1.1.2026 முதல் 31.12.2026 வரை
(மிருகசீரிடம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)
எதிலும் நன்றாக சிந்தித்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே,குரு பகவான் 1-6-2026 வரை உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் தேவையற்ற மன குழப்பம், எதிர்காலம் பற்றிய பயம், எதிர்மறை சிந்தனை, மன அழுத்தம், கோபம் உண்டாகும். 1-6-2026 க்கு பிறகு குரு பகவான் 2ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும்.வருடம் முழுவதும் சனி பகவான் 10ல் சஞ்சரிப்பதால் எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது. எவ்வளவு முயற்சித்தாலும் அடுத்த நிலைக்கு செல்வது சிறிது கடினமாக இருக்கும். விடாமுயற்சி ஒன்றிய மிகப்பெரிய வெற்றி தரும் என்பதை உணர்த்தும் காலம். எதிலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களுடைய தனித்திறமையை உணர்ந்து கொள்வீர்கள். 5-12-2026 ராகு கேது பகவான் முறையே 9,3 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும். நீண்ட நாள் ஆசைகள் லட்சியங்கள் நிறைவேறும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். வியாபாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடையும். தொழில் மற்றும் உத்யோகத்தில் நிலையற்ற தன்மை உருவாகும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: கொல்லிமலையில் உள்ள மாசி பெரிய சாமியை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


