(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: அர்த்தாஷ்டக ராசியில், சுக்கிரனும் சனியும், பஞ்சமத்தில் (5) ராகுவும், 7-ல் வக்கிரகதியில் குருவும், பாக்கிய ஸ்தானத்தில் நீச்ச செவ்வாய் வக்கிர கதியிலும், லாப ஸ்தானத்தில் கேதுவும் நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், 2025 புத்தாண்டு பிறக்கிறது! ஏப்ரல் 26-ம் தேதி ராகுவும், சனி பகவானுடன் இணைகின்றனர். அதே தருணத்தில், கேது, சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். மே 11-ம் தேதி குரு பகவான், அஷ்டம ஸ்தானமாகிய மிதுனத்திற்கு மாறுகிறார். புத்தாண்டில், முதல் மூன்று மாதங்கள் கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை!! வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் பாடுபடவேண்டியிருக்கும். அடிக்கடி ஏதாவதொரு உபாதை ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால், மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. நெருங்கிய உறவினருக்குள் பரஸ்பர அந்நியோன்யம் குறையும். ஸப்தம ஸ்தானத்தில் குரு பகவான், வக்கிர கதியில் நிலைகொண்டுள்ளதால், சுபச் செலவுகளில் பணம் விரயமாகும். சிறு காரியங்களுக்குக்கூட, அதிகமாக சிரமப்படவேண்டியிருக்கும். உத்தியோகத்திலுள்ள பிள்ளை அல்லது பெண் ஒருவருக்கு, அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்படுவதால், மன அமைதி பாதிக்கப்படும். திருமண முயற்சிகளில், சிறு பிரச்னையும், குழப்பமும் ஏற்பட்டு, அதன் பிறகு, வரன் அமையும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துவரும், விருச்சிக ராசியினருக்கு, ேவலையில் சேர உத்தரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
உத்தியோகம்: ஏப்ரல் 25-ம் தேதி வரை வேலைபார்க்கும் இடத்தில், நிம்மதியும், பணிகளில் உற்சாகமும் மேலிடும். மேலதிகாரிகளின் ஆதரவு, மனதில் அமைதியை அளிக்கும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ஏப்ரல் 26-ம் தேதியன்று ஏற்கெனவே அர்த்தாஷ்டகத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுடன் ராகு இணைவதால், வேலை பார்க்கும் இடத்தில், பல பிரச்னைகள் உருவாகும். நெருங்கிப் பழகிய சக-ஊழியர் ஒருவரால், வீண்பழி ஏற்படக்கூடும். அது உங்கள் எதிர்கால நலனை பாதிக்கக்கூடும். இப்பிரச்னை, இப்புத்தாண்டு முடியும் வரை நீடிக்கும்! பொறுமை, நிதானம், சாதூர்யம் அவசியம்!!
தொழில், வியாபாரம்: அர்த்தாஷ்டகத்தில் ஏற்பட்டுள்ள கிரகக் கூட்டணியினால், மிகக் கடினமான போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களின் விலை திடீரென்று அதிகரிக்கும். இது உங்களுக்கு பணப் பிரச்னையை ஏற்படுத்தும். வங்கிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைப்பது சற்று கடினமே. இத்தகைய சோதனையான தருணத்தில், கூட்டாளிகளும், சில தொழிலாளிகளுடன் சேர்ந்துகொண்டு பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். இந்நிலை, மே மாதம் 10-ம் தேதி வரை நீடிக்கும். அதன் பிறகு பிரச்னைகளின் கடுமை குறைய ஆரம்பிக்கும். இந்த முன்னேற்றம் வருடம் முடியும் வரை நீடிக்கிறது. இக்காலகட்டத்தில் உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ளலாம்.
கலைத்துறையினர்: புத்தாண்டு வருட ஆரம்பத்திலிருந்து ஜூலை 25-ம் தேதி வரை கலைத்துறையினருக்கு, அதிக நன்மைகளைக் கூற இயலவில்லை. கலைத் துறைக்கே உரித்தான போட்டிகளும், பொறாமையும், உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகளைத் தடைசெய்யும். வருமானம் குறையும். மக்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர் - நடிகைகள் ஆகியோருக்கு வருமானம் குறையும். பரஸ்பர போட்டியும், பொறாமையும் கவலையை அளிக்கும். பண நெருக்கடி கடுமையாக இருக்கும். பலர், தங்களது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஜூலை 26-ம் தேதியிலிருந்து, வருடம் முடியும்வரை படிப்படியாக வருமானம் உயர ஆரம்பிக்கும். புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றி தேடிவரும்.
