(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
17-9-2025 முதல் 17-10-2025 வரை
குடும்பம்: இம்மாதம் முழுவதும் வருமானம் போதிய அளவிற்கு உள்ளதால், பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! அஷ்டம ராசியில் வக்கிர கதியில் சனிபகவானும், அவருடன்கூட ராகுவும் இணைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில், பிரயாணம் செய்வது, வாகனம் ஓட்டுதல், தனியே வெளிச் செல்வது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. கைப் பணத்தையும், எண்ணி, எண்ணிச் செலவழிப்பது முக்கியம். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெறுவது, அவசியம். பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், தவிர்த்தல் வேண்டும். திருமண முயற்சிகளில், தவறுகள் ஏற்படக்கூடும். வரனைத் தீர்மானிக்கும் முன், தீர விசாரித்து, முடிவெடுப்பது மிகவும் அவசியம்.
உத்தியோகம்: அன்றாடப் பணிகளிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. மேலதிகாரிகளிடமும், சற்று அனுசரித்து நடந்துகொள்வது, தேவையற்ற பிரச்னைகள் உருவாவதைத் தவிர்க்க உதவும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் கடக ராசி அன்பர்கள், இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம்.
தொழில், வியாபாரம்: அஷ்டம ஸ்தானத்தில், சனி பகவான் மற்றும் ராகுவினால், தோஷம் ஏற்பட்டுள்ளதால், அன்றாட வியாபாரத்தில் அதிஜாக்கிரதையாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும். கூட்டாளிகளுடன் சற்று விட்டுக் கொடுத்து, நடந்துகொள்வது அவசியம். எவரை நம்பியும் கடன் கொடுக்கக் கூடாது! அதேபோன்று கடன் வாங்குவதும் கூடாது!! தற்போதுள்ள கிரக நிலைகளின்படி, வாங்கும் கடன் எளிதில் அடைபடாது எனவும், மேலும் வளரும் என்பதையும் புராதன ஜோதிட நூல் விளக்கியுள்ளன. எத்தகைய தருணங்களில் எவ்விஷயங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடியே ஜோதிடக் கலை!!
கலைத் துறையினர்: வருமானம் ஒரே சீராக இருக்கும். நல்ல வாய்ப்புகள் குறையாது. மக்களிடையே செல்வாக்கு நீடிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது. அதன் மூலம், நல்ல வருமானமும் கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ள ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி!!
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் பிடியில் கொண்டு்ள்ள சுக்கிரனும், மற்ற கிரகங்களும், நல்ல சுப பலம் பெற்று வலம் வந்துகொண்டிருக்கின்றன! ஆதலால், கட்சியில் செல்வாக்கு நீடிக்கிறது. மேல்மட்டத் தலைவர்கள், உங்கள் மீது நல்ல நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பிறக் கட்சித் தலைவர்கள் உங்களைத் தங்கள் கட்சிக்குள் இழுத்துக் கொள்ள முயற்சிப்பதை, கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சபலத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்பதை சனி பகவான் மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைத்தும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் உதவியும், வழிகாட்டுதல்களும் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு, வெளிநாடு சென்று உயர் கல்வி பயிலும் வாய்ப்பும் கிட்டும். தேவையான உதவிகளும், உங்களைத் தேடி வரும்.
விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புள்ள இதர கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சல் கிடைக்கும். தண்ணீர் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்குக் குறைவிராது. பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி!
பெண்மணிகள்: பெரும்பான்மையான, கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், லாபகரமான மாதம் இது! குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பண வசதியும், நிம்மதியான சூழ்நிலையும் மகிழ்ச்சியை அளிக்கும். அஷ்டம ராசியில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கையும், விரய ஸ்தானத்தில், குருவும் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூடியவரையில், உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். கணவருடன் கருத்து வேற்றுமை ஏற்படும் போது, வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள் உங்கள் எதிர்கால நலனிற்காகவே!
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்யுங்கள். குடும்ப நலன் பற்றிய, முக்கிய முடிவுகளில், அவசரம் வேண்டாம். அவசியமானாலொழிய வெளியூர்ப் பயணங்களையும், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்துவிடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்க வேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, அங்குள்ள தீபத்தில் சிறிதளவு பசு நெய் சேர்த்துவரவும். ஒவ்வொரு துளி நெய்க்கும், அளவற்றப் பரிகாரப் பலன் உள்ளது.
அனுகூல தினங்கள்
புரட்டாசி : 3-5, 9-11, 15, 16, 20-22, 26-28, 31.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி : 17 இரவு முதல், 19 பின்னிரவு வரை.