இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம்

Published: 31 Dec 2024

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: ஜென்ம ராசியில் சனிபகவான் நிலைகொண்டிருக்கும் இத்தருணத்தில், புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 26-ந் தேதி சனி பகவானுடன், ராகுவும் சேர்ந்துகொள்கிறார். அர்த்தாஷ்டக ராசியில், வக்கிர கதியில் குரு பகவான் வலம் வருகிறார். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக அலைச்சலையும், வெளியூர்ப் பயணங்களையும் கடின உழைப்பையும் தவிர்ப்பது நல்லது. சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகக் கோபம் வரும்! முன்கோபத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எத்தகைய தருணங்களில் நாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, "ஜோதிடம்" எனும் தன்னிகரற்ற வானியல் கலை! மே 11-ம் தேதி குரு பகவான், மிதுனத்திற்கு மாறியவுடன், உங்கள் ஜென்ம ராசிக்கு அவரது சுபப் பார்வை கிடைக்கிறது. "குரு பார்க்கையில், கோடி தோஷம் விலகும்..!" என அறுதியிட்டுக் கூறுகின்றன மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள். மே

11-ம் தேதியிலிருந்து, குடும்பத்தில் ஏற்பட்டுவந்த பல சிரமங்கள், பிரச்னைகள் ஆகியவை நீங்க ஆரம்பிக்கும். ஜூலை மாதம் 7-ம் தேதியிலிருந்து, குடும்பத்தில் சுபீட்சம் பெருகும். பண வசதி உயரும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். இத்தகைய நன்மைகள், இப்புத்தாண்டு முடியும் வரை நீடிக்கின்றன.

உத்தியோகம்: ஜென்ம ராசியில் சனி மற்றும் ராகு சேர்வதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், தற்போது பார்த்துவரும் வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. எவ்வளவுதான் பாடுபட்டும், உண்மையாக உழைத்தாலும், நிர்வாகத்தினரைத் திருப்திபடுத்த இயலாது! வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கும் அன்பர்கள், இடைத்தரகர்களினால் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதை கிரக நிைலகள் எடுத்துக்காட்டுகின்றன. விழிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம். மே 11-ம் தேதியிலிருந்து, ஜென்ம ராசிக்கு குரு பார்வை ஏற்படுவதால், அலுவலகச் சூழ்நிலையில் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும். வருடம் முடியும் வரையில் இந்த முன்னேற்றம் நீடிக்கிறது. தற்காலிகப் பணியாளர்கள், தங்கள் பதவிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைகள் அனைத்தும், சனிபகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கோள்சார விதிகளின்படி, ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும்போது, சிரமங்களே அதிகமாக இருக்கும். இருப்பினும், கும்ப ராசி, சனி பகவானின் ஆட்சிவீடாக இருப்பதால், பிரச்னைகள் குறைவாகவே இருக்கும் எனக் கூறுகின்றன, பிரபல ஜோதிட கிரந்தங்களாகிய "பராசர ஸம்ஹிதை" மற்றும் "ஸாராவளி"யும். வருமானமும், லாபமும் ஒரே சீராக இந்த ஆண்டு முழுவதும் நீடிக்கும். ஆயினும், புத்தாண்டு பிறந்ததிலிருந்து ஏப்ரல் 25-ம் தேதி வரைகட்டுக்கடங்காத செலவுகளைச் சமாளிக்க நேரிடும். சில தருணங்களில், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். குடும்பத்திலும், பரஸ்பர ஒற்றுமைக் குறைவினால், மன நிம்மதி பாதிக்கப்படும். ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து, சனி பகவானுடன் ராகு இணைவதால், மருத்துவச் செலவுகள் ஏற்படும். இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுதல், கண்ட இடங்களிலும் உணவருந்துதல், பிறருடன் வாக்குவாதம் செய்வது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை செய்கின்றது, சனி, ராகு சேர்க்கை. இத்தகைய கிரக நிலை ஆண்டு முழுவதும் நீடிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

கலைத் துறையினர்: இப்புத்தாண்டு முழுவதும், ஜீவன காரகரான சனி பகவான், அனுகூலமாக இல்லை. இருப்பினும், கோள் சாரத்தில் சுக்கிரன் அனுகூலமாக இருக்கும்போதெல்லாம், வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 7-ம் தேதி வரை வருமானம் ஒரே சீராக இருக்கும். வரவும் செலவும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து, நவம்பர் 7-ம் தேதி வரை வருமானம் குறையும். கூடியவரையில், புதிய கடன்களைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். புத்தாண்டு முடியும் வரை, சிக்கனமாக இருத்தல் நன்மை செய்யும்.

