கன்னி
கனிவுடன் பேசி கருத்தினைக் கவரும் கன்னி ராசி அன்பர்களே! விகாரி ஆண்டில் வரவு நிலை அதிகரிக்கக் காண்பீர்கள். பொருள் வரவு நன்றாக இருந்தாலும் அவசரத் தேவைக்கு எடுத்து உபயோகிக்க இயலாது. கண்ணுக்குத் தெரியாத அளவில் சேமிப்பாக உயருமே அன்றி அன்றாட செலவுகளுக்கு சற்று சிரமம் காண வேண்டியிருக்கும். வருடம் பிறக்கும் நேரத்தில் காணப்படும் ராசிநாதன் புதனின் நிலை உங்களைச் சிறப்பாக செயல்பட வைக்கும். இயற்கை குணமான தயக்கத்தினை விட்டொழித்து முக்கியமான காரியங்களில் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகள் என்பது சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. சந்தேகம் உண்டாகும்போது பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துச் செயல்படுவது நலம். அவசரப்பட்டு தரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் போகலாம் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையுணர்வினைத் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றுவீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தாயார் வழி உறவினர்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடலாம். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு இவ்வருடம் சாதகமான சூழலை உருவாக்கித் தரும். கடன் பிரச்னைகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வருவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனவருத்தத்தைத் தோற்றுவிக்கும். ஆன்மிகக் காரியங்கள், தர்ம காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
மாணவர்கள்:
தேர்வு நேரத்தில் ஞாபக மறதித் தொந்தரவால் சற்று அவதிப்பட நேரிடலாம். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுன்டன்ஸி, கணிதம், மொழிப்பிரிவு பாடங்கள் ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றை தைரியமுடன் எதிர்கொள்ள கூடுதல் பயிற்சி தேவை.
பெண்கள்:
உங்கள் பேச்சுக்கள் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்வதற்கும், அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு வீண்பழி சுமக்க வேண்டியதற்குமான வாய்ப்பு உள்ளது. அண்டை, அயலார் வீட்டுப் பெண்களுடன் ஒரு வரைமுறைக்குள் பழக வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்தையும் வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனையின் பேரிலும், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரிலும் செய்து வருவது நல்லது. குடும்பத்திற்காக உழைத்து வரும் நீங்கள் உங்கள் உடல்நிலையில் அவ்வப்போது கவனம் செலுத்தி வரவும்.
தொழில் : உத்யோகம் :
தொழில்முறையில் உங்களது முழுமுயற்சினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். ராகுவின் துணையால் அயல்நாட்டு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, இரும்பு, கம்பி, பழைய சாமான்கள் வியாபாரம், சிமெண்ட் போன்ற தொழில்களில் உள்ளோர் முன்னேற்றம் காண்பார்கள். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பார்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம்.
பொதுவான நிலை :
பொதுவாக இவ்வருடத்தில் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். செலவுகள் கூடியிருப்பதாக உணர்வீர்கள். கையில் ரொக்கமாக சேமித்து வைப்பதில் தடைகள் உண்டாகும். அதே நேரத்தில் அசையாச் சொத்துக்களாக சேமிப்பினை உருமாற்றம் செய்ய இயலும். நிதானமே பிரதானம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். வெற்றி தரும் வருடமாக அமையும்.
பரிகாரம் :
மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து துளசி தீர்த்தம் பருகி விரதத்தை பூர்த்தி செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதும் உங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். தினமும் காலையில் துளசிச் செடிக்கு நீருற்றி துளசிமாடத்தைச் சுற்றி வந்து வணங்குவதால் உங்கள் பிரச்னைகள் அத்தனையும் காணாமல் போகும்.