(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் அமர்வதால், இந்த ஆண்டில் பணப் பிரச்னை எதுவும் ஏற்பட சாத்தியக்கூறு இல்லை! வருமானம் ஒரே சீராக இருக்கும். தேவையற்ற வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். திருதீய ஸ்தானமாகிய (மூன்றாம் இடம்)மிதுனத்தில், குரு சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும். சமாளிப்பதில் பிரச்னை இராது. (குரு பகவான் வக்கிர அதிசார கதியில் செல்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!! ஏனெனில், குருவுக்கு வக்கிர, அதிசார தோஷங்கள் கிடையாது). விவாக முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் மற்றும் ராகுவிற்கு, குரு பார்வை கிடைப்பதால், எதிர்பாராத பண வரவிற்கும் வாய்ப்புகள் உள்ளன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால், கங்கா ஸ்நானம், பாடல் பெற்ற திருத்தல தரிசனம், மகான்களின் ஆசி ஆகிய பேறுகள் கிட்டும். மே 11-ம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு மாறுவதால், குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களையும், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதையும் குறைத்துக் கொள்வது, மிகவும் அவசியமாகும். ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்வதால், திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்மணிகள் கருத்தரிக்க ஏற்ற கால நிலை இது.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் ஜீவனகாரகரான சனி பகவானுடன் ராகு இணைந்திருப்பதாலும், குரு பகவானின் பார்வை பெறுவதாலும், பலருக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிட்டும். அலுலகச் சூழ்நிலை, உற்சாகத்தையளிக்கும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமிருப்பின், இந்தப் புத்தாண்டில் அந்த ஆசை நிறைவேறும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமாகும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, மனத்திற்குத் திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
தொழில், வியாபாரம்: மிகவும் லாபகரமான ஆண்டாகும் இது! உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் சகாய விலைக்குக் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உற்சாகத்தையளிக்கும். சந்தை நிலவரம் சாதகமாக மாறும். சர்வதேச சூழ்நிலையில் அமைதி ஏற்படுவதால், ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய தொடர்புகள் ஏற்பட்டு, அவற்றின் காரணமாக, லாபம் உயரும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் யோகமும், பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகும். உங்கள் தொழிலை நவீனமயப்படுத்துவதற்கு. வழி பிறக்கும். இந்தப் புத்தாண்டு முழுவதும், தொழில் காரகரான சனி, குரு பகவானின் பார்வை பெறுவதால், உத்தியோகஸ்தர்களுக்குச் சிறந்த யோக பலன்கள் கிட்டும் என "ஷோடஸ ஸதவர்க்கம்" எனும் மிகப் புராதன ேஜாதிடக் கணிப்பில் தெளிவாகவும், உறுதியாகவும் தெரிகிறது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் மேஷ ராசியினருக்கு, மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும், புதிய வேலை கிடைக்கும்.
கலைத் துறையினர்: அக்டோபர் 23-ம் தேதி வரை சுக்கிரனும், கலைத்துறைக்கு அதிகாரம் படைத்த மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றன. அதன் பிறகு, அவர்களின் கூட்டு சுப பலம் (combined favourable strength) கலைந்துவிடுகின்றது. ஆதலால், அக்டோபர் 25 வரை வருமானமும், வாய்ப்புகளும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். குரு பகவான், அனுகூலமற்று சஞ்சரிப்பதால், திருமணமான திரைப்படத் துறையினருக்கு, கணவர் - மனைவியரிடையே அபிப்ராய பேதமும், பரஸ்பர சந்தேகங்களும், அவநம்பிக்கையும் ஏற்படும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், திருமண முறிவு ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: அக்டோபர் 10-ந்தேதியிலிருந்து, சுக்கிரன் நீச்சமடைவதால், கட்சித் தொண்டர்களின் மறைமுகப் பேச்சுகளும், சுட்டிக்காட்டும் குறைகளும் மனதில் வேதனையை ஏற்படுத்தும். செல்வாக்கு குறையும். மேல்மட்டத் தலைவர்களும் உங்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பார்கள். மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய ஆண்டு இது!
மாணவ - மாணவியர்: இப்புத்தாண்டில், மாணவ - மாணவியருக்கு சற்று சிரமமான காலகட்டமாகும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நினைவாற்றல் குறையும். பாடங்களில் மனதைச் செலுத்துவது கடினமாக இருக்கும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், சகவாச தோஷம்் ஏற்படக்கூடும். கூடியவரையில், இப்புத்தாண்டு முழுவதும், குழந்தைகளை உங்களது நேரடிப் பார்வையிலேயே படிக்க வைப்பது நல்லது.
விவசாயத் துறையினர்: இப்புத்தாண்டில் சூரியன், மேகாதிபதியாகவும், தான்யாதிபதியாக பூமிகாரகரான செவ்வாயும் திகழ்வதால், தண்ணீர் வசதிக்குக் குறைவிராது. பயிர்கள் செழித்து வளரும். சூரியன் பிரதான கிரகமாக விளங்குவதால், அரசாங்கச் சலுகைகள் உங்களைத் தேடிவரும். விளைச்சல் குறைவின்றிக் கிடைப்பதால், லாபம் உயரும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். புஷ்பங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும்.
பெண்மணிகள்: இப்புத்தாண்டு முழுவதும் குரு பகவான் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கவில்லை! அக்டோபர் 10-லிருந்து நவம்பர் 3-ம் தேதிவரை பெண்மணிகள், தங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளின் உடல் நலனிலும் கவனமாக இருத்தல் அவசியம். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவதையும் தவிர்த்தல் வேண்டுமென கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் பணிகளில் கவனமாக இருத்தல் வேண்டும். தவறுகள் ஏற்படக்கூடும்.
அறிவுரை: இவ்வாண்டில், சிக்கனமாக இருப்பதும், உடல் நலனில் கவனமாக இருத்தலும் வேண்டும்.
பரிகாரம்: தினமும், காலையில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வந்தால் போதும். "பரிகார ரத்தினம்" என்ற பெருமை இந்நூலுக்கு உண்டு.