(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
17-8-2025 முதல் 16-9-2025 வரை
குடும்பம்: விரய ஸ்தானத்தில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், வரவிற்கு மீறிய செலவுகளைச் சமாளிக்க வேண்டி வரும். அர்த்தாஷ்டகத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், உறவினர்களிடையே வீண் வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படக்கூடும். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், மனைவியின் ஆரோக்கியம் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு, எளிய மருத்துவ சிகிச்சையினால் குணம் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் நீடிக்கும். வெளியூர்ப் பயணங்கள் ஏமாற்றத்தைத் தரும். மாத ஆரம்பத்திலிருந்தே, திட்டமிட்டு செலவு செய்தல் நல்லது. கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனெனில், பணத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
உத்தியோகம்: உத்தியோக ஸ்தானத்திற்கு உங்கள் ராசி நாதனாகிய குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோர் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வு, நிச்சயம்!! வேலைக்கு முயற்சித்துவரும் மீன ராசி அன்பர்களுக்கு வெற்றி உறுதி!
தொழில், வியாபாரம்: ராசி நாதனாகிய குரு பகவான், அர்த்தாஷ்டக ராசியில் சஞ்சரிக்கும் இம்மாதத்தில், ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியும் ஏற்பட்டுள்ளது. ஆயினும், ஜீவன ஸ்தானத்திற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது. எத்தகைய கடினமான போட்டியானாலும், அவற்றைத் திறமையுடன் சமாளித்து லாபம் காண்பீர்கள்! ஆயினும், புதிய முதலீடுகளை இம்மாதம் தவிர்த்தல் நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதிநிறுவனங்களின் ஆதரவும் நீடிக்கிறது. புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கு இம்மாதம் ஆதரவாக இல்லை கிரகநிலைகள்!!
கலைத்துறையினர்: கலைத் துறை, சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது! அந்தச் சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிக்கிறார், இம்மாதம் முழுவதும்!! லாபகரமான புதிய வாய்ப்புகள், எளிதில் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்திற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், கர்நாடக சங்கீதம், தமிழ் தேவார, திருவாசக திவ்யப்பிரபந்தப் பாடல்கள் பிரசித்திப் பெறும். கலைத் துறை அன்பர்களுக்கு, முன்னேற்றமான மாதம் இது! வெளிநாடுகளுக்குச் சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிட்டும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தனது பிடியில் வைத்துக்கொண்டுள்ள, வீரியம் நிறைந்த கிரகம் சுக்கிரனாவார்! அவர், குருவுடன் சேர்ந்து, ராசிக்கு சுக-ஸ்தானமாகிய மிதுனத்தில் அமர்ந்து, தனுர் ராசியைப் பார்ப்பது, மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைப்பதை எடுத்துக்காட்டுகிறது. தசா, புக்திகள் உங்களுக்கு சுப பலம் பெற்றிருப்பின், முக்கிய பதவி ஒன்றும் உங்களைத் தேடிவரும். அதன் காரணமாக, புதிய தொடர்புகள், ஏற்படும். அவையனைத்தும் உங்கள் எதிர்கால அரசியல் முன்னேற்றத்திற்குக் கைகொடுக்கும்.
மாணவ - மாணவியர்: கல்விக் கிரகமான புதன், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! படிப்பில், கவனம் குறையக்கூடும். படிக்க உட்கார்ந்தால், சோர்வும், அசதியும் மேலிடும். ஒரு சிலருக்கு, கூடா நட்பும் ஏற்படக்கூடும். தவிர்ப்பது அவசியம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள, செவ்வாய் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! வயல் பணிகள் கடினமாக இருக்கும். கடும் வெயிலில் உழைக்க நேரிடும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் வரத்தினால், பயிர்கள் சேதமடையக்கூடும். முன்கூட்டியே, பயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். அடிப்படை வசதிகள் குறையும்.
பெண்மணிகள்: அர்த்தாஷ்டக ராசியில், குரு - சுக்கிரன் இணைந்திருப்பதால், குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். கணவருடன் உள்ள அந்நியோன்யம் குறையும். நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும். உஷ்ண சம்பந்தமான, உபாதைகள் உடல் நலனைப் பாதிக்கும். கூடியவரையில், கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள். கற்பனையான கவலைகளைத் தவிர்ப்பதும் அவசியம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் கவனமாக இருக்கவும்.
அறிவுரை: திட்டமிட்டு, சிக்கனமாக செலவு செய்யுங்கள். நெருங்கிய உறவினர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கவலைகளையும், பயத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிடில், உங்கள் உடலும், மனமும் பாதிக்கப்படக்கூடும்.
பரிகாரம்: வியாழன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ பரிகார தீபம் ஒன்றை ஏற்றி வருவது உடனுக்குடன் உங்கள் நலனைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த பரிகாரம் என மிகப் புராதன நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.
2. காலை வேளையில் காகத்திற்கு, எள், பருப்பு, நெய், சாதவுருண்டை மூன்று வைத்துவருதல் மிகச் சிறந்த பரிகாரப் பலனைப் பெற்றுத் தரும்.
3. ஏழை ஒருவருக்கு அன்னமளித்தல் பலனைக் கைகூடாகக் காணலாம்.
4. தினமும் ஒரு சர்க்கம் ஸ்ரீமந் நாராயணீயம் படித்து வந்தால் ஸர்வரோக நிவாரணியாக விளங்கும். உங்களது ்அனைத்து பாபங்களும் விலகி நல்வாழ்வை மலரச் செய்திடும். இதனைக் கண்கூடாகக் கண்டு மகிழலாம்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 1, 2, 6-10, 15-18, 22-24, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 11 இரவு முதல், 14 காலை வரை.