மீனம்
நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் மீன ராசி அன்பர்களே! வருகின்ற விகாரி ஆண்டு நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். இந்த வருடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிச்சுமை நாளுக்கு நாள் கூடும் என்பதால் அவ்வப்போதைய பணிகளை காலம் தாழ்த்தாது உடனுக்குடன் முடித்துவிடுவது நல்லது. ராசிநாதன் குரு பகவானின் சாதகமான சஞ்சார நிலை வெற்றிக்குத் துணை நிற்கிறது. புதிய சொத்து வாங்குதல், சேமிப்புகளில் ஈடுபடுதல் போன்ற சாதகமான பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்திருப்போர் இந்த வருடத்தில் தங்கள் குடும்பத்தினருடன் இணைவார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பார் என்பதால் அவரோடு உங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது நல்லது.
பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் அகலும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நண்பர்களின் இணைவினால் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். ஞாபகமறதிப் பிரச்னையால் பல விஷயங்களில் இழப்பினை சந்திக்க நேரலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை எழுதி வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. குறைந்த விலையுடைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் தோன்றலாம் என்பதால் பணம் சம்பந்தமான முக்கியமான விவகாரங்களுக்குத் தனித்துச் செல்வது நல்லதல்ல.
அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பதும் கூடாது. சரியான துணையுடன் இணைந்து செய்யும் பணிகளில் வெற்றி கிட்டும். உறவினர்களின் வருகையால் செலவுகள் கூடினாலும் மனமகிழ்ச்சி காண்பீர்கள். வண்டி, வாகனங்களை இயக்குவதிலும், பிரயாணம் செய்வதிலும் தனிஇன்பம் உண்டாகும். பிள்ளைகளின் வளர்ச்சியைப் பற்றி சதா எண்ணி வரும் உங்களுக்கு இந்த வருடத்தில் அவர்களின் முன்னேற்றத்தினைக் காணும் வாய்ப்பு உருவாகும்.
மாணவர்கள் :
வித்யா ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள துணையிருப்பார். தீவிர சிந்தனையால் குழப்பத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால் ஆசிரியரின் உதவியைப் பெற வேண்டியது அவசியம். இந்த வருடம் தேர்வு நடைபெறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ராசிநாதன் குரு பகவான் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி காண்பீர்கள். தாவரவியல், நுண்ணுயிரியல், கேட்டரிங் டெக்னாலஜி, மெரைன் இன்ஜினியரிங் போன்ற துறையில் உள்ள மாணவர்கள் அபார வளர்ச்சியைக் காண்பார்கள்.
பெண்கள்:
பணம் சார்ந்த முக்கியமான விவகாரங்களில் தனித்துச் செயல்படுவது நல்லதல்ல. அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். பொதுவாக அதிகம் பேசாது அமைதி காப்பது நலம். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்பினைக் காண்பீர்கள். அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் உயர்வு காண்பீர்கள்.
தொழில்: உத்யோகம்:
நேர்மையான உழைப்பின் காரணமாக செய்யும் தொழிலில் ஸ்திரத்தன்மை உருவாகும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியமான கோப்புகளை எங்காவது வைத்துவிட்டு ஞாபகமறதியின் காரணமாக அவதிப்பட நேரலாம். ஆயினும் நீங்கள் சம்பாதித்திருக்கும் நற்பெயர் உங்களுக்குத் துணை நிற்கும். சிறுதொழில் செய்வோர் அதிக உழைப்பினை வெளிப்படுத்தி குறைந்த லாபத்தினைக் கண்டு வருவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் மனதில் இருந்துவரும். தொழிலதிபர்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. வியாபாரிகள் புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி வெற்றி காண்பார்கள்.
பொதுவான நிலை :
இவ்வருடம் உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமான பணிகளில் சரியான துணையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிலைநிறுத்துங்கள். அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவது உங்கள் வெற்றியை உறுதி செய்கிறது. நமக்குரிய வாய்ப்பினை யாராலும் தட்டிப்பறிக்க இயலாது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். விகாரி வருடம் உயர்வு தரும் வருடமாக அமைந்துள்ளது.
பரிகாரம் :
தினமும் காலையில் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை 11 முறை உச்சரித்து மானசீக வழிபாட்டினைச் செய்து வாருங்கள். பிரதோஷ நாட்களில் சிவாலயத்தில் உங்களால் இயன்ற தொண்டினைச் செய்து வருவது நல்லது. உடல்நிலையும், மனநிலையும் தளரும்போது நமசிவாய என்று சொல்லி நெற்றியில் திருநீறு பூசி மனதில் சிவபெருமானை தியானிக்க குறைகள் அத்தனையும் நொடிப்பொழுதில் காணாமல் போவதை அனுபவித்து உணர்வீர்கள்.