search-icon-img
featured-img

கடகம்

Published :

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில், செவ்வாயும், அஷ்டமத்தில் (8) ராகு - சனி சேர்க்கையும் அமையும் நிலையில், புத்தாண்டு பிறக்கிறது! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். மே மாதம் 10-ம் தேதி வரை, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், விரய ஸ்தானத்திற்கு மாறுவதால், குடும்பச் செலவுகள் அதிகமாகும். பெரும்பான்மையான செலவுகள் சுப காரியங்களுக்காகவே ஏற்படுவதால், மனதில் திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும். திட்டமிட்டு செலவு செய்யாவிடில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். ராகு - சனி சேர்க்கையினால், அதிக அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள் உடலில் அசதியை ஏற்படுத்தும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு - சனி இணைவதால், வாகனங்களை ஓட்டும்போதும், இரவுநேரப் பயணங்களின்போதும் எச்சரிக்கையாக இருத்தல் மிகவும் அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மே 11ம் தேதி குரு பகவான், விரய ஸ்தானத்திற்கு மாறிவிடுவதால், எதிர்பாராத செலவுகளில், பணம் செலவழியும். அஜாக்கிரதையினால், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக நேரிடும். எச்சரிக்கை அவசியம். தரக்குறைவான உணவகங்களிலும், நேரங்கெட்ட காலங்களிலும் சிற்றுண்டிகள் உண்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: அஷ்டம ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவானுடன், ராகு சேர்வதால், உங்கள் அன்றாடப் பணிகளில் இந்த ஆண்டு முழுவதும் கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு மன நிம்மதியைப் பாதிக்கும். பொறுமையாக இருத்தல் அவசியம். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்தலும் முக்கியம்! எத்தகைய சூழ்நிலையிலும், சற்று பொறுமையுடனும், வளைந்துகொடுத்தும் நடந்துகொள்வது, இந்தப் புத்தாண்டு முழுவதிலும் அவசியம் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், மே 11-ம் தேதியிலிருந்து, ராகு, சனி பகவான் ஆகியோருக்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், அலுவலகச் சூழ்நிலையில் நல்ல மாறுதலையும் காணலாம். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமெனும் ஆர்வம் மிகுந்த அன்பர்களுக்கு, ராகுவும், சனியும் ஆதரவாக நிலைகொண்டுள்ளனர்.

தொழில், வியாபாரம்: ஜீவன ஸ்தானத்தில், ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கும் சனி பகவானுடன், ராகு சேர்ந்திருப்பதால், இந்தப் புத்தாண்டில் தொழில் அபிவிருத்தி சிறப்பாக இருக்கும். கொடுப்பதில் ராகுவிற்கு இணை அவர் மட்டுமே!! -என்பதை "பூர்வ பராசர்யம்" -எனும் மிகப் புராதனமான ஜோதிட நூல் விளக்கியுள்ளது. இன்றைய ஜோதிட சாஸ்திரத்திற்கு ஆதார நூலாகப் பூஜிக்கப்படும் இந்நூல் பராசர மகரிஷி இயற்றியதாகக் கருதப்படுகிறது. புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, அந்நிய நாடுகளில் தற்போதுள்ள சூழ்நிலையில், அனுகூலமான மாறுதல் ஏற்படும். புதிய தொடர்புகள் லாபகரமாக இருக்கும். பலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்று-வரும் வாய்ப்புகளும் கிட்டும்.

கலைத்துறையினர்: அக்டோபர் 10-தேதியிலிருந்து, நவம்பர் 2-ந் தேதி வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! சற்று கடினமான பொருளாதார நிலையை நீங்கள் சமாளிக்க நேரிடும். ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அக்டோபர் 9-ம் தேதி வரை வருமானம் ஒரே சீராக இருக்கும். திரைப்படத் துறைத் தயாரிப்பாளர்கள், புதிய படங்களில் துணிந்து முதலீடு செய்யலாம். திரையரங்குகளுக்கும், நடிகை - நடிகர்களுக்கும் லாபகரமான ஆண்டாகும் இது என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. திரையரங்குகள், சொந்தக்காரர்களுக்கும், நல்ல வருமானம் கிடைக்கும். இப்புத்தாண்டில் எடுக்கப்படும் சில திரைப் படங்கள் உலகப் புகழ்பெறும்.

