துலாம்
தியாக எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! விகாரி ஆண்டின் துவக்கம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையிலேயே அமைந்துள்ளது. மனதில் ஒருவித ஸ்திரத்தன்மை உருவாகும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் நிலவும் கிரஹ சஞ்சார நிலை நீங்கள் நினைக்கும் காரியங்களை எளிதில் நடத்தி முடிக்கும் சாதகமான அம்சத்தில் உள்ளது. தைரியமும், தன்னம்பிக்கையும் இரு கண்களாக இருந்து உங்கள் செயல்களில் வெற்றியினைப் பெற்றுத் தரும். குடியிருக்கும் வீட்டினில் மாறுதல் செய்ய முற்படுவீர்கள். சொந்த ஊரை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இவ்வருடத்தில் தங்கள் தாய்மண்ணைச் சென்றடைவார்கள். பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகு சம்பாத்யத்தினை இரட்டிப்பாக ஆக்கித் தருவார். அதே நேரத்தில் வரவிற்கேற்ற செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும்.
சொகுசான வாழ்விற்காக ஆடம்பர செலவுகளில் அதிக நாட்டம் செல்லும். குடும்பத்தில் சலசலப்பான நிலை தொடர்ந்து இருந்து வரும். அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாது தன் நிலையில் உறுதியாக இருந்து வருவீர்கள். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் தோன்றக்கூடும். ஒரு சில விஷயங்களில் தடைகள் உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்கி வெற்றி காண முயற்சிப்பீர்கள். உங்கள் ஆலோசனைகளை அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட அதனை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்து வருவீர்கள். அதிகாரமான வார்த்தைகள் உங்கள் கௌரவத்தினைக் காக்கும்.
கூட இருந்தே குழிபறிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு காரியம் ஆனவுடன் மறந்துபோவோரைப் பற்றி மன வருத்தம் கொள்ள நேரிடும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உறவினர்களால் உண்டாகும் வீண் வதந்திகள் குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகளைத் தோற்றுவிக்கலாம். வீண் வதந்திகளை நம்பாது எதையும் தீர விசாரித்து அறிந்த பின்னரே செயலில் இறங்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். நீங்கள் செய்ய நினைக்கும் சுபகாரியங்களை தள்ளிப்போடாது வருடத்தின் முற்பாதியிலேயே செய்து முடித்துக் கொள்வது நல்லது.
மாணவர்கள் :
மாணவர்கள் அடிக்கடி ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். ஞாபக மறதியை வெற்றி கொள்ள தீவிர பயிற்சி தேவை. பொதுத்தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பது நல்லது. தேர்வு நேரத்தில் மூன்றாம் இடத்திற்கு அதிபதியான குருபகவான் ஆட்சி பலம் பெறுவதால் எழுதும் வேகம் அதிகரிக்கும். ஆகவே பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்த்து பழகுவதால் தேர்வில் வேகமாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பள்ளிப்பாடம் தவிர இசை, நடனம், ஓவியம் போன்ற தனித்திறமைகள் பெற்றிருப்போர் தகுந்த அங்கீகாரத்தினை அடைவார்கள்.
பெண்கள் :
தாய்வழி உறவினர்களால் புதிய கலகங்கள் உருவாகக்கூடும். வாழ்க்கைத்துணைவருடன் இணைந்து செயல்பட்டு குடும்ப சலசலப்புகளைக் களைய முற்படுவீர்கள். அண்டை அயலார் மத்தியில் தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகள் உங்கள் மதிப்பினை உயர்த்தும். சிறுசேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினைப் பெறுவீர்கள்.
தொழில் : உத்யோகம் :
உத்யோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றத்தினை பெறுவார்கள். அலுவலகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். உயர்பதவியில் உள்ளோர் பணியாட்களுக்காகக் காத்திராமல் தாங்களே எல்லா வேலைகளையையும் செய்ய வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் தொழில்முறையில் ஸ்திரத்தன்மையைக் காண்பார்கள். தொழில்முறையில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன் ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விவசாயிகள், ஹோட்டல் அதிபர்கள், நகைக்கடை அதிபர்கள் நல்ல தனலாபத்தினை அடைவார்கள்.
பொதுவான நிலை :
பொதுவாக இவ்வருடத்தில் சரிசம பலன்களைக் காண்பீர்கள். அவ்வப்போது மனதிற்குள் தோன்றும் விரக்தியான மனநிலையைத் தவிர்த்து உற்சாகத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். முடிந்தவரை தனிமையைத் தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகம் கொண்ட உங்களுக்கு விகாரி வருடம் எல்லா வகையிலும் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
பரிகாரம் :
மாதந்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திர நாளன்று லட்சுமி நரசிம்மர் சந்நதியில் நீர்மோர், பானகம் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். நரசிம்மருக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதும் பலன் தரும். இக்கட்டான சூழலில் மனதினில் நரசிம்மரை தியானிக்க பிரச்னைகள் காணாமல் போகும்.