1.1.2026 முதல் 31.12.2026 வரை
(அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம்)
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்ப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.ஜென்ம ராகுவால் ஏற்படக்கூடிய தீமை குறையும். குரு பகவான் 1-6-2026 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் எதிரிகளால் பிரச்னைகள் உருவாகும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். சனி பகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு இரண்டில் ஏழரைச் சனியில் கடைசி பகுதியான வாக்குச் சனியாக சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ராகு கேது பகவான் முறையே 5-12-2026 வரை உங்கள் ராசிக்கு 1, 7ல் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனைகள் வந்து நீங்கும். எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும்.எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். யோகா மற்றும் தியானம் நன்மை தரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல மாற்றம் முன்னேற்றம் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்களுக்குகல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள்.கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


