சிம்மம்
தலைநிமிர்ந்து நடக்கும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த விகாரி ஆண்டு உங்கள் மனதில் இருந்து வரும் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் காலமாக இருக்கும். எடுத்த காரியத்தில் தொய்வின்றி சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருவீர்கள். போட்டியாளர்கள் மத்தியில் உங்களின் செயல்வேகம் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். எதிரிகள் காணாமல் போவார்கள். வருடத்தின் துவக்கத்தில் குருபகவானின் பார்வை நிலை உங்களின் பணிகளுக்குத் துணை புரியும். பொருளாதார நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய சம்பாத்யம் அசையாச் சொத்துக்களாக உருமாற்றம் கொள்ளும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து சென்ற நண்பர்களும், உறவினர்களும் உங்களின் தன்னலமற்ற அன்பினை உணர்ந்து மீண்டும் வந்து சேர்வார்கள். புதிய நண்பர்களின் இணைவினால் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் முன்னின்று செய்யும் காரியங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தரும். பொதுக்காரியங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பான கௌரவத்தினைப் பெற்றுத் தரும். அலுவல் பணியிலும் சரி, குடும்பத்திலும் சரி, பொதுக்காரியங்களிலும் சரி உங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தி தனியொரு கௌரவத்தினை அடைவீர்கள். விசுவாசமான பணியாட்களின் துணைகொண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். இணையதளம் போன்ற தகவல் தொடர்புகளின் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
அந்நிய தேசத்தில் வசிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும். நெடுநாட்களாக இழுபறியில் இருந்து வரும் தொகைகள் வசூலாகும். இல்லத்தில் திருமணம், வம்சவிருத்தி போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள். உங்களின் வார்த்தைகள் அடுத்தவர்களுக்கு சிறந்த அறிவுரையாக அமையும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஆதாயம் தரும் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பெற்றோரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். தானாக விரும்பி நிறைய பொறுப்புகளை சுமந்துகொண்டிருப்பதால் ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் கூட மூளைக்கு வேலை அளித்துக் கொண்டிருப்பீர்கள். நற்சிந்தனைகளின் காரணமாக தொடர்வெற்றி என்பது சாத்தியமாகி வரும்.
மாணவர்கள்:
மாணவர்களைப் பொறுத்த வரை அயராது உழைக்க வேண்டியது அவசியமாகிறது. தேர்வு நேரத்தில் நிலவும் கிரஹங்களின் சஞ்சார நிலை எழுதும் திறனில் ஒரு சில பாதிப்புகளைத் தோற்றுவிக்கலாம். எழுதும் திறனில் இருந்து வரும் வேகம் குறையலாம் என்பதால் பாடங்களை அடிக்கடி எழுதிப் பார்ப்பது அவசியம். ஆயினும் குருவின் துணையிருப்பதால் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று விரும்பிய உயர்கல்வி பாடப்பிரிவில் இடம் கிடைக்கக் காண்பீர்கள். மருத்துவம், மொழிப்பாடங்கள், ஆசிரியர் பயிற்சி, உடற்கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பெண்கள் :
உங்களின் பொறுப்பான செயல்கள் குடும்பப் பெரியவர்களிடம் நற்பெயரைப் பெற்றுத் தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை. அண்டை அயலார் வீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு உங்களிடம் வந்து சேரலாம். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும். பலதரப்பட்ட நண்பர்களின் துணையுடன் சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.
தொழில் : உத்யோகம் :
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்பட்டு மேலதிகாரிகளின் எண்ணங்களை நிறைவேற்றி நற்பெயர் அடைவீர்கள். உடன் பணி புரிவோர் மற்றும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களின் செயல் வேகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வோர், ஆட்டோ மொபைல்ஸ் துறை, கட்டிடத் துறையில் கீழ்மட்ட தொழில் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் துறையினர் ஆகியோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள்.
பொதுவான நிலை :
பொதுவாக இவ்வருடத்தில் உங்களது தனித்துவம் வெளிப்படும். நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிக்க ஓய்வில்லாது செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். விகாரி ஆண்டு உங்களின் வாழ்வினில் மறக்கமுடியாத ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம் :
சித்திரை, வைகாசி என ஒவ்வொரு மாதப்பிறப்பு நாளிலும் சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள். அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்வதும் நன்மை தரும். ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். வறியவர்கள் வயிறார வாழ்த்தும்போது வாழ்வினில் உயர்வு காண்பீர்கள்.