ல வேண்டாம். கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். உங்களுக்கு எதிராக சிலர் குற்றம் சுமத்தினாலும் அதில் மீண்டு வருவீர்கள்.
அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும். உட்கட்சி பூசலில் தலையிடாதீர்கள். சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள்.
கலைஞர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.
விவசாயிகளே! கடன் தொல்லையால் நிம்மதி இழந்தீர்களே! பயிரைத் தாக்கிய பூச்சித் தொல்லை இனி இருக்காது. பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும். ஆகமொத்தம் இந்த தமிழ் புத்தாண்டு திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தையும் கடைபிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்:
மதுரை மாவட்டம், பசுமலையில் அருட்பாலிக்கும் ஸ்ரீவிபூதி விநாயகரை சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொடுங்கள். மகிழ்ச்சி தொடங்கும்.