(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: சூரியன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சுப பலம் பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது! சுக்கிரன், துலாம் ராசிக்கு அதிபதியாவார்!! ஏப்ரல் 26-ம் தேதி, ராகு பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்திற்கும் கேது லாப ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். புத்தாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குக் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், குணம் கிட்டும். நெருங்கிய உறவினர்களிடையே கருத்துவேற்றுமை ஏற்படுவதால், ஒற்றுமை குறையும். மனதில் "டென்ஷன்" ஏற்படும். அஷ்டம ராசியில், குரு இருப்பதால், அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட்டு, மனதில் கவலையை அளிக்கும். பழைய கடன்கள் தொல்லை தரும். விவாக முயற்சிகளில் கவலையும், குழப்பமும் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பகையுணர்ச்சி மேலிடும். ஏப்ரல் 26-ம் தேதி ராகு, கும்ப ராசிக்கு மாறுவதால், குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகிய விஷயங்களில் கவனமாக இருத்தல் அவசியம். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். மே மாதம் 11-ம் தேதியிலிருந்து, படிப்படியாக பிரச்னைகள் குறையும். இந்த முன்னேற்றம் ஆண்டு முடியும் வரை நீடிக்கும்.
உத்தியோகம்: உத்தியோகத்திற்கு அதிபதியான சனி பகவான், இந்த ஆண்டு முழுவதும் அனுகூலமாக இல்லை! ஏப்ரல் 26-ம் தேதி ராகுவும், சனியுடன் இணைவதால், வேலைபார்க்கும் இடத்தில், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, கவலையை அளிக்கும். நியாயமாக, உங்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வு, எவ்விதக் காரணமுமில்லாமல், மறுக்கப்படும். ஒருசிலருக்கு, மனத்திற்குப் பிடிக்காத இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. எத்தகைய நிலையிலும், உணர்ச்சிவசப்படாமல், இருப்பது அவசியம். தவறான முடிவுகள், உங்கள் எதிர்காலத்தைப் பாதித்துவிடும்.
தொழில், வியாபாரம்: உற்பத்தியை, சந்தை நிலவரத்திற்கேற்ப, அளவோடு வைத்துக் கொள்வது நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். இந்தாண்டு முழுவதுமே, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக அமையவில்லை! ஆதலால், புதிய முதலீடுகளையும், முயற்சிகளையும், அபிவிருத்தித் திட்டங்களையும் ஒத்திப்போடுதல் மிகவும் அவசியமாகும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறைவதால், நிறுவன நிர்வாகத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, வெளிநாடுகளின் அரசியல் மற்றும் ராணுவ சூழ்நிலை, பிரச்னைகளை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து, நெருக்கடி நிலை தளரும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கலைத்துறையினர்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஏப்ரல் மாதம் 25-ம் தேதி வரை ஓரளவு முன்னேற்றத்தைக் காணலாம். ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து, நவம்பர் 2-ம் தேதி வரை வருமானமும், வாய்ப்்புகளும் குறைவாகவே இருப்பதால், செலவுகளைக் குறைத்துக்கொண்டு, சிக்கனமாக இருத்தல் அவசியமாகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய படங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
அரசியல் துறையினர்: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, மே 10-ம் தேதி வரை அரசியலுக்கு அதிகாரம் படைத்துள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! கட்சியில் ஆதரவு குறையும். எதிர்ப்பு அதிகரிக்கும். மேல்மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணி்க்கத் தொடங்குவார்கள். உங்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதில் ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், சட்டரீதியான நடவடிக்கைகளில் அகப்பட்டுக்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
மாணவ - மாணவியர்: துலாம் ராசியில் பிறந்துள்ள, மாணவ - மாணவியருக்கு, புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, மே 10-ம் தேதி வரையிலும், மீண்டும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதியிலிருந்து நவம்பர் 19-ம் தேதிவரையிலும், கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளன. இக்காலகட்ட நிலையில் படிப்பில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் வெற்றிக் கனியை எளிதில் எட்டிப்பிடித்துவிடுவீர்கள்! நவம்பர் 20-ம் தேதியிலிருந்து, டிசம்பர் 31-ம் தேதி வரை, சுமாரான காலமாகும் என்பதை கிரகங்கள் குறிப்பிடுகின்றன. வெளிநாடுகளில் உயர் கல்வி பயின்றுவரும் மாணவ - மாணவியருக்கு, அவரவர்களின் "பிராஜெக்ட்களை" குறித்த நேரத்தில் முடிப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன.
விவசாயத் துறையினர்: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, ஜனவரி 17-ம் தேதி வரை பூமி காரகர் அனுகூலமாக சஞ்சரிப்பதாலும், மற்ற கிரக நிலைகளும் அனுகூலமாக உள்ளதாலும், விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்களின் தொல்லைகள் நீடித்தாலும், உங்கள் வயல் பணிகளை அவை பாதிக்காது. ஜனவரி 18-ம் தேதியிலிருந்து, வயலில் உழைப்பு சற்று கடினமாக இருக்கும். திடீரென்று ஆடு, மாடுகள் நோய்வாய்ப்படுவதால், அவற்றின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும். இந்நிலை, மே 13-ம் தேதியிலிருந்து, மீண்டும் வயல் பணிகளில் உற்சாகம் மேலிடும். விளைச்சலும், வருமானமும் உயரும். இந்நிலை புத்தாண்டின் கடைசி வரையில் நீடிக்கிறது.
பெண்மணிகள்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்தே சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாகவே இருந்து, தக்க தருணங்களில் கைகொடுத்து உதவுகிறார். இருப்பினும், மே மாதம் 10-ம் தேதி வரை அஷ்டம ராசியில் நிலைகொண்டிருக்கும் குருவின் நிலையினால், குடும்பக் கவலைகள் மனதை அரிக்கும். மே 11-ம் தேதியிலிருந்து, பிரச்னைகள் படிப்படியாக விலகும். மனதில் மீண்டும் மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்படும்.
அறிவுரை: புத்தாண்டின் முதல் நான்கு மாதங்கள் வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லாததால், சிக்கனமாக செலவு செய்யவும். உடல் நலனில் கவனமாக இருங்கள். எவரிடமும் கடன் வாங்க வேண்டாம். திரும்ப அதனை அடைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் ஜோதிட விதிகளின்படி..!
பரிகாரம்: பாடல் பெற்ற திருத்தலம் ஒன்றிற்குச் சென்று, ஐந்து மண் அகல்களில் நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும். மிகப் புராதன ஜோதிட நூல்களில் இந்தப் பரிகாரம் கூறப்பட்டுள்ளது. தீபத்தின் சக்தி மகத்தானது (ஆதாரம் : "பரிகார ரத்னம்" எனும் மிகப் புராதன சாந்தி நூல்). இயலாதவர்கள் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ இதே பரிகாரத்தைச் செய்தாலும், மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள். லிகித ஜெபமாகப் போற்றிப் புகழப்படும், எழுதுகோலைக் கொண்டு, புத்தகத்தில், பக்தி சிரத்தையுடன் "ராமஜெயம்" எழுதி வந்தாலும், அதே புண்ணியங்களைப் பெற்றுத் தரும்.