(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். அதே ஜென்ம ராசியில் சுக்கிரனும் அமர்ந்திருப்பதால், வருமானம் திருப்திகரமாக நீடிக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இராது. நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில், வரன் அமைவது தாமதப்படும். பாக்கிய ஸ்தானத்தில், சனி மற்றும் ராகு ஆகியோரின் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், திடீர்ச் செலவுகளில் பணம் விரயமாகும். உத்தியோகம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, தற்காலிகமாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் பாதிக்கப்படும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், பூர்வீகச் சொத்து ஒன்று கைவிட்டுப் போகும்.
உத்தியோகம்: உத்தியோகத்் துறைக்கு அதிபதியான சனி பகவான், ராகுவுடன் இணைந்து கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், வேலைச் சுமை அதிகமாக இருப்பினும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், அங்கீகாரமும் கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி! தற்காலிகப் பணியாளர்கள், அவரவரது வேலையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். வெளிநாடு சென்று, பணியாற்றி, பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். இடைத்தரகர்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
தொழில், வியாபாரம்: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவை, குரு பகவான் பார்ப்பதால், சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அனுகூலமான மாதமாகும் இந்த ஆவணி! நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தையளிக்கும்.
கலைத்துறையினர்: கலைத்துறை, பெரும்பாலும் சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அந்தச் சுக்கிரன் இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கலைத் துறையினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய காலகட்டமாகும். லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். அதன் காரணமாக, வருமானம் உயரும். உங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்துகொள்ள ஏற்ற தருணமிது. மக்களிடையே பிரபலமாவீர்கள். நீங்கள் நடிக்கும் திரைப்படங்கள், சின்னத் திரை ஆகியவை லாபகரமாக இருக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையும், சுக்கிரனின் பிடியில்தான் உள்ளது. இதனை சாணக்கியரின், “அர்த்த சாஸ்திரம்” என்ற நூலும் உறுதிசெய்கிறது. நவநந்தர்களை அழித்து, சந்திரகுப்த மௌரியரை அரியணையில் அமர்த்துவதற்கு, சுக்கிரனின் காலநிலை உதவியதைத் தனது நூலில் விவரித்துள்ளார், கௌடில்யர் எனும் சாணக்கியர். நவக்கிரகங்களில், சுக்கிரனே அரசியல் துறையை ஆக்கிரமித்துள்ளது என்பதை, சாணக்கியர் தனது அரசியல் நூலான அர்த்த சாஸ்திரத்தில் விளக்கியிருக்கிறார். அத்தகைய பெருமை பெற்ற சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்றுத் திகழ்வீர்கள். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிட்டும்.
மாணவ - மாணவியர்: மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! பாடங்களில் மனத்தைச் ெசலுத்துவது சற்று சிரமமாக இருக்கும். சோம்பலும், களைப்பும் உடலை வருத்தும். புத்தகத்தைக் கையிலெடுத்தாலே, உறக்கம் மேலிடும். நான்காம் வாரத்திலிருந்து, உடல்நலனில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மீண்டும் பாடங்களில் உற்சாகம் மேலிடும்.
விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாயும், மற்ற கிரகங்களும் இம்மாதம் முழுவதும் சாதகமாக இல்லை. அதிக வெயிலினால், பயிர்கள் வாடி, வதங்கி சேதப்படும். தண்ணீர்ப் பற்றாக்குறை, சற்று கடுமையாக இருக்கும். கால்நடைகள் நோய்வாய்ப்படுவதால், அவற்றின் சிகிச்சைக்காக செலவுகள் ஏற்படும். பழைய கடன்கள் தொல்லை தரும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சுக்கிரன், குரு ஆகிய இருவரில், சுக்கிரன் ஒருவரே உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கிறார். குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு வருமானப் பற்றாக்குறை, கவலையை அளிக்கும். குடும்பப் பிரச்னைகள் மன அமைதியைப் பாதிக்கும். வேலைக்குச் சென்றுவரும் வனிதையருக்கு, பணிச் சுமையும், மேலதிகாரிகளின் கண்டிப்பும் கவலையளிக்கும். உடல் நலனிலும் கவனம் வேண்டும். சரும சம்பந்தமான உபாதைகள் உடலை வருத்தக்கூடும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.மாத ஆரம்பத்திலிருந்தே கைப் பணத்தை எண்ணி எண்ணிச் செலவழிப்பது அவசியம்.
பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் கர்ப்பக் கிரகத்தில் எறியும் தூண்டாவிளக்கில் சிறிதளவு பசு நெய் செலுத்தி வந்தால் போதும்.
2) ஏழை ஒருவருக்கு அன்னமளிப்பது மிகச் சிறந்த பரிகார பலனைத் தரும்.
3) காலையில் காகத்திற்கு எள், நெய், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைப்பதும் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 4-7, 12-14, 16-18, 22-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 19 முதல், 21 முற்பகல் வரை.