அரசியல் துறையினர்: புத்தாண்டு முதல் நான்கு மாதங்கள் உங்கள் அரசியல் நடவடிக்கைகளை அளவோடு வைத்துக் கொள்வது, பிரச்னைகளில் சிக்கக் கொள்ளாமல் இருக்க, உதவும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு குறையும். கட்சியிலும், மறைமுக எதிர்ப்புகள் உருவாகக் கூடும் என்பதை கிரக நிைலகள் குறிப்பிடுகின்றன. உங்கள் பேச்சில், எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம். உங்கள் மீது மேலிடத் தலைவர்களுக்கு அவ நம்பிக்கை பிறந்துள்ளது. தசா, புக்திகள் அனுகூலமில்லாமல் இருப்பின், கட்சி மாறுதலுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. கூடிய வரையில் இந்த ஆண்டு முழுவதும் மௌனமாகவும், கட்சிப் பணிகளிலிருந்து சிறிது விலகியிருத்தலும் நன்மை பயக்கும்.

மாணவ - மாணவியர்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வரை வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் உதவிகரமாக சஞ்சரிக்கின்றனர். படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஒழுக்கமுள்ள சக மாணவர்களின் சேர்க்ைக ஏற்படும். பிரபல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில ஆர்வமிருப்பின், அனைத்து உதவிகளும் கிட்டும். ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதியிலிருந்து, வருடம் முடியும் வரை, படிப்பில் சிறு பின்னடைவு ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த தோஷமும்கூட, பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும். ஆதலால், கவலைப்பட வேண்டாம்.

விவசாயத் துறையினர்: புத்தாண்டின் முதல் நான்கு மாதங்கள் பூமி காரகரும், விவசாயத்திற்கு தொடர்புள்ள மற்ற கிரகங்களும், அனுகூலமாக இல்லை. வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். உழைக்கும் அளவிற்கு விளைச்சல் இராது. கால்நடைகளின் பராமரிப்பில், பணம் விரயமாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையினால், விளைச்சல் பாதிக்கப்படும். மே மாதம் 10-ம் தேதியிலிருந்து நிலைமை மாறும். படிப்படியாக பயிர்கள் செழித்து வளர ஆரம்பிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெற வழி பிறக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். புத்தாண்டு முடியும் வரையில் இந்த முன்னேற்றம் நீடிக்கும்.

பெண்மணிகள்: மே மாதம் 10-ம் தேதி வரை அதிக முன்னேற்றத்தைக் கூற இயலவில்லை. மே 11-ம் தேதியிலிருந்து, படிப்படியாக பல நன்மைகள் உங்களுக்காகக் காத்துள்ளன. வேலையில்லாமல் கவலைப்படும் கன்னியருக்கு, நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். மே 11-ம் தேதி குரு பகவான், சுப பலம் பெறுவதும், சுக்கிரன் அனுகூலமான நிலையில் வலம் வருவதும், சிறந்த யோக பலன்களைச் சற்று தாராளமாகவே வாரி வழங்கக்கூடிய கிரக சஞ்சாரமாகும். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நிகழும். விவாகமான பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு ஏற்ற காலகட்டமிது.

அறிவுரை: ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் வீண் அலைச்சல், ெவளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

பரிகாரம்: திருவேங்கடத்து இன்னமுதனின் தரிசனம் ஜென்ம ராசி சனி, ராகுவினால் ஏற்படும் தோஷத்தைப் போக்க வல்லது.

பிறந்தநாள் பலன்கள்