(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: சனி பகவான், ராகு ஆகிய இருவரும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பச் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்துவைத்துக் கொள்ள முடியும். பூர்வ புண்ணிய ராசியில், கேது சஞ்சரிப்பதால், பாடல் பெற்ற திருத்தல தரிசனம் கிட்டும். குரு பகவான், கார்த்திகை 2-ம் தேதி வக்கிர கதியில் சென்றாலும், திருமண முயற்சிகளை அது பாதிக்காது! ஏனெனில், வக்கிர அதிச்சாரங்கள், குரு பகவானைப் பாதிக்காது! திருமணமான பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் வாய்ப்பும் உள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். அஷ்டமத்தில் சூரியன் - செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், உத்தியோகக் காரகரான சனி பகவான், ராகுவுடன் இணைந்திருப்பது,மேலதிகாரிகள் , நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவை எடுத்துக்காட்டுகிறது. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வு மற்றும் உயர் பதவி கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு அல்லது வேலை மாற்றத்திற்கு முயற்சிக்கும் அன்பர்களுக்கு வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: உற்பத்தியை உயர்த்திக் கொள்ள, சந்தை நிலவரம் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக உள்ளதை கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. புதிய கிளைகள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது. நிதி நிறுவனங்களின் ஆதரவு, உற்சாகத்தைத் தரும். புதிய துறைகளில் அளவோடு முதலீடு செய்யலாம். லாபகரமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.
கலைத்துறையினர்: கலைத் துறை, சுக்கிரனின் ஆதிபத்தியத்தில்தான் உள்ளது! புதனுக்கும், இத்துறையில் அதிகாரம் உள்ளது. இவ்விரு க்ிரகங்களும், கலைத் துறையினருக்கு அனுகூலமாக வலம் வருகின்றனர். புதிய வாய்ப்புகள் வருமானத்தைப் பெற்றுத் தரும். உங்கள் நிதிநிலைமையை சரிசெய்துகொள்ள ஏற்ற மாதம் இது!
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் பிடியில் கொண்டுள்ள சுக்கிரன் மற்றும் இதர கிரகங்களும் சாதகமாக சஞ்சரிப்பதால், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆதரவு பெருகும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் உங்களுக்கு உதவிகரமாக வலம் வருகின்றனர். ஆசிரியர்களின் ஆதரவு கைகொடுக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பெறுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
விவசாயத் துறையினர்: பயிர்கள் செழித்து வளரும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. நவீன விவசாய வசதிகள் கிடைக்கும். அளவோடு மழை பெய்யும். வயல் பணிகளுக்கு, நவீன உபகரணங்கள் கிட்டும். வயல் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். அதிக உஷ்ணத்தினால், உடலில் அசதியும், சோர்வும் மேலிடும். ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது மனத்திற்கு இதமாக இருக்கும். அடிப்படை விவசாய வசதிகளுக்குக் குறைவிராது.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நன்மைகளுக்கு, ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்களின் பிரத்யேக முக்கியத்துவம் கொண்டுள்ளவர், சுக்கிரன் ஆவார்! அவருக்கு அடுத்தபடியாக, குரு பகவானைக் கூறுகிறது, ஜோதிடக் கலை!! இவர்களில் சுக்கிரன் பூரண சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், மகிழ்ச்சியைத் தரும். வேலைக்கு முயற்சித்துவரும் கன்னியருக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் உறுதி!
அறிவுரை: அஷ்டம ராசியில், சூரியன் சஞ்சரிப்பதால், சருமம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். கூடியவரையில், அதிக அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 1, 2, 7-10, 14-17, 21-24, 28.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்த்திகை : 3 அதிகாலை முதல், 6 மாலை. வரை