(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: புத்தாண்டு பிறக்கும்போது, சனி பகவான் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றனர்! ஏப்ரல் 26-ந் தேதி ராகுவும், அனுகூலமாக மாறுகிறார். குரு பகவான் சாதகமாக இல்லை!! போதிய அளவிற்கு பணவசதி இருப்பதை சுக்கிரன் பார்த்துக்கொள்வார். குரு அஷ்டம ராசியில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டு, சிகிச்சை மூலம் சரியாகும். பணம் மற்றும் பொருட்கள் களவுபோக நேரிடும். ஆயுஷ்காரகரான சனி பகவான், சாதகமாக இருப்பதால், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வருமானத்திற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சுபச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளைக்கு வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னைகள் ஏற்பட்்டுள்ளதாக, செய்தி கிடைத்து, மனதில் நிம்மதி குறையும். மே 11-ம் தேதி குரு பகவான், மிதுனத்திற்கு மாறுவதால், குடும்பச் சூழ்நிலையில் நல்ல மாறுதல் ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். மே 11-ந் தேதியிலிருந்து, ஆண்டு முழுவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன அமைதியும் நிலவும்.
உத்தியோகம்: உத்தியோகத்திற்கு அதிகாரம் கொண்டுள்ள சனி பகவான், இந்த ஆண்டு முழுவதும் அனுகூலமாக நிலைகொண்டுள்ளார். ஏப்ரல் 26-ந் தேதியிலிருந்து, ராகுவும் சனி பகவானுடன் இணைவதால், ஊதிய உயர்வு, பதவியுயர்வு, விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஆகிய நன்மைகள் கிட்டும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றியடையும். அலுவலகப் பணிகள் காரணமாக, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் சிலருக்குக் கிட்டும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏற்கெனவேயே வெளிநாடுகளில் பணியாற்றிவரும் தனுர் ராசி அன்பர்களுக்கு, சலுகைகள் கூடும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், நிறுவன மாற்றமும், அதிக ஊதியமும் கிட்டும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையைத் தீர்மானிப்பதும், சனிபகவானும், ராகுவும்தான் எனக் கூறுகிறது, "பிருஹத் ஜாதகம்" எனும் பிரசித்திப் பெற்ற ஜோதிடக் கிரந்தம்! இந்தப் புகழ்வாய்ந்த கிரந்தத்தின் ஆசிரியரும், வராகமிகிரர்தான்!! இந்த ஆண்டுப் பூராவும், சனியும் ராகுவும் சிறந்த சுப பலம் பெற்று விளங்குவதுடன், தனுர் ராசிக்கு ஜீவன ஸ்தானமாகிய கன்னி ராசிக்கு மே மாதம் 10-ம் தேதி வரை குரு பகவானின் பார்வையும் கிடைக்கிறது. குரு பார்வை நீங்கிய பின்பும்கூட, ஜீவன ஸ்தானம் தோஷமின்றி இருப்பதால், வர்த்தகத் துறையினருக்கு லாபகரமான ஆண்டு இது என்பது உறுதியாகத் தெரிகிறது. நிதி நிறுவனங்களின் உதவியும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்பதையும் சனி, ராகு மற்றும் சுக்கிரன் ஆகியோரின் சஞ்சார நிலை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
கலைத்துறையினர்: ஜனவரி 1-ம் தேதி முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை குறைந்த வருமானத்தில், குடும்பத்தைச் சமாளிக்க நேரிடும். வேலையாட்களினால், பிரச்னைகள் ஏற்படும். பிரபல நடிகர்கள், நடிகைகளுக்குக்கூட எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் இராது. நிச்சயம் தங்களுக்குத்தான் என உறுதியுடன் இருந்த வாய்ப்புகள்கூட கைநழுவிப் போகும். ஏப்ரல் 26-ந் தேதியிலிருந்து, நவம்பர் 10-ம் தேதிவரை இந்த மந்த நிலையில் நல்ல மாறுதல் ஏற்படும். வருமானமும் படிப்படியாக உயரும். நவம்பர் 11-ம் தேதியிலிருந்து, ஆண்டு முடியும் வரை மீண்டும் வாய்ப்புகளும் வருமானமும் குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். இப்போது தயாரிப்பாளர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
அரசியல் துறையினர்: ஜனவரி 1-லிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை கட்சியில் ஆதரவும், ெசல்வாக்கும் உயரும். ஏப்ரல் 26-ம் தேதி ராகு, சனியுடன் இணைவதால், கட்சிமாற்றமும், அதற்கு "வெகுமதியாக", அரசு பதவியொன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏப்ரல் 27-ம் தேதியிலிருந்து, செல்வாக்கு அதிகரித்தாலும், மனதில் நிம்மதி இராது. டிசம்பர் மாதம் மீண்டும் கட்சி மாற்றம் ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் உறுதியாகவும், தெளிவாகவும் உணர்த்துகின்றன.
மாணவ - மாணவியர்: ஜனவரி 1-ம் தேதி முதல், ஏப்ரல் 7-ம் தேதி வரை வித்யா ஸ்தானத்திற்கு தோஷம் ஏற்படுகிறது! சற்று பாடுபட்டு, படிக்க வேண்டியிருக்கும்!! பிற மாணவ - மாணவியர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது அவசியம். கூடியவரையில், "தானுண்டு; தங்கள் படிப்பு உண்டு!" -என்று இருப்பது, நல்லது என்பதை கிரக நிலைகள் துல்லிய மாக எடுத்துக்காட்டுகின்றன. ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து, அனைத்திலும் வெற்றிதான்! நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்! !
விவசாயத் துறையினர்: ஆண்டின் முதல் தேதியிலிருந்து, ஜூன் 8-ம் தேதிவரை கிரக நிலைகள் சுப பலம் பெறவில்லை! வயல் பணிகளில் கடினமாக உழைத்தும்கூட, விளைச்சல் சற்று குறைவாகவே இருக்கும். காலம் மாறிப் பெய்யும் மழையினால், பயிர்கள் சேதமடையும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். ஆகஸ்ட் மாதத்தில், ஆடுகளும், மாடுகளும், நோய்வாய்ப்படக்கூடும். அதனால், மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஜூலை மாதம் 9-ம் தேதியிலிருந்து, ஆண்டு முடியும் வரை சிரமங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறைவதை அனுபவத்தில் காணலாம்.
பெண்மணிகள்: இப்புத்தாண்டில், மே மாதம் 10-ம் தேதி வரையில் குரு பகவான் பாதகமாக சஞ்சரிப்பதால், விவாகமாகியுள்ள பெண்மணிகளின் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, குடும்பத்தில் ஒற்றுமை குறையும். கணவர், மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். சுக்கிரன் சுப பலம் பெற்றுள்ளதால், பலருக்கு, புத்திர பாக்கியம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகிறது. வேலை பார்த்துவரும் பெண் மணிகளுக்கு, ஆண்டின் முதல் நான்கு வாரங்கள் கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளதால், மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். கற்பனையான கவலைகள், அவசியமற்ற பிரயாணங்கள்,பிறருக்குக் கடன் கொடுத்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: மாதந்தோறும், அஷ்டமி திதியன்று, துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து தரிசித்து வந்தால் போதும். இது அவசியமும்கூட!