search-icon-img
featured-img

மீனம்

Published :

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் முதல் பகுதி ஆரம்பித்திருக்கும் நிலையில், இப்புத்தாண்டு பிறக்கிறது மீன ராசி அன்பர்களாகிய உங்களுக்கு! ஜென்ம ராசியில் ராகுவும், திருதீய (3) ஸ்தானத்தில் ராசியாதிபதி குருவும் அமர்ந்துள்ளனர்! ஏப்ரல் 26-ம் தேதி ராகு, மீன ராசியை விட்டு விலகி, கும்ப ராசியில் வலம் வர ஆரம்பிக்கிறார். மே மாதம் 11-ம் தேதியன்று, ராசிநாதன் ரிஷப ராசியை விட்டு, மிதுனத்திற்கு மாறுகிறார். மே மாதம் 10-ம் தேதிவரை வருமானத்தை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். சிறு, சிறு குடும்பப் பிரச்ைனகளினால், நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் காரணமாக, மனதில் "டென்ஷன்" உண்டாகும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளை ஒருவர், தாய் நாடு திரும்புவர். கணவர், மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். பழைய கடன்கள் இருப்பின், தொல்லை தரும். வெளியூர்ப் பயணங்களின்போது, பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏழரைச் சனியின் தாக்கத்தினால், சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பரிகாரம் பலனளிக்கும். திருமண முயற்சிகளில், தடங்கலும், தாமதமும், குழப்பமும் உண்டாகும். வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். இந்நிலை மே மாதம் 10-ம் தேதி வரை நீடிக்கும். 11-ம் தேதியிலிருந்து, புத்தாண்டு முடியும் வரையில், சிரமங்கள் படிப்படியாகக் குறையும். இதனை அனுபவத்தில் உணரலாம்.

உத்தியோகம்: ஏழரைச் சனியின் தாக்கம் நீடிக்கிறது. ராகு, ெஜன்ம ராசியில் நீடிப்பதால், ஏப்ரல் 25-ந் தேதி வரையில் வேலை பார்க்கும் இடத்தில், பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதன் பிறகு, ராகு ஜென்ம ராசியை விட்டு விலகிவிடுவதால், அலுவலகச் சூழ்நிலையில் சிறிது நல்ல மாற்றம் ஏற்படும். உங்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய பதவியுயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை காரணமில்லாமல் மறுக்கப்படும். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும். பல தருணங்களில், "வேலையை விட்டுவிடலாமா?" என்ற எண்ணம் மேலிடும். ெவளிநாடுகளில் பணியாற்றிவரும் மீன ராசியினர், பல காரணங்களினால், வேலையை விட்டுவிட்டு தாய்நாடு திரும்ப வேண்டிவரும். ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து, மனதில் ஏற்பட்டிருந்த பயம், குழப்பம், வெறுப்பு ஆகியவை படிப்படியாக நீங்கும். மீண்டும் பணிகளில் உற்சாகம் மேலிடும். செப்டம்பர் 2-ந் தேதியிலிருந்து, புத்தாண்டு முடியும் வரையில் மீண்டும் அலுவலகச் சூழ்நிலையில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மேலிடும். பலருக்கு, நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தொழில், வியாபாரம்: இப்புத்தாண்டு முடியும் வரையில், ராசி நாதனான குரு பகவான், அனுகூலமாக இல்லை! வர்த்தகத் துறைக்கு அதிகாரியான சனி பகவானும், ஏழரைச் சனிக்காலத்தை நடத்திக்கொண்டுள்ளார். ஜென்ம ராசியை விட்டு நகர்ந்த ராகுவும், விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பண விஷயங்களில் அதிஜாக்கிரதையாக இருப்பது அவசியம். சந்தையில் கடினமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். நிதி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவிக்காக பாடுபடவேண்டியிருக்கும். கூட்டாளிகளும் திடீரென்று பிரச்னையை ஏற்படுத்துவர். புத்தாண்டு முடியும் வரை இந்நிலை நீடிக்கிறது. அதனால், விற்பனை மற்றும் விஸ்தரிப்புத் திட்டங்களை அளவோடு வைத்துக் கொள்ளவும். அதிக முதலீட்டில் செய்ய வேண்டாம்.

