search-icon-img
featured-img

துலாம்

Published :

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: சனி பகவான், ராகு, செவ்வாய் ஆகிய மூவரைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைவரும் உங்களுக்குச் சாதகமாக இம்மாதம் முழுவதும் சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆயினும், பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வார், சுக்கிரன்! குடும்பச் சூழ்நிலையில் அமைதி நிலவும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சிறு சுப நிகழ்ச்சிகளுக்கும் சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பெண் அல்லது பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் வரவு, குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். துலாம் ராசியில், பிறந்து, திருமணமாகியுள்ள பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு கிரக நிலைகள் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். சிலருக்கு வீடுமாற்றமும் ஏற்படக்கூடும் என்பதை சம்பந்தப்பட்ட கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஜீவனகாரகரான சனி பகவானை, தனது சுபப் பார்வையால் பலப்படுத்துவதால், பலருக்கு உத்தியோக உயர்வு கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. தற்போது நடைபெறும் தசா, புக்திகளுக்கு ஏற்ப இந்த உயர்வு அமையும். ஒருசிலருக்கு, பதவியுயர்வுடன், இடமாற்றமும் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையுடன் தொடர்புள்ள கிரகங்களனைத்தும், சாதகமாக சஞ்சரிக்கின்றன! படிப்படியாக விற்பனையும், லாபமும் அதிகரிப்பதை இம்மாதம் அனுபவத்தில் காணலாம். புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாதம் இந்த ஆவணி!! வெளிமாநிலப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரயாணங்கள் லாபகரமாக இருக்கும்!

கலைத்துறையினர்: அதிக முயற்சியின்றி, நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். பற்றாக்குறை இராது. சபா செகரட்டரிகள் உங்களை வரவேற்று, நல்ல நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிப்பார்கள். மக்களிடையே பிரபலமாவீர்கள். திரைப்படத் துறையினருக்கும் லாபகரமான மாதம் ஆகும் இந்த ஆவணி! தயாரிப்பாளர்கள், புதிய தயாரிப்புகளில் முதலீடு செய்யலாம். லாபம் கிட்டும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையுடன் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும், அனுகூலமான பாதைகளில் வலம் வருகின்றன. கட்சியில், ஆதரவு பெருகும். கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மிகப் பெரிய அரசியல் கட்சி ஒன்றிலிருந்து, அழைப்பு வரும் என்பதை சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. மாதத்தின் கடைசி வாரத்தில் உயர் மட்டத் தலைவர் ஒருவருடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு, புதிய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அப்போது, பேட்டிகளிலும் நிதானமாக பேசுவது, எதிர்காலத்திற்கு நல்லது. இல்லாவிடில், உங்கள் கட்சியிலேயே பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும். வாக்கு ஸ்தானத்திற்கு சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளது.

மாணவ - மாணவியர்: புதன் உள்ளிட்ட மற்ற கிரகங்களும், மூன்றாம் வாரத்திலிருந்து அனுகூலமாக மாறுகின்றனர். ஆதலால், முதல் இரண்டு வாரத்தில், படிப்பில் கவனம் குறையக்கூடும். சக-மாணவர்களினால், பிரச்னைகள் ஏற்படும். கடைசி இரண்டு வாரங்களில், படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஆசிரியர்களின் ஆதரவும் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்கள் பிடியில் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவு சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிட்டும். கால்நடைகளின் பராமரிப்பில், பிரச்னை ஏதும் இராது. பழைய கடன்கள் நீடிப்பதால், மன அமைதி குறையும். மாதம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை இராது.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பிரச்னை என்று எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை! வேலைக்குச் சென்று வரும் வனிதையருக்கு, பணிச் சுமை அதிகரிக்கும். சில தருணங்களில், பொறுமையை இழக்க நேரிடும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பின்பு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், மனத்திற்கு அது திருப்தியைத் தராது.

அறிவுரை: இம்மாதம் நன்மையும் பிரச்னைகளும் மாறி, மாறி வரும். சிரமங்கள் ஏற்படும்போது, பொறுமை மற்றும் நிதானம் அவசியம்.

2. வறியோருக்கு, அன்னதானமளித்தல் மிக மிக உயர்ந்த புண்ணிய பலனைத் தரவல்லது.

3. பசுவிற்கு பசும்புல்லை அல்லது அகத்திக் கீரை கொடுப்பதும் மகத்தான பலனை கொடுக்கும். தேவை திடமான நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே!

பரிகாரம்: சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். கைமேல் பலனளிக்கும்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 3-6, 9-11, 15-18, 22-25, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 1 முதல், 2 மாலை வரை. மீண்டும், 27 இரவு முதல், 29 பின்னிரவு வரை.