அரசியல் துறையினர்: ஏப்ரல் 26-ந் தேதி அர்த்தாஷ்டக ராசியில் உள்ள சனி பகவானுடன், ராகு சேரும் வரையில், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் நிலைத்து நிற்கும். அதன் பிறகு, தொண்டர்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். மேல்மட்டத் தலைவர்களிடையே ஏற்படும் போட்டி, பொறாமைகளினால், தொண்டர்களிடையே பிளவு ஏற்படும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கட்சி உட்பூசலில் ஏதாவதொரு குழுவின் பக்கம் சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மிகவும் எச்சரிக்கையுடனும், சாதூர்யத்துடனும் நடந்துகொள்ள வேண்டிய காலகட்டமாகும். ஏப்ரல் 27-லிருந்து, ஆண்டின் முடிவுவரை இக்காலகட்டத்தில் உங்கள் முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்துக்களை வெளியிடாமல் மௌனமாக இருப்பது மிகவும் அவசியம், பல நன்மைகளை கட்சியில் நீங்கள் எதிர்பார்க்கலாம். செல்வாக்கு உயரும். தொண்டர்களிடையே மதிப்பும், மரியாதையும், ஆதரவும் மனத்திற்கு உற்சாகத்தை அளிக்கும்.
மாணவ - மாணவியர்: கிரக நிலைகளின்படி, ஏப்ரல் 25-ம் தேதி வரை படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் படியும். ஆசிரியர்களின் ஆதரவு உற்சாகத்ைத அளிக்கும். தேர்வுகளில் மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றிலும் முன்னணியில் திகழ்வீர்கள். ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து, மே 10-ம் தேதி வரையில் - அதாவது, சுமார் 20 நாட்களுக்கு கிரக நிலைகள் சாதகமாக இல்லை. இந்நாட்களில் நண்பர்களுடன் விடுப்பில் வெளியூர்களுக்குச் செல்வது, நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்கவும். நவம்பர் 2-ம் தேதிவரை இந்தத் தோஷம் நீடிக்கும். அதன் பிறகு, ஆண்டு முடியும் வரை, இந்தத் தோஷம் இராது.
விவசாயத் துறையினர்: ஏப்ரல் 2-ம் தேதி வரை விவசாய வசதிகளுக்குக் குறைவிராது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அம்மாதம் மூன்றாம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை வயல் பணிகளில் பின்னடைவு ஏற்படும். அதன் பின்பு, ஆண்டு முடியும் வரை விவசாயத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். விளைச்சல் திருப்தியைத் தரும். பழைய கடன்கள் அடைபடும்.
பெண்மணிகள்: வேலைக்குச் சென்று-வரும் பெண்மணிகளுக்கு புத்தாண்டு பிறக்கும் தினத்திலிருந்து, ஏப்ரல் 25-ந் தேதி வரை அலுவலகத்தில் பல நன்மைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். ஒருசிலருக்கு, ஊதிய உயர்வும் கிடைக்கும். ஏப்ரல் 26-ந் தேதியிலிருந்து, ஆண்டு முடியும் வரை, அலுவலகச் சூழ்நிலை ஒரே சீராக இருக்கும். பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை! வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பெண்மணிகளுக்கு, ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் மிகவும் அனுகூலமான காலகட்டமாகும். அதன் பின்பு வருடம் முடியும் வரை நிலைமை ஏற்றத்தாழ்வில்லாமல் நீடிக்கும்.
அறிவுரை: இந்த ஆண்டு முழுவதுமே, திட்டமிட்டும், சிக்கனமாகவும் செலவு செய்தல் நல்லது. மே 11-ம் தேதி குரு பகவான் அஷ்டமத்திற்கு மாறுவது, பணக் கஷ்டத்தையும், அதிக அலைச்சலையும் ஏற்படுத்தக்கூடும் என புராதன ஜோதிட கிரந்தங்கள் விளக்கியுள்ளன.
பரிகாரம்: குரு, ராகு, சனி ஆகியோருக்கு பரிகாரம் செய்வது நல்லது. ஏழைகளுக்கு உணவளிப்பது, மருத்துவ சிகி்ச்சைக்கு உதவுவது, பசுக்களுக்கு உணவளிப்பது, கைமேல் பலனளிக்கும்.