(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில், வக்கிரகதியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ராகுவுடன் சேர்ந்திருப்பது, அதிக அலைச்சலையும், உழைப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இதனை உறுதிசெய்வதுபோல், அஷ்டம ராசியில் செவ்வாயும் அமர்ந்திருக்கிறார். ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெறுவது நல்லது. வருமானத்திற்குச் சமமான செலவுகளும் இம்மாதத்தில் இருக்கும். மாதத்தின் கடைசி பகுதி, பணப் பற்றாக்குறை சற்று கடுமையாக இருக்கக்கூடும். பணம் கொடுப்பது, கடன் வாங்குவது ஆகிய இரண்டையும் தவிர்ப்பது அவசியம். குடும்பப் பிரச்னைகளும், கவலையை அளிக்கும். திருமண முயற்சிகளில், சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பு வரன் அமையும். வெளியூர்ப் பயணங்களில், ஏமாற்றமே மிஞ்சும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிகாரியான செவ்வாய், ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய கன்னியில் நிலை கொண்டுள்ள தால், பணிச் சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், ஒரு சிலருக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது (ஆதாரம்: “பிரஹத் ஜாதகம்” எனும் வராகமிகிரரின் புராதன ஜோதிட நூல்,)
தொழில், வியாபாரம்: பாக்கிய, லாப ஸ்தானங்களுக்கு, குரு பகவானின் சுபப் பார்வை ஏற்படுவதால், வர்த்தகத் துறையினருக்கு, லாபகரமான மாதமாகும். உங்கள் சரக்குகளுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். புதிய சரக்குகளை மக்களிடையே அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற மாதம் இந்த ஆவணி! வங்கிகளின் ஆதரவும், சலுகைகளும் கைகொடுக்கும்.
கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அதிபதியான சுக்கிரன், இம்மாதம் முழுவதும் ஓரளவே அனுகூலமாக இருக்கிறார். வாய்ப்புகள் குறையக்கூடும். வருமானம் நீடிக்கும். ஆயினும், தேவையான அளவிற்கு இராது. ஆதலால், பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தால் நல்லது.
அரசியல் துறையினர்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. மேலிடத் தலைவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை அவசியம். முக்கிய விஷயங்களில் உங்கள் சொந்தக் கருத்துகளை வெளியிடுவதையும், தவிர்ப்பது நல்லது. கூடிய வரையில், உங்கள் சொந்தக் கருத்துக்களை இம்மாதம் முழுவதும் வெளியிடுவதைத் தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும். சிறு தவறும், பெரிய பிரச்னையில் கொண்டுவிடக்கூடும். குறிப்பாக, மாற்றுக் கட்சித் தலைவர்களுடன் பேசுவதையும், தொடர்பு கொள்வதையும் தவிர்ப்பது நல்லது. எந்தச் சமயத்தில், எதைச் செய்வது? எவற்றைத் தவிர்ப்பது? என்பதை முன்கூட்டியே நமக்கு எடுத்துக்காட்டி உதவும் காலக்கண்ணடியே ஜோதிடம்!!
மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, உறக்கமும், சோர்வுமே மேலிடும். தகாத மாணவர்களின் சேர்க்கையையும் தவிர்க்க வேண்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள, பூமி காரகரான செவ்வாய், ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வயலில் கடுமையாக உழைக்க வேண்டி வரும். செவ்வாய், உஷ்ண கிரகமாதலால், கடுமையான வெயிலில் பாடுபடவேண்டிவரும். தண்ணீர்ப் பற்றாக்குறையையும் ஓரளவு சமாளிக்க வேண்டியிருக்கும். பழைய கடன்கள் மன அமைதியை பாதிக்கும்.
பெண்மணிகள்: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், ஜென்ம ராசியில் சனி மற்றும் ராகுவின் கூட்டுச் சேர்க்கையும் உள்ளதால், உங்கள் உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம். நரம்புத் தளர்ச்சி, கை-கால்களில் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் சம்பந்தமான கோளாறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெறுவது நல்லது.
அறிவுரை: ஜென்ம ராசி மற்றும் அஷ்டம ராசியான கன்னி ஆகிய இரு இடங்களுக்கும் சனி, ராகு, செவ்வாய் ஆகிய மூவராலும் தோஷம் ஏற்பட்டுள்ளதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்ப்பதும் நல்லது. பிறருடன் வாக்குவாதம் வேண்டாம்!
பரிகாரம்: வீரியம் நிறைந்த மூன்று கிரகங்கள் அனுகூலமற்ற நிலைகளில் சஞ்சரிப்பதால், சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்துவருவது மிகச் சிறந்த பரிகாரம் என “பரிகார ரத்தினம்” எனும் மிகப் புராதன ஜோதிட நூல் கூறுகிறது. பசுவிற்கு உணவளிப்பதும், ஏழை ஒருவருக்கு அன்னமளிப்பதும் மிகச் சிறந்த பரிகாரப் பலனையளிக்கும்.
2. தினமும் காலையில் எள், பருப்பு, நெய் கலந்த சாத உருண்டைகள் மூன்று காகத்திற்கு உணவாக வைத்து வாருங்கள்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 5-8, 12-14, 19-21, 25-27, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 9 காலை முதல், 11 இரவு வரை.