மேஷம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு வரும் மேஷ ராசி அன்பர்களே! இந்த விகாரி ஆண்டில் உங்களின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும். முக்கியமாக தொழில்முறையில் அதிக அலைச்சலைக் கண்டாலும் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண உள்ளீர்கள். சனியின் ஆதிக்கம் பெற்ற ஒரு நபரின் துணையினைக் கிடைக்கப் பெறுவீர்கள். அவரோடு இணைந்து நீங்கள் செய்யும் காரியங்கள் உங்கள் புகழினை உயர்த்துவதோடு சிறப்பான தனலாபத்தினையும் பெற்றுத் தரும். தொழில்முறையில் ஓய்வில்லாமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வருடத்தின் ஐப்பசி 12ம் தேதி வரை அஷ்டமத்து குரு சற்று சிரமத்தினைத் தந்தாலும் அதன்பிறகு உண்டாகும் குருப்பெயர்ச்சி சாதகமாக அமையும். தனக்கென்று ஒரு சில விதிமுறைகளை விதித்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் வழுவாது செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம்.
ஆயினும் தன ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் ஆடம்பர செலவுகள் குறைந்து சேமிப்பு உயரக் காண்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. உறவினர்கள் நமது எதிர்பார்ப்பினை நிறைவேற்றவில்லையே என்ற மனவருத்தம் தோன்றக்கூடும். கடன் கொடுக்கல் வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. இந்த ஆண்டில் நீங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபரின் மூலமாக நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றும் காலத்தில் நீங்களே அதிகம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை.
நண்பர்களோடு வீண்விவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். உடல்நிலையில் தோன்றும் சிறுபிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று நடக்க வேண்டியது அவசியமாகிறது. முக்கியமாக முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கிரியாதிகளை எக்காரணம் கொண்டும் தவிர்த்துவிடாமல் கட்டாயம் செய்து வாருங்கள். பூர்வபுண்ய ஸ்தானத்தில் சனிகேதுவின் இணைவு முன்னோருக்கான கடனை சரிவர செய்து முடிக்க துணைசெய்யும். முன்னோர்களின் ஆசிர்வாதம் மற்றும் குலதெய்வத்தின் அருளோடு இந்த தமிழ்புத்தாண்டினை நல்ல முறையில் அனுபவிப்பீர்கள்.
மாணவர்கள் :
மாணவர்களின் கல்வி நிலையைப் பொறுத்தவரை சந்திர பகவான் துணை நிற்பார். இந்த வருடத்தில் உங்களுடைய ஞாபகசக்தி உயரும். மனப்பாடப் பயிற்சியில் சிறந்து விளங்குவீர்கள். வேளாண்மை அறிவியல், இயந்திரவியல், மருத்துவம், பிசியோதெரபி துறைகளைச் சார்ந்த மாணவர்கள் உயர்வு பெறுவார்கள். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் நன்மதிப்பினைப் பெற வேண்டியது அவசியம்.
பெண்கள்:
குடும்பப் பிரச்னைகளை முடிவிற்குக் கொண்டு வரும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்நியப் பெண்களிடம் அதிக கவனம் தேவை. பிள்ளைகளால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள்.
தொழில் : உத்யோகம்:
தொழில் ஸ்தானாதிபதி சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருப்பது அதிக அலைச்சலைத் தரும். கூட்டுத்தொழில் லாபகரமான முறையில் இருந்து வரும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டியது அவசியம். மருத்துவத்துறையில் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஓய்வில்லாது பணியாற்ற வேண்டியிருக்கும். இயந்திரங்கள் சார்ந்த தொழில் சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும்.
பொதுவான நிலை:
அதிக அலைச்சல் என்பது இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தினைப் பெற்றிருப்பீர்கள். நியாய, தர்மம் குறித்த சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் மனதிற்கு ஆறுதலைத் தேடிக் கொள்வீர்கள். மொத்தத்தில் நற்பலன்களைத் தரும் வருடமாகவே அமைந்துள்ளது.
பரிகாரம்:
மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டினை சரிவர செய்து வாருங்கள். குலதெய்வ வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யும். வருடப்பிறப்பு நாளன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு அன்னதானம் செய்வதால் உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைய
காண்பீர்கள்.