மிதுனம்
மிதுனம்: புதன் ஆதிக்கத்தில் பிறந்த மிதுன ராசி அன்பர்களே! இந்த புத்தாண்டு உங்களுக்கு கலவையான பலன்கள் உள்ளதாக இருக்கும். அலைச்சல், குழப்பங்கள், வீண் விரையங்கள், அதிருப்திகள் உண்டாகும். 1-9-2020 வரை ராசியில் ராகு, ஏழில் கேது தொடர்வதால் எதிலும் கவனமாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பது அவசியம். நண்பர்களுடன் அதிக நெருக்கம் வேண்டாம். குறிப்பாக உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும். கணவன், மனைவி இருவரில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படலாம். நரம்புக்கோளாறுகள், ஒற்றைத்தலைவலி, தைராய்டு பிரச்னைகள் வரவாய்ப்புள்ளது. வண்டி ஓட்டும்போதும், பின்னால் அமர்ந்து செல்லும்போதும் கவனம் தேவை. சிறு விபத்துக்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. குரு, சனி அமைப்பு காரணமாக கிடைக்குமா, கிடைக்காதா, வருமா, வராதா என்ற மனஉளைச்சல்கள் நீங்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கள் கூடி வரும். பூர்வீகச் சொத்து நல்ல முறையில் பாகம் பிரிந்து கைக்கு வரும். நிலம், வீடு, விற்பதால் கையில் பணம் புரளும்.
கேதுவின் ஞானப்பார்வை காரணமாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிமாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசிப்பீர்கள். வசதி குறைவு, வாடகை பிரச்னைகள் காரணமாக வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படும். 13-8-2020 முதல் 17-2-2021 வரை செவ்வாய் ஆட்சி பெற்று நேர்கதியிலும், வக்கிர கதியிலும் சஞ்சரிக்கிறார். அதனால் சகோதர உறவுகளால் அனுகூலமான நிலை இருக்கும். வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதனால் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். விலகி நின்ற சொந்தங்கள் உங்களை புரிந்துகொண்டு நெருங்கி வந்து உறவாடுவார்கள். கொடுக்கல், வாங்கலில் சாதகமான மாற்றம் வரும். வட்டிப்பணம் கொஞ்சம் தாமதமானாலும் அசல் தொகை வசூலாகும். பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்காக அலைச்சலும், செலவுகளும் இருக்கும். உற்றார், உறவினர், நண்பர்கள் என எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கித் தராமல் இருப்பது நலம் தரும். தடைபட்டு வந்த சகோதரியின் திருமணம் திடீரென்று கூடிவரும். திருமணத்தை முன்நின்று சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். காலியாக இருக்கும் பிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். அதனால் டென்ஷன் குறையும். வருமானம் கூடும். பேரன், பேத்திகளுக்கு முடி இறக்குதல், காது குத்தல் போன்ற சுப விசேஷங்களை மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள்.
பெண்கள்:
கொஞ்சம் குழப்பம், அலைச்சல், மனக்குறைகள் இருக்கும் என்றாலும் மற்ற விஷயங்கள் எல்லாம் சாதகமாக கூடிவரும். மருமகள் கர்ப்பம் அடைந்த இனிக்கும் செய்தி கிடைக்கும். நெருங்கிய தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். அதனால் கவனமாக இருப்பது அவசியம். தங்க நகைகள் இரவில் கொடுப்பது, வாங்குவது கூடாது. சொந்த வீடு வாங்க முடியவில்லையே, கட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் நீங்கும். குரு பார்வை காரணமாக ஐப்பசி மாதத்திற்குள் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். மே, ஜுன் மாதத்தில் சுக்கிரன், புதன் சாதகமாக இருப்பதால் உடல்நலம், மனநலம் நன்றாக இருக்கும். பழைய நகைகளை மாற்றி புது டிசைன் நகைகள் வாங்குவீர்கள். தாய் வீட்டில் இருந்து வரவேண்டிய பாகப்பிரிவினை சொத்து சம்பந்தமாக மகிழ்ச்சியான செய்தி வரும். தாய்வழி உறவுகளின் வீட்டு விசேஷம் காரணமாக பரிசுகள், மொய் பணம், விருந்து என செலவுகள் இருக்கும். புதிய கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:
அலுவலக விஷயங்களில் நிறை, குறைகள் இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாகப் போவது நலம்தரும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு வெளிமாநிலத்தில் நல்ல சம்பளம் சலுகைகளுடன் வேலை கிடைக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நிலை வரும். உங்களுக்கு நெருக்கடி தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றல் பெற்று செல்வார். குரு பார்வை காரணமாக உங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். நிலுவைத் தொகை மொத்தமாக கைக்கு கிடைக்கும். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் இருக்கும். இடமாற்றம் காரணமாக குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க வேண்டி வரும். விருப்ப ஓய்வு பெறுவது பற்றிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.
அரசியல் - கலைத்துறை: அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். கேது 7-ல் இருப்பதால் யாரையும் வெளிப்படையாக பகைத்துக்கொள்ள வேண்டாம். பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தி தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புக்கள் நீங்கும். ஆவணி மாதம் புதிய பதவி கிடைக்கும் யோகம் உள்ளது. உட்கட்சி தேர்தல்களில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்கு சாதகமான நேரம். குரு பார்வை காரணமாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெறுவீர்கள். கர்நாடக இசைக்கச்சேரி குழுவினருக்கு அயல்நாட்டில் கச்சேரி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மே, ஜுன் மாதங்களில் புதன், சுக்கிரன் அருளால் படவிநியோகஸ்தர்கள் லாபம் அடைவார்கள். கையில் பணம் புரளும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்து நிம்மதியடைவீர்கள்.
தொழில்-வியாபாரம்-விவசாயம்: குரு ஆட்சி பலம் பெற்று சனியுடன் சேர்ந்து இருப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். சுயதொழில் செய்பவர்கள் கடைக்கு சப்ளை செய்பவர்கள், கமிஷன், காண்ட்ராக்ட் வகையில் தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் பார்க்கலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. மே, ஜுன் மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவதற்கான யோகம் உள்ளது. பெரிய நிறுவனங்களில் இருந்து கடனுதவி கிடைக்கும். வெளியூர், வெளிமாநில பொருட்களை விற்பதன் மூலம் லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். புதிய இணை, துணை தொழில்கள் தொடங்குவீர்கள். மளிகைப்பொருட்கள் மொத்த வியாபாரம் கை கொடுக்கும். தங்கம், வெள்ளி வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சூழ்நிலை நிலவரத்திற்கேற்ப முதலீடுகளை பார்த்துச் செய்வது நல்லது ஹோட்டல் தொழிலில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். விவசாயம் சீராக இருக்கும். மஞ்சள், கரும்பு, கடலை வகைகளில் நல்ல விளைச்சலும், விலையும் கிடைக்கும். பீன்ஸ், அவரை செளசௌ பயிரிடுவதன் மூலம் லாபம் வரும். குத்தகைக்கு எடுத்த நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்கும். எதிர்பார்த்ததைவிட கமிஷன் வகையில் பணம் வரும். பூக்கள் விவசாயம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வணங்கலாம்.