(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். வருமானம் போதிய அளவிற்கு உள்ளது. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவது நல்லது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு, தற்போதுள்ள வீட்டை விட, சற்று வசதியான வீட்டிற்கு மாற்றமேற்படும். சிலருக்கு, சொந்த வீடு வாங்கும் யோகமும் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவானின் சுபப் பார்வை, ஜீவன காரகரான சனி பகவானுக்குக் கிடைப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிறு பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, வெற்றி கிட்டும். சிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.
தொழில், வியாபாரம்: வர்த்தக முன்னேற்றத்திற்கு, ஏற்ற மாதம் இந்த ஆவணி என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன! புதிய முதலீடுகளில் துணிந்து ஈடுபடலாம். மார்க்கெட் நிலவரம் சாதகமாக இருக்கும். விற்பனையை அதிகரிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். வர்த்தகத் துறையில் புதிதாகப் பிரவேசிக்கும் அன்பர்களுக்கு, நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய விற்பனை நிலையங்்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது!
கலைத்துறையினர்: கலைத்துறை, சுக்கிரனின் ஆதிபத்தியத்தில்தான் உள்ளது! அந்த சுக்கிரன் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக வலம் வருவதால், வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும். மக்களிடையே பிரபலமாவீர்கள்!! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். சங்கீத சபாக்களின் ஆதரவு, மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சங்கீதம், பரத நாட்டியம், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் லாபகரமாக இயங்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையுடன் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்று வலம் வருவதால், கட்சியில் ஆதரவு ெபருகும். செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரின் தொடர்பும், நட்பும் கைகொடுத்து உதவும். சிலருக்கு, கட்சியில் பொறுப்புள்ள பதவியொன்றும் ேதடிவரும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையுடன் தொடர்புகொண்டுள்ள புதனும், மற்ற கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றலும், செயல்திறனும் அதிகரிக்கும். சிலருக்கு, வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறும் வாய்ப்பு கிட்டும். ஏற்கெனவேயே அந்நிய நாடுகளில் படித்துவரும் மாணவ-மாணவியருக்கு, அவரவரது பிராஜெக்ட்களை குறித்த காலகட்டத்தில் முடித்து, சமர்ப்பித்துவிடுவார்கள்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, பெரும்பாலும் பூமிகாரகரான செவ்வாயின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. சூரிய பகவானுக்கும், விவசாயத் துறையின்மீது அதிகாரம் உள்ளது. இவ்விருவரும் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும், அலுப்பில்லாத வயல் பணிகளும் இருக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெற கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, ஆதரவாக சஞ்சரிக்கின்றன, பெரும்பான்மையான கிரகங்கள்! ஆதலால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும், நிம்மதியும் நிலவும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்கு உகந்த வேலை கிடைக்கும்.
அறிவுரை: களத்திர ஸ்தானத்தில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், மனைவியின் உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம். சிறு உடல் உபாதையாகத் ேதான்றினாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
பரிகாரம்: 1. பரிகாரம் மிகவும் அவசியம். சனிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ கூடுதலாக பரிகார தீபம் மாலையில் ஏற்றிவருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.
2. அல்லது, சனிக்கிழமைகளில் பகலுணவு மட்டும் அருந்தி, இரவில் உபவாசமிருத்தல் கைமேல் பலனளிக்கும். (இயலாதவர்கள், இரவு வேளையில் பால் - பழம் சாப்பிடலாம்).
3. ஏழை ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து, உணவளிக்கலாம்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 1-4, 8-11, 15-18, 22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 23 மாலை முதல், 25 இரவு வரை.