ரிஷபம்
அனைவரையும் வசீகரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! வரவிருக்கும் விகாரி வருடத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் முக்கியமான நிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள். வருடத்தின் துவக்கத்தில் குருபகவானின் சாதகமற்ற சஞ்சார நிலை இருப்பதால் எளிதில் முடிந்துவிடும் என்று நினைத்த காரியங்களில் இழுபறியான நிலையினை சந்திக்க நேரலாம். ஆயினும் குருபகவானின் பார்வை பலத்தினால் ஐப்பசி மாதம் 12ம் தேதிக்குள் உங்களின் தேவைகள் நிறைவேறும். விரும்பிய காரியங்கள் எளிதில் நடைபெறக் காண்பீர்கள். ஜீவனாதிபதி சனி பகவான் எட்டில் கேதுவுடன் இணைவதால் தொழில்முறையில் தடைகள் தொடரும். உங்கள் காரியங்களுக்குத் தடையாக இருந்த நபர்கள் தானாக விலகிச் செல்லும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். வருடத்தின் துவக்கத்தில் ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் செவ்வாயால் மனதினில் சுறுசுறுப்பு கூடும்.
பேசும் வார்த்தைகளில் அடுத்தவர் மனம் மகிழும் வகையில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட்டு பூர்வீக சொத்துப் பிரச்னைகளில் முக்கியத்தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து வெற்றி காண்பார்கள். பிரச்னைக்குரிய காலங்களில் நிதானமான அணுகுமுறை நற்பெயரோடு வெற்றியையும் பெற்றுத் தரும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் நீங்கள் நெடுநாட்களாக மனதில் எண்ணியிருந்த முக்கியமான காரியம் ஒன்று நடைபெறக் காண்பீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போதும் சாலை வழிப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். பிள்ளைகளின் ஆலோசனைகள் உங்கள் செயல்வெற்றிக்குத் துணை நிற்கும்.
அவர்களின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் நடைபெறக் காண்பீர்கள். அஷ்டமத்துச் சனி பகவான் கடன் பிரச்னைகளைக் கூட்டுவார். வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது அவசியம். அவரது மனநிலையைப் புரிந்துகொண்டு பிரச்னைகளை அவரோடு அமர்ந்து ஆலோசித்து தீர்வு காண்பது நல்லது. உங்களின் முன்னேற்ற நிலை நண்பர்கள் மத்தியில் பொறாமை உணர்வை தூண்டக்கூடும். ஆயினும் அவர்களின் மன நிலையினைப் புரிந்துகொண்டு அவர்களையும் அனுசரித்துச் சென்றால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களோடு அனுசரணையான போக்கினைக் கடைபிடித்து எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வருவீர்கள்.
மாணவர்கள் :
ரிஷப ராசியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய நேரம் இது. ஆட்டோ மொபைல்ஸ், இயந்திரவியல், பயோ டெக்னாலஜி துறையைச் சேர்ந்தவர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ட் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். தேர்வு நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. நேர்முகத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் ஆகியவற்றில் உண்டாகும் தயக்கத்தை விட்டொழிக்க கூடுதல் பயிற்சி தேவை.
பெண்கள் :
குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருவீர்கள். உங்களது படபடப்பான பேச்சுக்கள் மற்றவர் மத்தியில் உங்களுக்கென தனி இடத்தினை உருவாக்கித் தரும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றி வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவ வேண்டிய சூழல் உருவாகும்.
தொழில் : உத்யோகம்:
அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு இவ்வருடத்தில் இடமாற்றத்திற்கான வாய்ப்பு உருவாகும். தொழில் முறையில் வெளிநாட்டு தொடர்பு உடையவர்கள், டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோர் நன்மை காண்பார்கள். கட்டிடக்கலை, அழகுக்கலை, சமையல் கலை ஆகியவை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். உணவுப் பண்ட வியாபாரம் செழிக்கும்.
பொதுவான நிலை :
இவ்வருடத்தில் சற்று சிரமத்தினை சந்திக்க நேர்ந்தாலும், உங்களது திறமை கைகொடுக்க வாழ்வினில் முன்னேற்றம் அடைவீர்கள். அஷ்டமத்துச் சனியால் பல வழிகளிலும் தடைகளை சந்தித்தாலும் அனுசரணையான அணுகுமுறையின் மூலம் வெற்றி காண இயலும். தடைகளைத் தாண்டி வாழ்வினில் முன்னேற்றம் காணும் வருடம் இது.
பரிகாரம்:
பிறந்தநாள் மற்றும் திருமண நாள் முதலான விசேஷ நாட்களில் வீட்டிற்கு வயதான தம்பதியரை அழைத்து உணவிட்டு அவர்களுக்கு வஸ்திரம் அளித்து பாதபூஜை செய்து வணங்குங்கள். பெற்றோரையும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும் அவ்வப்போது வணங்கி வர வேண்டியது அவசியம். வருடப் பிறப்பு நாளன்று அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் ஆகியவற்றை தானம் செய்யுங்கள். மற்றவர்களின் தாகத்தைத் தீர்த்து வைப்பதால், உங்களது குறைகளும் காணாமல் போகும்.