விருச்சிகம்
விரைந்து செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! ஏழரைச் சனியின் காலத்தில் தமிழ்ப்புத்தாண்டினை எதிர்கொள்ள உள்ளீர்கள். குரு பகவானின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் சிரமங்கள் சற்று குறையக் காண்பீர்கள். வருடப்பிறப்பின்போது ராசிநாதன் செவ்வாயின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவது உங்களுக்கு பலம் சேர்க்கும். சோதனைக்குரிய காலத்திலும் மிகவும் தைரியத்துடனும், மன உறுதியுடனும் செயல்பட்டு வருவீர்கள். அதே நேரத்தில் வீண் பிடிவாதத்திற்காகச் செயல்படாமல் விவேகத்துடனும் காரியமாற்றி வருவது நல்லது. அடுத்தவர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பாராமல் தன் நிலை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். பேசும் வார்த்தைகளில் சனியின் தாக்கத்தினால் கடுமையான கருத்துக்கள் வெளிப்படலாம். உங்களது கருத்துக்கள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்படக்கூடும்.
அதிகம் பேசாமல் அமைதி காத்து வருவது நல்லது. பொருளாதார சூழ்நிலையில் ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வருவீர்கள். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கையிருப்பு கரையும் வாய்ப்பும் உண்டு. குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு தோன்றி மறையும். உங்களை சிலர் தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களால் ஆதாயம் கண்டவர்கள், நீங்கள் செய்த உதவியை மறந்து போவார்கள். துரோகிகளை எண்ணி மன வருத்தம் கொள்ள நேரிடும். முன்பின் தெரியாத நபர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டியது அவசியம். உடன்பிறந்தோரால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாவீர்கள். உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் உருவாகலாம்.
பண விவகாரங்களில் நிதானித்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகிறது. அடுத்தவர்களுக்காக கடன் வாங்குதல், ஜாமீன் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் நிச்சயமாக ஈடுபடக்கூடாது. வீண் வம்பு வழக்குகள் தோன்றும் நேரம் என்பதால் அடுத்தவர்களின் விவகாரங்களில் முற்றிலுமாகத் தலையிடாமல் ஒதுங்கி இருத்தல் நன்மை தரும். உங்களுடைய தலையீட்டினால் பிரச்னைகள் அதிகமாகுமே தவிர குறையாது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையையும், மன நிலையையும் அதிக அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளீர்கள். வேலைப் பளுவோடு குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கும். சோதனைகளை எதிர்கொள்வதன் மூலம் உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் வருடமாக இந்த தமிழ்புத்தாண்டு விளங்கும்.
மாணவர்கள் :
மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேர்வு நேரத்தில் நிலவும் கிரஹ நிலை உங்கள் எழுத்தின் வேகத்தினைக் குறைக்கக்கூடும். ஒரே கேள்விக்கு இருவேறு பதில்களை நினைத்து குழம்பும் சூழலும் உருவாகலாம். இதனைத் தவிர்க்க தேர்விற்கு முன்னால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதி சரிபார்ப்பது நல்லது. முடிந்த வரை தனிமையைத் தவிர்த்து நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த அனைத்துத் துறை மாணவர்களும் ஏற்றம் காண்பார்கள்.
பெண்கள்:
பேசும் வார்த்தைகளால் வீண் வம்பு விவகாரங்கள் உருவாகலாம். நீங்கள் பேச நினைப்பவற்றை வாழ்க்கைத்துணைவரின் வாயிலாக வெளிப்படுத்தி காரியத்தினை சாதித்துக் கொள்ளுங்கள். பிரயாணத்தின் போதும், பொதுநிகழ்ச்சிகளின் போதும் அந்நியப் பெண்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வற்ற சூழலை உணர்வீர்கள்.
தொழில் : உத்யோகம் :
இவ்வருடத்தில் தொழில் ரீதியாக பெருத்த முன்னேற்றத்தைக் காண இயலாது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் மட்டுமல்லாது உடன் பணிபுரிவோருடனும் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரலாம். வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட், கமிஷன் ஏஜென்சீஸ் போன்ற தொழிலில் உள்ளவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. தொழிற்சாலைப் பணியாளர்கள் இயந்திரங்களில் பணியாற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பொதுவான நிலை:
பொதுவாக இவ்வருடம் உங்களுக்கு சற்றே சோதனைக் காலமாக அமையலாம். பிரச்னைகளைக் கண்டு மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
பரிகாரம்:
மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை நாட்களில் விரதம் இருந்து சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வருவது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் மாலை வேளையில் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். மனம் சஞ்சலப்படும்போது, முருகப்பெருமானை மனதில் தியானித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கந்தனை வணங்கிவர உங்கள் கவலைகள் காணாமல் போகும்.