(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
17-9-2025 முதல் 17-10-2025 வரை
குடும்பம்: ஏழரைச் சனியின் பிடியிலிருந்து படிப்படியாக விடுபட்டுவரும் மகர ராசி அன்பர்களுக்கு, குரு பகவான் இம்மாதம் முழுவதும் சாதகமாக இல்லை! இருப்பினும், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவிற்கு, குரு பகவானின் பார்வை கிடைப்பது பல நன்மைகளைக் குறிப்பிடுகிறது. இம்மாதம் முழுவதும் பண வசதி போதிய அளவிற்கு இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். பழைய கடன்கள் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படும். வெளிநாட்டில் பணியாற்றிவரும், உறவினர் ஒருவரின் வருகை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படுவது, கவலையை அளிக்கும். திருமண முயற்சிகளில், வரனை நிர்ணயிப்பதில், கருத்துவேற்றுமை நீடிக்கும்.
உத்தியோகம்: வக்கிர கதியிலுள்ள சனி மற்றும் ராகு அனுகூலமாக இல்லை! ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும், நன்மை தராது. நிர்வாகத்தினர், மேலதிகாரி ஆகியோரின் போக்கு கவலையை அளிக்கும். அன்றாடப் பணிகளிலும் பொறுப்புகளிலும் அதிகக் கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில், தவறுகள் ஏற்படக்கூடும். புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் மகர ராசி அன்பர்களுக்கு, இடைத் தரகர்களினால், பிரச்னைகள் ஏற்படும். அஜாக்கிரதையினால், பணம் கொடுத்து, ஏமாந்துவிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: சந்தையில் கடினமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படுவது கவலையை அளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படுவதால், நிதி நெருக்கடியும் ஏற்படக்கூடும். புதிய முதலீடுகளையும் முயற்சிகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுவது நல்லது. பழைய கடன்கள் கவலையை அளிக்கும்.
கலைத்துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் ஒரே சீராக நீடிக்கும். சங்கீத சபாக்கள், திருக்கோயில்கள் ஆகியவற்றில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். நாதஸ்வர வித்வான்கள், ஓதுவா மூர்த்திகள், கர்நாடக சங்கீத வித்வான்கள், பின்னணிப் பாடகர்கள் ஆகியோருக்கு லாபகரமான மாதமிது என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம். நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், பலருக்கு திருமண வாழ்க்கை அமையும்.
அரசியல் துறையினர்: கட்சியில் உங்களுக்கு ஆதரவு குறையக்கூடும். உயர்மட்டத் தலைவர்கள் உங்கள் விசுவாசத்தைச் சந்தேகிக்கிறார்கள் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஜாக்கிரதையாகவும், சாமர்த்தியமாகவும் நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய மாதம் இது! வீண் பழிகளில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆதலால்தான், இந்த எச்சரிக்கை!!
மாணவ - மாணவியர்: இம்மாதம் முழுவதும் கல்வித் துறையைக் கட்டுப்படுத்தும் அனைத்து கிரகங்களும், ஓரளவு சுப பலம் பெற்று வலம் வருகின்றன. ஆதலால், படிப்பில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக உள்ளது. தசா, புக்திகள் சாதகமாக - பலமாக இருப்பின் உயர் கல்விக்கு உதவிகள் கிடைக்கும். வெளிநாடு சென்று, பிரத்யேக உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். தேவையான உதவிகள் கிட்டும்.
விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாயும், இதர மற்ற கிரகங்களும் சிறிதளவே ஆதரவாக சஞ்சரிக்கின்றன! வயல் பணிகள் கடுமையாக இருக்கும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது சற்று கடினமே!! இந்நிலையில், கால்நடைகளின் பராமரிப்பிலும் செலவுகள் அதிகரிக்கும். அவை நோய்வாய்ப்படக்கூடும்.
பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, மன நிம்மதி குறையும். கணவர் மற்றும் நெருங்கிய உறவினருடன் கருத்துவேற்றுமை ஏற்படும். மாதவிடாய் மற்றும், சரும சம்பந்தமான உபாதைகள் உடலை வருத்தும். சிறு உபாதையானாலும், உடனுக்குடன் மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. வேலைக்கு முயற்சித்துவரும் மகளிர், மேலும் சிறிது காலத்திற்குக் காத்திருக்க வேண்டியுள்ளது. வேலை கிடைத்தாலும், அதில் மனத் திருப்தி இராது.
அறிவுரை: ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கக்கூடாது. உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.
பரிகாரம்: ஆலங்குடி, திட்டை திருத்தல தரிசனம் சிறந்த பலனையளிக்கும். இயலாதவர்கள், வியாழக்கிழமைகள் தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசித்துவிட்டு வந்தாலே போதும். குரு தோஷம் விலகிடும் - சூரியனைக் கண்ட பனிபோல்!
அனுகூல தினங்கள்
புரட்டாசி : 1, 2, 6-8, 12-15, 19-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி : 3 காலை முதல், 5 மாலை வரை. மீண்டும் 30 மாலை முதல், 31 வரை.