கலைத் துறையினர்: வருடம் முழுவதும் கிரக நிலைகள் ஓரளவே நன்மை செய்யும்படி அமைந்துள்ளன. ஏப்ரல் மாதம் முடியும் வரை, வாய்ப்புகளும், வருமானமும் அளவோடு கிட்டும். மக்களிடையே புகழும், செல்வாக்கும் குறையாது. இருப்பினும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவேண்டிய தருணமிது! திருமணமாகியுள்ள கணவர் - மனைவியரிடையே கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், விவாகரத்தில் கொண்டுவிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றார், இப்புத்தாண்டில்! மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. கட்சியில் ஒரு பகுதியினர் உங்களுக்கு ஆதரவாகச் செயலாற்றுவார்கள். இருப்பினும், உங்களுக்கு எதிர்ப்பும் உருவாகி வருவதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நீங்கள் நெருங்கிப் பழகிய பல நண்பர்களே உங்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை அறிந்து, மனதில் வேதனை உண்டாகும். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், சாதூர்யமாகவும், வளைந்துகொடுத்தும் நடந்துகொள்வது, நன்மை செய்யும். மாணவ - மாணவியர்: புத்தாண்டில் முதல் மூன்று மாதங்கள் அதாவது, ஏப்ரல் 2-ம் தேதி வரை கிரக நிலைகள் சாதகமாக இல்லை. ஏப்ரல் மூன்றாம் தேதியிலிருந்து, செப்டம்பர் 2-ம் தேதி வரை ஓரளவு சாதகமாகவே அமைந்துள்ளன. மீண்டும் அதே மாதம் மூன்றாம் தேதியிலிருந்து, டிசம்பர் மாதம் முடியும் வரை ஆதரவாக இல்லை. மாறி, மாறி வரும் இத்தகைய கிரக சுழற்சியினால், அடிக்கடி படிப்பில் சோர்வும், தேவையற்ற சிந்தனைகளும் மனதைப் பாதிக்கும்.

விவசாயத் துறையினர்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்தே வயல் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பதும், சற்று கடினமே! இதற்குக் காரணம், ஜென்ம ராசியில் நிைலகொண்டுள்ள ராகு, ஏப்ரல் 26-ம் தேதி, ஏற்கனவே கும்ப ராசியில் நிலைகொண்டுள்ள சனி பகவானுடன் சேர்வதேயாகும். இருப்பினும், விவசாயத்திற்கு அவசியமான அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறைவுமிராது. நவம்பர் 23-ம் தேதியிலிருந்து, கிரகங்கள் அனுகூலமற்ற நிலைகளுக்கு மாறிவிடுவதால், இயற்கைச் சீற்றங்களினாலும், வேறுபல தவறுகளினாலும், விளைச்சல் குறையும். வருமானமும் பாதிக்கப்படும். இந்நிலை வருடம் முழுவதும் நீடிக்கும்.

பெண்மணிகள்: உங்கள் ராசிக்கு நாதனான குரு பகவான், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! இருப்பினும், சுக்கிரன் மற்றும் பெரும்பான்மையான மாதங்களில் உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிக்கிறார்.

அறிவுரை: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகள், கடின உழைப்பைத் தவிர்த்தல் வேண்டும். திட்டமிட்டு, வீண் செலவுகளைத் தவிர்த்து, அவசியமானவற்றிற்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். மேலும், வீட்டிலுள்ள உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொண்டால், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்றிக்கொள்ள உதவிகரமாக இருக்கும். ஏழரைச் சனிக் காலத்தில், ராகுவும், சனி பகவானும் இணைந்திருப்பதால், இரவு நேரங்களில் தனியே செல்வதும், வாகனம் ஓட்டுவதும், விலையுயர்ந்த நகைகளை அணிந்துகொண்டு வெளிச் செல்வதும் கூடாது.

பரிகாரம்: தினமும் காலையில் குளித்த பின்பு அபிராமி அந்தாதி, மீனாட்சி பஞ்சரத்னம், கந்தர சஷ்டி கவசம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 12 பாசுரங்கள் ஆகியவற்றில் எது முடிகிறதோ அவற்றைப் படித்து, குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ, நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜித்து வந்தால் அதிசயத்தக்க பலன் கிட்டும்.