இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்

Published: 31 Dec 2024

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஏப்ரல் 26-ம் தேதி ராகு, கும்ப ராசிக்கும், கேது - சிம்ம ராசிக்கும் மாறுகின்றனர். மே 11-ம் தேதி குரு பகவான், ரிஷப ராசியை விட்டு, மிதுன ராசிக்கு மாறுகிறார். இந்த ஆண்டு முழுவதும் வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பற்றாக்குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு இல்லை. இருப்பினும், சேமிப்பிற்கும் சாத்தியமில்லை!! குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளுக்கு மிகவும்ஏற்ற ஆண்டு இது. விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், பலருக்கு, சொந்த வீடு அமையும் பேறும் உள்ளது! செவ்வாயும் அனுகூலமாக இருப்பதால், வசதியான வீடாக அமையும். குடும்பத்தில் மகிழ்்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். கல்வியை முடித்துள்ள பிள்ளை அல்லது பெண்ணிற்கு நல்ல வேலை அமையும். அக்டோபர் மாதம் 18-ம் தேதியிலிருந்து, நவம்பர் 6-ம் தேதி வரை ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம், எத்தகைய விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை, முன்கூட்டியே தெரிவித்து நம்மைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த கலை "ஜோதிடம்" ஆகும். வயதான பெரியோர்கள், இரவு நேரங்களில் கழிவறைக்குச் செல்லும்போது, அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் கிரக நிலைகள் உணர்த்துகின்றன. கீழே வழுக்கி விழுந்து, அடிபடுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.

உத்தியோகம்: ஏப்ரல் மாதம் 30-ம் தேதி ஏற்கெனவே கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி பகவானுடன் ராகு இணைவதாலும், சுக ஸ்தானத்திற்கு கேது மாறுவதாலும், பணிகளில் கவனமாக இருத்தல் வேண்டும். அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது, ஆவணங்களையும், பணம், பொருட்கள் ஆகியவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். இவை களவுபோக சாத்தியக்கூறு உள்ளது. மேலதிகாரிகளுடன் சற்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதும் அவசியம். கூடியவரையில், சக ஊழியர்களின் குடும்பப் பிரச்னைகளில் தலையிடாமல் விலகியிருப்பது, தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க முடியும்.

தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில் சுக்கிரனும், புதனும் இணைந்திருப்பது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. ஏப்ரல் 27-ம் தேதி ராகுவும், சேர்ந்துகொள்கிறார். மே 11-ம் தேதி குரு பகவான், தனஸ்தானத்திற்கு மாறுவதும் மேலும் பல நன்மைகளை வாரி வழங்குவதற்கு அனுகூலமாக உள்ளது. தொழில் மற்றும் வியாபார அபிவிருத்திற்கு அவசியமான நிதியுதவிகள் எளிதில் கிடைக்கும்். அதே தருணத்தில், வர்த்தக அபிவிருத்தி சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்களும், அலைச்சல்களும், ஓய்வில்லாத உழைப்பும் உடலில் அசதியை ஏற்படுத்தும். சந்தை நிலவரத்தில், போட்டிகள் கடுமையானதாக இருக்கும். ஒருசிலர் வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடுகளுக்குச் சென்று வரவேண்டிய அவசியமும் உருவாகும். சனி பகவான் மற்றும் ராகுவின் கூட்டணி இவ்வாண்டில் லாபத்தைப் பெற்றுத் தந்தாலும், அடிக்கடி குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

கலைத்துறையினர்: சனி, ராகுவுடன் சுக்கிரன் இணைந்திருப்பது, நல்ல வாய்ப்புகள் கிடைப்பதும், அதன் மூலம் வருமானம் உயர்வையும் எடுத்துக்காட்டுகிறது. திரைப்படத் துறையினர், இப்புத்தாண்டில் முதலீடு செய்து, புதுப் படங்களை எடுக்கலாம். செல்வாக்கும், லரபமும் அதிகரிக்கும். மாநில அரசின் உதவி கிட்டும். அரசியல் பிரமுகர்களின் ஆதரவு தக்க தருணத்தில் கிடைக்கும். ஏற்றுமதி , இறக்குமதித் துறை அன்பர்களுக்கு, பிரபல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். உங்கள் வர்த்தக வாழ்க்கையில் மிக லாபகரமான ஆண்டாகும் இப்புத்தாண்டு என்பதை கிரகங்களின் சஞ்சார நிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால், துணிந்து முதலீடுகளில் ஈடுபடலாம்.

