தனுசு
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்வர்களான நீங்கள், தராதரம் அறிந்து பழகுவீர்கள். தகுதியிருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த விகாரி வருடம் பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி அல்லது உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஆனால் எட்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் வீண் அலைச்சலும், உடல் சோர்வு, சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். இனி வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகளை செய்து கொண்டிருக்காதீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும்.
அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்கள் இருவருக்குள்ளும் கலகமூட்டிய உறவினர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம், அசதி, சோர்வு வந்து செல்லும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள்.
உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்து கொள்வார்கள். இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேதுவும், 7ம் வீட்டிலேயே ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறை கூறுவார்கள். ஏமாற்றப்படுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம்.
முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வருடம் பிறக்கும் போதிலிருந்து 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்து கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். நல்ல வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமோ? என்று சில நேரங்களில் புலம்புவீர்கள். பித்தத்தால் தலைசுற்றும். வாயுக்கோளாறால் வயிறு, நெஞ்சு வலிக்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களை புறக்கணிப்பது போலத் தோன்றும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நகையை வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது நல்லது. 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி குறைத்துப் பேச வேண்டாம்.
பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, ஹார்மோன் கோளாறு வந்து செல்லும். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.
எந்த பிரச்னையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி தீர்க்கப்பாருங்கள். 24.06.2019 முதல் 09.08.2019 வரை செவ்வாய் 8ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவு கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். சகோதர வகையில் சச்சரவு வரும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் செலவு செய்து கொண்டிருக்க வேண்டாம். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். 04.06.2019 முதல் 05.07.2019 வரை மற்றும் 29.03.2020 முதல் 13.04.2020 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாக பேசுவதாக குறை கூறுவார்கள்.
கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு.
மாணவர்களே! புத்தகத்தை திறந்தாலே தூக்கம் வந்ததே! அந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.
வியாபாரிகளே! முழி பிதுங்கி நின்றீர்களே! கடன் வாங்கி தொழில் தொடங்கி நட்டப்பட்டீர்களே! வேலையாட்களும் அவ்வப்போது தொல்லை தந்தார்களே! இந்த நிலையெல்லாம் இனி மாறும். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மருந்து, இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! இனி உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களே! வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் புதிய வாய்ப்புகள் வந்தமையும்.
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். தேர்தலில் வெற்றியுண்டு.
கலைத்துறையினர்களே! நிலையான வருமானமில்லாமல் தவித்தீர்களே! இனி சேமிக்கும் அளவிற்கு வருமானம் உண்டு. பெரிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் படைப்புக்கு அரசு விருது உண்டு.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள். இந்த விகாரி வருடம் வேலைச்சுமையையும், திடீர் பயணங்களையும் தந்தாலும், பணவரவையும், புகழ், கௌரவத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடியில் அருட்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை சென்று வணங்குங்கள். செங்கல் சூளை அல்லது கல்குவாரியில் வேலை செய்யும் கூலித்தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்.