(17-11-2025 முதல் 15-12-2025 வரை)
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: தன ஸ்தானத்தில், குரு பகவான் உச்ச கதியில் சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் பணப் பற்றாக்குறை இராது. தேவைக்கேற்ற வருமானம் இருக்கும். ஒருசிலருக்கு, தீர்த்த - தல யாத்திரை ஒன்றும் சித்திக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், கங்கா ஸ்நான பாக்கியமும், புகழ் பெற்ற புராதன தல யாத்திரை ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. மனத்தில் தெய்வீகச் சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு, மகான்களின் தரிசனம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. மனத்தில் தரும சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளான, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு ஆகியவை குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பூமி காரகரான செவ்வாய் சுப பலம் பெற்று வலம் வருவதால், பலருக்கு சொந்த வீடு அமையும் பாக்கியமும் உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் இணைந்து வக்கிர கதியில் சஞ்சரிப்பதாலும், தன ஸ்தானத்தில், உச்ச கதியில் குரு பகவான் அமர்ந்திருப்பதாலும், எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது. கடக ராசியில், குரு பகவான் உச்ச பலம் பெற்று சஞ்சரிப்பதால், விவாக முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறை பெரும்பாலும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. ஆதலால்தான், ஜோதிடக் கலை அவரை, "ஜீவன காரகர்" என போற்றுகிறது, அத்தகைய சக்திவாய்ந்த சனி பகவான், வக்கிர கதியில், ராகுவுடன் சேர்ந்து கும்ப ராசியில் வலம் வருவதால், பதவியுயர்வு, சலுகைகளுடன் இடமாற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு, நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. இதுவரை வேலையில்லாதவர்களுக்கு, புதிய வேலை காத்துள்ளது.
தொழில், வியாபாரம்: தொழில் அபிவிருத்தி சம்பந்தமாக, அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும், அதிக செலவும் இருக்கும், அலைச்சலையும், உழைப்பையும் கொடுத்து, அதன் பின்பு சிறந்த முன்னேற்றத்தையும், அளிப்பவர்கள் சனி பகவானும், நிழல் கிரகமான ராகுவும். சகக் கூட்டாளிகளுடன் சிறு சிறு கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும். "கொடுப்பதிலும், வேலை வாங்குவதிலும் சனி பகவான் சற்று கடினமானவரே. சோம்பேறிகளுக்கு அவர் உதவுவதில்லை! வேலை வாங்கினாலும், கூலி கொடுக்கத் தயங்காதவர் சனி பகவான்..." -எனப் போற்றுகிறது புராதன ஜோதிட நூல் ஒன்று! சனி பகவான் கண்டிப்பானவர்!! ஆனாலும், கொடுப்பதிலும் அவருக்கு அவரே நிகர் என அந்நூல் போற்றுகிறது. அலைச்சலும், கடின உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும் அதிகமாக இருப்பினும், வியாபார முன்னேற்றத்தையும், லாபத்தையும் சற்று தாராளமாக அளித்தருள்பவர் சனி பகவான்.
கலைத்துறையினர்: கலைத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாகவே சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானமும் உயரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள ஏற்ற மாதம் இது. கிரகங்கள் சற்று தாராளமாகவே இம்மாதத்தில் கொடுப்பதைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது, உங்கள் கைகளில்தான் உள்ளது! இதை ஏன் கூறுகிறோம் என்றால், சற்று தாராளமாகவே பணத்தைச் செலவழிக்கும் பழக்கம் மிதுன ராசி அன்பர்களுக்கு உண்டு. கையில் பணம் சேர்ந்தால் போதும்!! கணக்குப் பார்க்காமல், செலவு செய்யும் பலகீனம் உள்ளது உங்களுக்கு!
அரசியல் துறையினர்:இம்மாதம் முழுவதும் சுக்கிரன் சுப பலம் பெற்றுள்ளதால், கட்சியில் ஆதரவு குறையாது. விருச்சிக ராசியில், சூரியன், செவ்வாய் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரின் நட்பு பலவிதங்களிலும், இம்மாதம் உங்களுக்கு உதவ இருக்கிறது! இதை அனுபவத்தில் காணலாம்.
மாணவ - மாணவியர்: கார்த்திகை மாதம் 19-ம் தேதி வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! அதன் பின்பு, படிப்படியாக சுப பலம் பெறுகின்றன!! பிற மாணவ - மாணவியருடன் நெருங்கிப் பழகுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லாவிடில், தேவையற்ற பிரச்னைகளில் அகப்பட்டுக்கொள்ள வாய்ப்புள்ளதை கிரக சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆபத்து வரும் முன், நம்மை எச்சரிக்கை செய்கிறது, "ஜோதிடம்" எனும் அதியற்புதக் கலை!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, செவ்வாயின் ஆதிக்கத்தில்தான் உள்ளது! சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கும் விவசாயத் துறையில் ஆதிக்கம் உண்டு. கார்த்திகை 19-ம் தேதி வரை செவ்வாய், விருச்சிக ராசியிலும், அதன் பிறகு, தனுசுராசியிலும் சஞ்சரிக்கிறார்! விருச்சிகம், செவ்வாயின் ஆட்சி வீடாகும். தனுசு ராசிக்கு மாறியவுடன், (அதாவது கார்த்திகை 20-ம் தேதி) "குரு-மங்கள யோகம்" மும் அமைகிறது, விவசாயத் துறைக்கு சிறந்த யோக பலன்களை இக்கிரக நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது. தசா புக்திகளும் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம், கால்நடைகள் வாங்கும் யோகமும் உள்ளன.
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகள், திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்துவைத்துக் கொள்ள முடியும். கூடியவரையில், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மழைக் காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்பவர்கள்தான், எதிர்காலத்தில், நிம்மதியாக இருக்க முடியும். மற்றபடி, குடும்ப நிர்வாகத்தில் கடுமையான பிரச்னைகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், தன ஸ்தானத்தில், குரு பகவான் உச்ச பலம் பெற்று சஞ்சரிப்பதேயாகும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். ஏற்கனவே திருமணமாகியுள்ள பெண்மணிகள், கருத்தரிக்க கிரகநிலைகள் சிறந்த சுபபலம் பெற்றுத் திகழ்கின்றன.
அறிவுரை: நல்ல வாய்ப்புகளைச் சற்று தாராளமாகவே அள்ளித்தரும்படி முக்கிய கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
பரிகாரம்:சனி - ராகு கூட்டுச் சேர்க்கை நிகழ்ந்துள்ளதால், பாக்கிய ஸ்தானத்திற்கு, சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, தேவையற்ற வீண் செலவுகளில், பணம் விரயமாகும். சனி மற்றும் ராகுவிற்கு பரிகாரம் அவசியம். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைகளில், மாலையில் தீபத்தில் சிறிது பசு நெய் அல்லது எள் எண்ணெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வருவது, உடனுக்குடன் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்:
கார்த்திகை : 1-4, 8, 12-14, 18-20, 25-27, 29.
சந்திராஷ்டம தினங்கள்:
கார்திகை : 9-ந் தேதி முதல், 11-ந் தேதி முற்பகல் வரை.