அரசியல் துறையினர்: அக்டோபர் மாதம் 9-ம் தேதி வரை சுக்கிரன் சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். சனி பகவானும், ராகுவும்கூட கைகொடுத்து உதவும் நிலையில், நிலைகொண்டுள்ளனர். கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு மிகுந்த பிரமுகர் ஒருவரின் தொடர்பு, பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளது. தசா, புக்திகள் சாதகமாக அமையப்பெற்றிருப்பதால், வெளிநாடு ஒன்றிற்குச் சென்று வரும் சாத்தியக் கூறும் உள்ளது.

மாணவ - மாணவியர்: இப்புத்தாண்டின் செப்டம்பர் 11-ம் தேதியிலிருந்து, டிசம்பர் 5-ம் தேதி வரை புதன் மற்றும் பிற கல்வி சம்பந்தப்பட்ட கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றன. ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, மே 7-ம் தேதி வரையிலும், ஓரளவே சாதகமாக உள்ளன. மே 8-ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 10-ம் தேதிவரை பாடங்களில் மனத்தை ஊன்றிச் செலுத்துவது, சற்று கடினமாக இருக்கும். சில மாணவர்களுக்கு சகவாச தோஷம் ஏற்பட்டு, படிப்பில் மனம் சிதறும். ஏற்கெனவே வெளிநாடுகளில் விசேஷ உயர் கல்வி பயின்றுவரும் மாணவ , மாணவியருக்கும் இவை பொருந்தும்.

விவசாயத் துறையினர்: புத்தாண்டு தினத்திலிருந்து, ஜூலை மாதம் 17-ம் தேதி வரை கிரக நிலைகள் அனுகூலமாக நீடிக்கின்றன. அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. விளைச்சலும் வருமானமும் உழைப்பிற்கேற்ப இருக்கும். ஆடு , மாடுகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் நீடித்தாலும், அவற்றால் நெருக்கடி ஏற்படாது. ஜூலை 18-ம் தேதியிலிருந்து உழைப்பு கடினமாகும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். புதிய கடன்களை ஏற்கவேண்டிவரும்.

பெண்மணிகள்: வருட ஆரம்பத்திலிருந்து, மே 2-ம் தேதி வரை குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது. குடும்ப நிர்வாகத்திற்குத் தேவையான அதே அளவிற்கு வருமானம் உயரும். சிறு, சிறு வாக்குவாதங்களைத் தவிர, குடும்பத்தில் அமைதி நிலவும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, உழைப்பு கடினமாகும். புதிய வேலைக்கு முயற்சித்தால், வெற்றி கிட்டும். ஆயினும், கிடைக்கும் வேலையில் பூரண திருப்தி இராது.

அறிவுரை: இப்புத்தாண்டில் அடிக்கடி ஏதாவதொரு உடல் உபாதை ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் என்பதையும், மருத்துவச் சிகிச்சை உதவும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற உடல் உழைப்பையும், அலைச்சல்களையும், வெளியிடங்களில் உண்பதையும் தவிர்ப்பது அவசியம் என்பதை கிரக சஞ்சார நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

பரிகாரம்: தினமும், காலையில் கந்தர் சஷ்டி கவசமும், மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் தரிசனமும் தோஷங்களைப் போக்க உதவும் என "பரிகார ரத்னம்" எனும் மிகப் புராதன ஜோதிட நூல் விளக்கியுள்ளது.

பிறந்தநாள் பலன்கள்