(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: தன ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெற்று, சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் வக்கிர சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால், செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். எவ்வளவுதான் முயற்சித்தாலும், எந்தச் செலவையும் தவிர்க்க இயலாது. எதிர்பாராத வெளியூர்ப் பயணமொன்றும், செலவுகளுக்குக் காரணமாக அமையும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், பணம் செலவழியுமே தவிர, பலன் ஏதும் இராது. நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பணத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் பணப் பிரச்னைகளில் தலையிடாமலிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றது என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் வக்கிர சனி பகவானுடன் ராகு சேர்ந்திருப்பதால், பணிச் சுமையும், அலுவலகப் பிரச்னைகளும் மனத்தை அரிக்கும்.எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மேலிடும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். உணர்ச்சிவசப்படுவதையும், திடீர் முடிவுகளையும் தவிர்ப்பது அவசியம்.
தொழில், வியாபாரம்: இம்மாதம் முழுவதும் புதிய முதலீடுகளில் பணத்தை இழந்துவிடுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. முன்பணமின்றி, சரக்குகள் அனுப்புவதைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ளவும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சந்தை நிலவரத்தை முன்கூட்டியே விசாரித்து, அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு உங்கள் சரக்குகளின் விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம். சந்தையின் நியாயமற்ற போட்டிகள் கவலையை ஏற்படுத்தும்.
கலைத் துறையினர்: நியாயமற்ற போட்டிகளும், பொறாமையும் கவலையை அளிக்கும். வழக்கத்தைவிட, வருமானம் சற்று குறையும். வாய்ப்புகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மாதக் கடைசியில், நிதி தட்டுப்பாடு ஏற்படக்கூடும். ஆதலால், ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு, சிக்கனமாகச் செலவு செய்தல் நல்லது. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில்கூட எதிர்பார்க்கும் அளவிற்கு, வருமானம் கிடைப்பது கடினமே!
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த சுக்கிரனும், இதர கிரகங்களும் அனுகூலமாக இல்லை! உயர்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உயர்மட்டத் தலைவர்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பிறருடன் விவாதிக்க வேண்டாம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைத் தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன், வக்கிர கதியில் தனது பலத்தை இழப்பதால், இம்மாதம் முழுவதும் பாடுபட்டுப் படிக்க வேண்டியிருக்கும். அடிக்கடி உடல் ஆரோக்கியக் குறைவும், சகவாச தோஷமும் ஏற்பட்டு மனஉளைச்சலை உண்டாக்கும். கூடியவரையில் பிற மாணவ மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மைபயக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விளைச்சலும் வருமானமும் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். கடும் வெயிலில் உழைக்க நேரிடும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களாகிய உரம், விதைகள் ஆகியவை சற்று தாராளமாகவே கிடைக்கும். துலாம் ராசியில், செவ்வாயும், நீச்ச நிலை சூரியனும் சேர்ந்திருப்பதால், உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் உடலை வருத்தும். தகுந்த மருத்துவ சிகிச்சையினால் குணம் கிட்டும்.
பெண்மணிகள்: உடல் ஆரோக்கியத்தில், கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வேலைபார்க்கும் பெண்மணிகள், தங்கள் மாதச் சம்பளத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். மணமாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு, நல்ல வரன் அமைவது சற்று கால தாமதப்படும். பரிகாரம் உறுதியாக பலனளிக்கும்.
அறிவுரை: உடல் உழைப்பையும், வெயிலில் அலைவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்துவந்தால் போதும். எவ்விதத் தோஷமும் கதிரவனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்.ேகட்ப்பாரற்று இருக்கும் கோயிலில், தீபமேற்றி வைப்பது, உழவாரப் பணிகளைச் செய்வது (குப்பை கூளங்களை அகற்றி, மதில் சுவரிலும், கோபுரங்களிலும் படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றுவது, கோயிலைச் சுற்றி சுத்தம் செய்வது) மிகச் சிறந்த பரிகார பலனை அள்ளித் தரவல்லது. உழவாரப் பணி செய்வோருக்கு தண்ணீர் அல்லது நீர்மோர், பானகம் தருவது, உணவு அளிப்பது, சிறு பண உதவி செய்வது போன்றவற்றைச் செய்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்று உங்கள் சந்ததியினருக்கும் புண்ணியத்தைச் சேர்த்துவைப்பீர்கள். குறைந்தபட்சமாக, கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு, இலைகளை அங்கேயே போடுவது, கைகளில் உள்ள உணவுத் துகள்களைக் கோயில் தூண்களிலேயே தடவுவது போன்றவற்றையாவது தவிர்ப்பது இவைகள் புண்ணியங்களைச் சேர்க்காவிட்டாலும்கூட பரவாயில்லை! பாபங்களைச் சேர்த்துவிடக் கூடாதல்லவா?
அனுகூல தினங்கள்
ஐப்பசி : 1, 5-8, 14-16, 20-22, 27-29.
சந்திராஷ்டம தினங்கள்
ஐப்பசி : 11 இரவு முதல், 13 அதிகாலை வரை.