(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: சுக்கிரன், புதன், செவ்வாய், சனி மற்றும் ராகு ஆகியோர் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர்! மற்ற கிரகங்களினால், நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை!! திட்டமிட்டும், சிக்கனமாகவும் செலவு செய்தால், சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது. லாப ஸ்தானத்தில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கக்கூடும். பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் சுபப் பார்வை கிடைப்பதால், உங்கள் நிலைமையை சீர்செய்துகொள்ள ஏற்ற மாதமாகும் இது! பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், சூரியனுடன் மோட்ச காரகரான கேது சேர்ந்திருப்பதால், பிரபலமான புண்ணிய நதி ஸ்நான பாக்கியமும், பாடல்பெற்ற திருத்தல தரிசனமும் கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாகும். பெரியோர்களின் ஆசி கிட்டும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், கங்கா ஸ்நான பேறும் கிட்டும். ஒரு சிலருக்கு, காசி திருத்தல தரிசனம் கிடைக்கும். மனம், புண்ணிய காரியங்களிலும், இறை பக்தியிலும் செல்லும். வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகளில் தடங்கல்களும், தாமதமும் ஏற்படும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள, சனி மற்றும் ராகுவிற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், சிறு பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, மனத்திற்கு திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, அதிர்ஷ்டகரமான மாதமாகும் இது! உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு எளிதில் கிடைக்கும். சந்தை நிலவரம் ஆதரவாக மாறும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பு கிட்டும். அதன் விளைவாக, புதிய, லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
கலைத்துறையினர்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், அதிக முயற்சியின்றி, வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாத்தியக்கூறும் கிட்டும். நாடகம், கர்நாடக சங்கீதம், சின்னத் திரை தயாரிப்பாளர்கள் ஆகியோரின் வருமானம் உயரும். தங்கள் பொருளாதார நிலையை சீர்செய்து கொள்வதற்கு ஏற்ற மாதம் இது.
அரசியல் துறையினர்: சுக்கிரனும், அரசியல் துறையுடன் தொடர்புள்ள இதர கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் உயரும். பிற கட்சியினர், தங்கள் கட்சிக்கு உங்களை இழுப்பதற்கு முயற்சி செய்வார்கள். சபலத்திற்கு இடமளிக்காமல் இரு்பபது உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாகும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு உங்களைத் தேடிவரும். சிலருக்கு, கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைக்கும். விசேஷ உயர்கல்வி பெற, வெளிநாடு செல்லும் வாய்ப்பிருப்பின், அதற்கான பூர்வாங்்க முயற்சிகளை இப்போது ஆரம்பிக்கலாம். வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத்துறை பெரும்பாலும் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் சஞ்சார நிலைகளைப் பொறுத்தே உள்ளது என “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதன ஜோதிட நூல் அறுதியிட்டுக்கூறுகிறது. அத்தகைய இரு கிரகங்களும் தற்போது சுபபலம் பெற்று வலம் வருவதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். அதிக அலைச்சலும், கடின உழைப்பும் இருப்பினும், அதற்கு ஏற்ப பலன் கிடைப்பதால், மனதில் உற்சாகம் உண்டாகும்.
பெண்மணிகள்: சுக்கிரன் உள்ளிட்ட இதர கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். குரு பகவான் மட்டும் சாதகமாக இல்லை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, மன-அமைதியைப் பாதிக்கும். நெருங்கிய உறவினருடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். ஆயினும், பெரிய அளவில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார், சுக்கிரன்! வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, பணிச்சுமை அதிகமாக இருப்பினும், நிர்வாகத்தினரின் ஆதரவு , உற்சாகத்தைத் தரும்.
அறிவுரை: சற்று சிக்கனமாக செலவுசெய்வது, கடைசி வாரத்தில் பணப்பற்றாக் குறை ஏற்படாமலிருக்க உதவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள, திருக்கோயில் ஒன்றில்், தீபமேற்றி வருவது உடனுக்குடன் பலனளிக்கும். தினமும் காலையில் எள், நெய், பருப்பு கலந்த சாத உருண்டை மூன்று எண்ணிக்கையில் காகத்திற்கு வைத்து வந்தால், அதிக பலனடைவதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 1-4, 8-12, 17-19, 23-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 14 காலை முதல், 16 இரவு வரை.