விருச்சிகம்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அந்த காலம், பொங்கி எழுந்தால்தான் இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பதை அறிந்தவர்கள் நீங்கள். தொடங்கிய வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பவர்களே! இந்த விகாரி ஆண்டு உங்கள் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதாலும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்யம் மேம்படும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். இடைவிடாமல் உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! இந்த ஆண்டில் பணபலம் கூடும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த ஆண்டு பிறக்கும் போது சூரியன் சாதகமாக இருப்பதால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும்.
பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்கும்படி கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலமான நிலை உருவாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். இந்த ஆண்டு முழுக்க பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலை தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். பல் ஈறு வலிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். இந்த ஆண்டு முழுக்க கேது 2ம் வீட்டிலும், ராகு 8ல் தொடர்வதால் கடு கடுப்பாகப் பேசாதீர்கள். சில சமயங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாக முடியும். எந்த ஒரு விஷயத்திலும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்துப் போகும். இரவு நேரத்தில் தொலை தூரப் பயணத்தில் வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்களும், தோல்வி மனப்பான்மையும் தலைத்தூக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வறட்டு கவுரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள். வருடம் தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு அதிசார வக்ரமாகி இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. போதைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வீண் பழியும் வந்து நீங்கும். நீங்கள் நல்லதையே பேசினாலும் மற்றவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தம் கொள்வார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும்.
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். 07.05.2019 முதல் 23.06.2019 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8ல் மறைந்து பலவீனமாவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்த காரியத்தைத் தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும். சகோதரர்களால் அலைச்சல் இருக்கும். முழுமையாக யாரையுமே நம்ப முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். 11.05.2019 முதல் 03.06.2019 வரை மற்றும் 1.3.2020 முதல் 28.03.2020 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். முகப்பரு, தோலில் நமைச்சல் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். அயல்நாட்டில் உயர்கல்வி உண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.
மாணவர்களே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு பாராட்டுகளை பெறுவீர்கள்.
வியாபாரிகளே! செய்யமுடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். மருந்து, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயமுண்டு.
உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது சலுகைகளும் உண்டு. உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள். என்றாலும் அலுவலக விஷயங்களை கவனமாக கையாளுங்கள். கணினி துறையினர்களே! இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தெரிவியுங்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். அரசு கவுரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வீண் வதந்திகள் விலகும்.
விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும். இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சரபேஸ்வரரை சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். பிணிகள் அகலும்.