search-icon-img
featured-img

தனுசு

Published :

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர், இந்தப் புரட்டாசி மாதத்தில்! வருமானத்திற்குக் குறைவிராது. பண வசதி போதிய அளவிற்கு உள்ளது. திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். முயற்சிகள் வெற்றியடையும். திருமண முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சியை அளிக்கும். வேலைக்கு முயற்சித்துவரும் பிள்ளை அல்லது பெண்ணிற்கு நல்ல வேலை கிடைப்பது, உற்சாகத்தைத் தரும். ஒரு சிலருக்கு, சொந்த வீடு அமையும் வாய்ப்பும் உள்ளது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பு கிடைப்பது உறுதி. சொத்து சம்பந்தமான பிரச்னைகள் சமரசத்தில் முடியும்.

உத்தியோகம்: சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் அனுகூலமான பாதைகளில் சஞ்சரிக்கின்றன. மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும், நிர்வாகத்தினரின் சலுகைகளும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தற்போதைய தசா, புக்திகளுக்கேற்ப, ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. வேலைக்கு முயற்சித்துவரும் தனுர் ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குத் திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: மிகவும் லாபகரமான மாதம் இது உங்களுக்கு. சந்தை நிலவரம் சாதகமாக உள்ளது. நியாயமற்ற போட்டிகள் குறையும், பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வெளி மாநிலப் பயணங்கள் லாபத்தைப் பெற்றுத் தரும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாதம் இந்த புரட்டாசி! நிதி நிறுவனங்களின் உதவி கிட்டும். அரசாங்க ஒப்புதல் தடையின்றிக் கிடைக்கும். புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.

கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள், அதிக முயற்சியின்றி எளிதில் தேடிவரும். வருமானம் உயரும். கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாகும். குரு பகவான் சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், ஓதுவா மூர்த்திகளுக்கு மக்களிடையே மதிப்பு அதிகரிக்கும். அரசாங்கத்தின் முயற்சியினால், பல திருக்கோயில்கள் புனர்நிர்மாணம் நடைபெறும்.

அரசியல் துறையினர்: புரட்டாசி 23-ம் தேதி வரை அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் நல்ல சுப பலம் பெற்றுள்ளதால், மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிட்டும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், அரசாங்கப் பதவி ஒன்றில் அமர்வதற்கும் வாய்ப்புள்ளது.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் தடையின்றி நீடிக்கிறது. மனம் பாடங்களில் உற்சாகத்துடன் ஈடுபடும். குரு பகவான் பார்வை பலத்தினால், நல்ல மாணவர்களின் சேர்க்கை ஏற்படும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம். அதற்கான அனைத்து உதவிகளும், "விசா"வும் அதிக முயற்சியின்றி கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைக் கட்டுப்படுத்தும் செவ்வாய் மட்டுமின்றி, மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், லாபகரமான மாதமாகும். அடிப்படை வசதிகளான, தண்ணீர், உரம், இடுபொருட்கள், நவீன விவசாய உபகரணங்கள் ஆகியவற்றிற்குக் குறைவிராது. நல்ல விளைச்சலும், வருமானமும் மனத்திற்கு நிறைவையளிக்கும். வயலைப் பார்த்தாலே, உள்ளம் குளிரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை முழுமையாக அடைத்து, நிம்மதி பெற ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி!

பெண்மணிகள்: சம்பந்தப்பட்ட கிரகங்கள், உங்களுக்கு ஆதரவாக நிலை கொண்டுள்ளனர்! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமைந்து, திருமணமும் நடைபெறும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிக்க உகந்த மாதம் இந்தப் புரட்டாசி!

அறிவுரை: வருகிறதே என்று, வீண் செலவுகளில் பணத்தை விரயம் செய்துவிட வேண்டாம். உங்களின் எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண சிற்றெறும்பு நமக்கு பாடம் கற்பிற்கிறது மழைக் காலத்திற்கென்று அவை சேமித்து வைப்பதைத்தான் நினைவூட்டுகிறோம்!

பரிகாரம்: தினமும் காலை - மாலை இரு வேளைகளிலும், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம், ஸ்ரீமீனாட்சி பஞ்சரத்னம், ஸ்ரீலட்சுமி அஷ்டோத்ரம், ஸ்ரீமந் நாராயணீயம் ஆகியவற்றில் எது முடிகிறதோ அவற்றைப் பாராயணம் செய்து வந்தால் போதும். மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். அனுபவத்தில் காணலாம்.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 4-9, 13-16, 20-22, 26, 27, 31.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 1 முதல், 3 காலை வரை. மீண்டும் 28 முற்பகல் முதல், 30 மாலை வரை.