அரசியல் துறையினர்: புத்தாண்டில், முதல் 7 மாதங்கள் அரசியல் துறையினருக்கு, ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய காலகட்டமாகும்! கட்சியில் ஆர்வம் குறையும். மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படுவதால், அவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கும் மனப்பான்மை உருவாகும். இருப்பினும், தேச பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு அதிகரிக்கும். நாட்டின் நிலைமையை சரிசெய்ய ஆர்வம் மேலிடும். மேலிடத் தலைவர்களின் பரிபூரண ஆதரவு சோர்வை அகற்றும். அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று வர நேரிடும். ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியிலிருந்து, அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் சுப பலம் பெறுவதால், கட்சியில் மீண்டும் சமரசம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான போக்கு தென்படும். ெசல்வாக்கு மிகுந்த ஒருவருடைய தொடர்பு உங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் பயன்படும்.

மாணவ - மாணவியர்: ஏப்ரல் 11-ம் தேதி வரை கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். அதன் பிறகே, சுப பலம் பெறுகின்றனர். முதல் 6 மாதங்கள், ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மிகவும் பாடுபட்டுப் படிக்க வேண்டியிருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதும் சற்று கடினமே! ஜூலை 1-ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி வரை தோஷம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து, அடியோடு நீங்கிவிடும். ஆகஸ்ட் 4-ம் தேதியிலிருந்து, மனதில் தெளிவு பிறக்கும். பாடங்களில் ஆர்வம் மேலிடும். சகவாச தோஷங்கள் இருப்பின், அவை படிப்படியாக நீங்கும். மனம் மீண்டும் படிப்பில் ஈடுபடும். பிற நாடுகளில், விசேஷ உயர்கல்வி படித்துவரும் மாணவ - மாணவியருக்கும் இவை பொருந்தும்.

விவசாயத் துறையினர்: ஜனவரியிலிருந்து, ஜூன் 7-ம் தேதி வரை பூமிகாரகரான செவ்வாய், பலம் குறைந்து இருக்கிறார். அதன் விளைவாக, வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். தேவைக்கு அதிகமான நீர் வரத்தினால், பயிர்கள் பாதிக்கப்படக்கூடும். சரியான பருவத்தில் மழை பெய்யாததால், கால்நடைகள் பாதிக்கப்படும். பழைய கடன்கள் தொடர்ந்து கவலையளிக்கும். ஜூன் மாதம் 8-ம் தேதியிலிருந்து, படிப்படியாக நிலைமையில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். நவீன விவசாய வசதிகள் கிடைக்கும்.

பெண்மணிகள்: மே 11-ம் தேதியிலிருந்து, குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறிவிடுகிறார்! இருப்பினும், சுக்கிரனின் சஞ்சார நிலை அதனை ஈடுசெய்துவிடுகிறது!! குடும்பக் கவலைகள் மன நிம்மதியைப் பாதித்தாலும், நெருங்கிய உறவினர்களிடையே நீடிக்கும் பரஸ்பர ஒற்றுமை, மனதிற்கு ஆறுதலையளிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான், ராகுவின் சேர்க்கையும், குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சாரமும் ஏற்படுவதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகள், மன அமைதியைப் பாதிக்கும். அந்நிய நாடுகளில் பணியாற்றிவரும் மகளிருக்கு, எதிர்பாராத பிரச்னைகள் உருவாகும்.

அறிவுரை: கிரக நிலைகளின்படி, இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நன்மைகளும், பிரச்னைகளும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும் என்பதால், இந்த ராசியில் பிறந்த அனைவரும், வரும் ஒருவருட காலத்தில், பிரச்னை ஏற்படும்போது, மனதைரியத்தை இழந்துவிடாமல், சமாளிக்க வேண்டும்.

பரிகாரம்: தினமும் அருகிலுள்ள திருக்கோயி்ல் ஒன்றிற்குத் தவறாமல் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்துவிட்டு வர வேண்டும்.