(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தில், லாப ஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த குரு பகவான், சித்திரை 28-ம் (11-05-2025) தேதியன்று, மிதுன ராசிக்கு மாறுகிறார். மிதுனம், கடக ராசிக்கு விரய ஸ்தானமாகும். இதன் பலனாக, குடும்பச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். இருப்பினும், பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உடல் நலனைக் குறிக்கும் கும்ப ராசியில், சனி - ராகு இணைந்திருக்கும் தோஷத்தை, குரு பகவான் பார்ைவ இருப்பதால், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிரந்தர நோய்க்காக சிகிச்சை எடுத்துவரும் நோயாளிகளுக்குக்கூட, இப்போது நோயின் உபாதை குறைவதை அனுபவத்தில் காண முடியும் (ஆதாரம் : "மருத்துவ ஜோதிடம்").
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான, சனி பகவானையும், அவருடன் சேர்ந்துள்ள, ராகுவையும், குரு பார்வையிடுவதால், அலுவலகத்தில் ஏற்பட்டுவந்த அதிருப்தியும், பல பிரச்னைகளும் நல்லபடி தீரும். மீண்டும் அன்றாடக் கடமைகளில், மனதைச் செலுத்த இயலும். உங்களைக் கண்டாலே, வெறுப்பை வெளிப்படுத்தும் உயரதிகாரி ஒருவர் விலகிவிடுவதால், மனதை அரித்துவந்த அச்சம் நீங்கும். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள் இனி அளிக்கப்படும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் கடக ராசியினருக்கு, முயற்சியில் வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பமிருப்பின், அந்த ஆசை இப்போது நிறைவேறும்.
தொழில், வியாபாரம்: "குரு பார்க்கில், கோடி தோஷம் விலகும்…!" என்பது ஆன்றோர் வாக்கு. ராசிக்கு, அஷ்டம ஸ்தானத்தில் இணைந்துள்ள சனி - ராகுவினால், இதுவரை சந்தையில் மிகக் கடினமான போட்டிகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அந்நிலை, இனி படிப்படியாகக் குறைவதையும், விற்பனை அதிகரிப்பதையும் அனுபவப்பூர்வமாகக் காணலாம். நிதி நிறுவனங்களும், கூட்டாளிகளும், ஒத்துழைப்பார்கள். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு வழிவகுத்தருள்வார் குரு பகவான்! இருப்பினும், ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று அவர் ஜென்ம ராசிக்கு மாறுவதாலும், குரு பகவானின் சுபப் பார்வையினால் ஏற்படும் நன்மைகள் அளவோடுதான் ஏற்படும்.
கலைத் துறையினர்: அடுத்துவரும் ஒரு வருடக் காலத்திற்கு, குரு பகவானின் சஞ்சாரம் ராசிக்கு விரய ஸ்தானத்திலும், ஜென்ம ராசியிலும் அமைகிறது. ராசி சஞ்சாரம் நன்மையளிக்காவிடினும், அவரது சுபப் பார்வை பலம் உங்களுக்கு சமய சஞ்ஜீவியாக அமைகிறது. வரவும் செலவும் சமமாக இருக்கும். அடுத்துவரும் ஒருவருடக் காலத்திற்கு, சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கி்டையாது. ஜோதிடம் என்பது என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக மட்டுமே ஏற்பட்ட கலையல்ல. மாறி மாறி வரும் கிரக நிலைகளுக்கேற்ப, நாம் எந்தெந்த விஷயங்களில், எப்போதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? -என்பதை முன்கூட்டியே நமக்கு எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடி அது!! ஆதலால், வரும் ஒரு வருடக் காலத்திற்கு, கடக ராசியினர், கைப்பணத்தைத் திட்டமிட்டு செலவு செய்தல் வேண்டும். திருமண முயற்சிகளில், வரனை நிர்ணயிப்பதில் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: அரசியல் துறை அன்பர்களுக்கு, இந்தக் கிரக மாறுதல் ஓரளவு நன்மைகளையே செய்யும். இருப்பினும், அந்த நன்மைகள் அளவோடுதான் இருக்கும். ஐப்பசி மாதம் வரையில், கட்சியில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவு தொடரும். அதன் பிறகு, வருடம் முடியும் வரையில், கட்சியில் சிறு சிறு பிரச்னைகள் உருவாகி, கவலையை அளிக்கும். தொண்டர்களின் மறைமுகப் பேச்சுகள் மனவருத்தம் உண்டாக்கும்.
மாணவ - மாணவியர்: இப் புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, ஐப்பசி முடியும் வரையில், வித்யா ஸ்தானமும், வித்யா காரகரும் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உயர் கல்விக்கு இடம் கிடைக்கும். ஒழுக்கமும், நற்குணங்களும் அமைந்த சக-மாணவர்களின் நட்பு கிடைக்கும். கார்த்திகை மாதம் முதல் வாரத்திலிருந்து, கல்வியில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். கவனம் குறையும். தேவையில்லாத விஷயங்களில் மனதைச் செலுத்தும் சூழ்நிலை உருவாகும். மனதைக் கட்டுப்பாட்்டில் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம். பிற மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
விவசாயத் துறையினர்: ஐப்பசி மாதம் முடியும் வரையில், நல்ல விளைச்சலும், வருமானமும் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வயலைப் பார்த்தாலே மனம் குளிரும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். கார்த்திகை மாதம் முதல், விசுவாவசுப் புத்தாண்டு முடியும் வரையில் அளவோடு நன்மைகள் ஏற்படும்.
பெண்மணிகள்: வரும் ஒரு வருடக் காலத்தில் குரு பகவான், விரய ஸ்தானத்திலும், ஜென்ம ராசியிலும் மாறி, மாறி சஞ்சரிக்கிறார். இத்தகைய சஞ்சாரம், உங்களுக்கு நேரிடையான நன்மைகளை அளிக்காது. இருப்பினும், ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும், சனியும் ராகுவையும் குரு பார்ப்பதால், உடலையும், மனதையும் வருத்தி வந்த பல பிரச்னைகள் நல்ல படி தீரும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியிருக்கும் பல திருமணமான பெண்களுக்குக் கருத்தரிக்கும் பேறைத் தந்தருள்வார், குரு பகவான்.
அறிவுரை: நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சற்று அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில், திட்டமிட்டு செலவு செய்தல் அவசியம்.
பரிகாரம்: குரு, சனி மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது அளவற்ற நன்மைகளை அளிக்கும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிழமைகளிலும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபமேற்றிவைத்து, தரிசித்து வந்தால் போதும். கைமேல் பலனளிக்கும். (ஆதாரம்: "பரிகார ரத்தினம்" எனும் ஜோதிட கிரந்தம்.