கும்பம்
உழைப்பவர்களுக்கு உதவிடும் கும்ப ராசி அன்பர்களே! தமிழ்ப்புத்தாண்டு புத்துணர்ச்சியைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆன்மிக ஈடுபாடுகள், தர்ம சிந்தனைகள் ஆகியவை மனதில் குடிபுகும். பெரியவர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துச் செயல்பட்டு வருவீர்கள். இந்த வருடம் முழுவதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து வருவதன் மூலம் மனநிம்மதி காண்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். ஆயினும் அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை சீரான முன்னேற்றம் கண்டு வரும். கடன்பட்டாவது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்ய முயற்சிப்பீர்கள்.
எதிர்கால சந்ததியினருக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். தன்னலமற்ற பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். தான, தருமங்களுக்காக கூடுதலாக செலவழிக்க நேரலாம். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோருக்கு உதவுதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் தீர்வடையும். பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் காண்பீர்கள்.
ஐப்பசி மாதத்திற்குப் பின் சொத்துக்கள் உருமாறும் வாய்ப்பு உள்ளது. குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளைச் செய்ய கால நேரம் ஒத்துவரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். உறவினர்களால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்னைகளை பெரிதுபடுத்தாது அப்படியே விட்டுவிடுவது நல்லது. தொலைதூர ஆன்மிகப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு தேடி வரும். இந்தப் புத்தாண்டில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக் காண்பீர்கள்.
மாணவர்கள் :
கல்விநிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். படிக்க வேண்டிய நேரத்தில் மனம் ஒருமுகப்படாது அங்குமிங்கும் அலைபாயும். தேர்வு நேரத்தில் வினாக்களுக்கு உரிய சரியான விடை பிடிபடாமல் போகலாம். இந்நிலையினை தவிர்க்க சரியான குறிப்புகளுடன் விடைகளை எழுதி பழகிக் கொள்வது நல்லது. குரு பகவானின் துணையினால் எழுதும் திறன் அதிகரிக்கும். தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பழகுதல் நலம். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள்.
பெண்கள் :
ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு பொருள் சேமிப்பில் ஈடுபடுங்கள். இந்த வருடத்திய சேமிப்பு எதிர்காலத்திற்கு பக்கபலமாய்த் துணைநிற்கும். உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் பலவீனமாக உள்ளது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை. குடும்பப் பணிகளில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருப்பதை எண்ணி மனதில் லேசான விரக்தி தலைதூக்கும். வாழ்க்கைத்துணைவருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள்.
தொழில் : உத்யோகம் :
இந்த வருடத்தில் செய்யும் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் உண்டானாலும் அதற்குரிய தனலாபம் கிட்டும். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும். நஷ்டமேதுமின்றி உங்களுக்கு வரவேண்டிய லாபம் என்பது சீரான முறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஒரு சிலர் தங்களின் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் ஈடுபட நேரிடும். தொழிற்சாலைப் பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
பொதுவான நிலை :
இவ்வருடத்தில் வெற்றியைத் தரும் 11ம் இடம் வலிமையாக இருப்பதால் காரியவெற்றி என்பது சாத்தியமாகும். நினைத்ததை சாதிக்கும் திறன் கூடும். அவசரப்படாமல் செயல்படுங்கள். குடும்பத்தினரின் சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். மொத்தத்தில் நற்பலன்களைத் தரும் வருடமாக அமைந்துள்ளது.
பரிகாரம்:
இந்த வருடத்தில் ஏழை மாணவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து வாருங்கள். குறைந்த பட்சமாக ஏதேனும் ஒரு மாணவரின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது. வியாழன் தோறும் சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற குருமகான்களின் ஆலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள்.