(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை, வருமானத்தைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். 26-ம் தேதி ராகு, பாக்கிய ஸ்தானத்திலும், கேது திருதீய ஸ்தானத்திற்கும் (3) மாறுகின்றனர். இது மிகவும் நல்ல திருப்பத்தை அளிக்கும். வருமானம் படிப்படியாக உயரும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். மே மாதம் 11-ம் தேதி ஜென்ம ராசிக்கு குரு பகவான் மாறுவதால், அன்றைய தினத்திலிருந்தே அதிக அலைச்சலும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். வருட ஆரம்பத்திலிருந்தே சிறிது திட்டமிட்டு செலவு செய்தால் நல்லது. மேலும், சில விஷயங்களுக்குக்கூட அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். மே 10-ம் தேதி வரை திருமண முயற்சிகள் கைகூடும். அதன் பிறகு, நவம்பர் மாதம் 9-ம் தேதி வரை விவாகத்திற்கான முயற்சிகளில் குழப்பமே மேலிடும். இக்கால கட்டத்தில், குடும்பச் சூழ்நிலை கவலையை ஏற்படுத்தும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும்.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் சனி மற்றும் ராகு, இணைந்திருப்பதால், அலுவலகச் சூழ்நிலை உற்சாகத்தை அளிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வையும், பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு சென்று பணியாற்ற விருப்பமிருப்பின், மே 10-ந் தேதி வரை முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். அதன் பிறகு, கிரக நிலைகள் அனுகூல மற்ற நிலைகளுக்கு மாறிவிடுகின்றன.
தொழில், வியாபாரம்: சந்தையில் போட்டிகள் கடினமாக இருப்பினும், உங்கள் விற்பனையை அவை பாதிக்காது. ஆயினும், ஊண், உறக்கமின்றி உழைக்க வேண்டி வரும். வெளி மாநிலப் பயணங்களினால், லாபம் கிட்டும். பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால், உங்கள் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம், நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவி, சலுகைகளும், தக்க தருணத்தில் கைகொடுக்கும், ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, பிரபல வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இது சம்பந்தமாக, பலர் வெளிநாடு சென்று - வரும் சாத்தியக்கூறு உள்ளதை, கிரக நிலைகள் குறிக்கின்றன. புதிய கிளைநிறுவனங்களைத் திறப்பதற்கு, வழியும், வசதியும் கிட்டும்.
கலைத் துறையினர்: கலைத் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவு சாதகமாக உள்ளன, ஜூலை 26-ம் தேதி வரை. திரைப்படத் துறையினர், புதிய தயாரிப்பதில் துணிந்து முதலீடு செய்யலாம். லாபம் கிட்டும். இச்சந்தர்ப்பத்தைச் சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொண்டால், லாபகரமாக இருக்கும். அக்டோபர் 28-லிருந்து, மீண்டும்
சிறு, சிறு பிரச்னைகளைச் சமாளிக்க
வேண்டி வரும்.
அரசியல் துறையினர்: புத்தாண்டு பிறக்கும்போது, ஜீவன காரகரான, சனி பகவானுடன் அரசியலுக்கு அதிகாரியான சுக்கிரன் சேர்ந்திருப்பதும், அனுகூலமான கிரகக் கூட்டணியாகும். அதே தருணத்தில், சூரிய பகவானும், குரு பகவானின் ராசியில் சஞ்சரிப்பது, யோக பலன்களைக் குறிக்கிறது. கட்சியில் செல்வாக்கு உயரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், பதவியொன்றும் உங்களைத் தேடி வரும்! ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து, கிரக நிலைகள் மாறுவதால், பேச்சில் நிதானமாக இருத்தல் நன்மையளிக்கும் என கிரகங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இந்த எச்சரிக்கை வருடம் முடியும் வரை, அவசியமாகிறது.
மாணவ - மாணவியர்: புத்தாண்டில் முதல் ஐந்து மாதங்களுக்கு, கல்வித் துறையைத் தங்கள் பிடியில் கொண்டுள்ள கிரகங்கள் சுப பலம் பெற்று வலம் வருகின்றன. செப்டம்பர் மாதம் 7-ம் தேதியிலிருந்து, படிப்பில் சிறிது கவனக் குறைவு ஏற்படக்கூடும். பிற மாணவர்களுடன், நெருங்கிப் பழகாமலிருத்தல் உங்கள் எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும். தினமும் சரஸ்வதி தேவியையும், முருகப் பெருமானையும் பூஜித்து வருவது நல்ல பலனையளிக்கும். வசதியுள்ளவர்கள் கூத்தனூர் சென்று, தரிசித்துவிட்டு வருவது உடனுக்குடன் பலனளிக்கும். சென்று வர இயலாதவர்கள், புதன் கிழமைகளில் திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபமேற்றிவைத்து, தரிசித்துவிட்டுவருவது, உடனுக்குடன் நல்ல பலனையளிக்கும். கிரகிப்புத் திறன் ஓங்கும். நல்ல குணங்களுடன் கூடிய சகமாணவர்களின் நட்பு கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: வருட ஆரம்பத்திலிருந்து, ஆகஸ்ட் 9-ம் தேதிவரை கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. விவசாயத்திற்கு அவசியமான தண்ணீர், உரம், இடுபொருட்கள் ஆகியவை தடையின்றிக் கிடைக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் எவ்விதப் பிரச்னையும் இராது. ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து, பணப் பிரச்னை படிப்படியாகக் கடினமாகும். சந்தை நிலவரம் திடீரென்று மாறக்கூடும். உங்கள் விளைபொருட்களுக்கு, நீங்கள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காதது, ஏமாற்றத்தைத் தரும். சில தருணங்களில் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். கூடியவரையில், தவிர்க்க முயற்சிப்பது, உங்கள் எதிர்கால நன்மைக்கு ஏற்றதாகும். கடன் என்பது, குடும்பத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து அழிக்கும் கொடிய விஷமாகும் என்பதை ஜோதிடக் கலை எடுத்துரைக்கிறது. ஆதலால், இப்புத்தாண்டின் பிற்பகுதியில், திட்டமிட்டுச் செலவு செய்தல் மிகவும் அவசியம் என்ற உண்மையை ஜோதிடம் தௌிவாக எச்சரிக்கின்றது.
பெண்மணிகள்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை விரய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பது, வரவிற்கு மீறிய செலவுகளைக் குறிக்கிறது! பல தருணங்களில், பண நெருக்கடி ஏற்படக்கூடும். ஏப்ரல் 26-ம் தேதி லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனியுடன், ராகு இணைவது மிக நல்ல கிரக மாறுதலாகும். அதே தருணத்தில், பூர்வ புண்ணிய ராசியான சிம்மத்திற்கு கேது மாறுவதும், பல நன்மைகளை அளிக்கவுள்ளது. இருப்பினும், மே 11-ம் தேதி ராசிக்கு மூன்றாம் இடமாகிய மிதுனத்திற்கு குரு மாறுவது நன்மை தராது! ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்தல் வேண்டும். திட்டமிட்டு, செலவு செய்வதும், அவசியம்!! இக்கால கட்டத்தில், எக்காரணத்தைக் கொண்டும், கடன் வாங்காது இருத்தல் அவசியம் என்பதை ஜோதிடக் கலை தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகிறது. ஏனெனில், இத்தகைய கிரக நிலைகள் அமையும் போது, ஏற்படும் கடன், வளரும் எனவும், அந்நிலையிலிருந்து விடுபடுவது சற்றுக் கடினம் என்பதையும் ஜோதிடம் விவரித்துள்ளது.
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்தல் வேண்டும். பிறருடன் பழகுவதில் நிதானமாக இருத்தலும் அவசியம். குடும்பத்தில் ஒருவருடன் ஒருவர் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வதும் முக்கியம் என்பதை கிரகநிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
பரிகாரம்: குரு பகவானுக்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும். வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மண் அகலில் மூன்று நெய் தீபம் ஏற்றிவருவது மிகச் சிறந்த பரிகாரமாகும் (ஆதாரம்: "பரிகார ரத்னம்" எனும் புராதன ஜோதிட நூல்.