இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

தனுசு

Published: 17 Nov 2025

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

குடும்பம்: ராசிக்கு அதிபதியான குரு பகவான், அஷ்டம ராசியில் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியக் குறைவையும், அலைச்சல்களையும் எடுத்துக்காட்டுகிறது. மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியாது. நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, உடனுக்குடன் சமாதானமடையும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமான பிரச்னைகளும் கவலையை அளிக்கும். வெளிநாட்டில் உத்தியோகத்திலுள்ள பிள்ளை அல்லது பெண் ஒருவரின் சொந்தப் பிரச்னைகள், மன நிம்மதியைப் பாதிக்கும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். விவாக வயதில் பெண்அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவது தாமதப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக ஜாமீன் கையெழுத்து போடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லாவிடில், தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு, அவற்றிலிருந்து விடுபடப் பாடுபடவேண்டியிருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் ஆபத்தான இத்தகைய தருணங்களில், நவகிரகங்கள் நம்மை வழிகாட்டி ஜாக்கிரதையாக நடத்திச் செல்கின்றனர்.

உத்தியோகம்: சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய மூவரும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், உத்தியோகத் துறையினருக்கு, பல நன்மைகள் ஏற்படும், அஷ்டம குருவினால், வேலை பார்க்கும் இடத்தில் உழைப்பும் பொறுப்புகளும் கடினமாக இருப்பினும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், ஆதரவும் மன நிறைவையளிக்கும், தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கும் ஊதிய உயர்வும், பதவியுயர்வும் கிட்டும். வேலையில்லாத தனுசு ராசி அன்பர்களுக்கு, மனத்திற்கு உகந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். ஒருசிலருக்கு இடமாற்றத்துடன், பதவியுயர்விற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வேலை நிமித்தம் காரணமாக, இதுவரை பிரிந்திருந்த கணவர் - மனைவி இம்மாதத்தில் ஒன்றுசேர்வர்.

தொழில், வியாபாரம்: இவ்விரு துறைகளுக்கும், ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும், உதவிகரமாக சஞ்சரிப்பதால், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் பொருட்களுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பை எதிர்பார்க்கலாம். நிதிநிறுவனங்கள் உதவும். புதிய கிளைகள் திறப்பதற்கு ஏற்றவாறு கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன, புதிய முதலீடுகளில் எவ்விதத் தயக்கமுமின்றி, இறங்கலாம் . லாபம் கிட்டும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு வெளிநாட்டின் பிரபல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து லாபகரமான ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர்: சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இருவரும் அனுகூலமாக மாறுவதால், கலைத் துறையினருக்கு நல்ல யோக பலன்கள் இம்மாதத்தில் காத்துள்ளன. லாபகரமான பல வாய்ப்புகள், முயற்சியின்றி உங்களைத் தேடி வரும். தசா , புக்திகள் சிறந்த சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு நடை பெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும், எளிதில் கிட்டும். வருமானமும், செல்வாக்கும் அதிகரிக்கும். புகழ் ஓங்கும். சங்கீத சபாக்களின் ஆதரவு பெருகும். கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகிய கலைஞர்கள் அதிக லாபம் பெறுவார்கள். பரதநாட்டியக் கலைஞர்களுக்கு புதிய பள்ளிகள் ஆரம்பிப்பதற்கும் ஏற்ற மாதம் இது.

அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தனது பிடியில் வைத்துக்கொண்டுள்ள சுக்கிரனும், அவருக்கு துணைநிற்கும் மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருகின்றனர், இம்மாதம் முழுவதும்! கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். சில அரசியல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும். அரசியலில் வெற்றிபெற ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன், சனி மற்றும் ராகு ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது, சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்!" இம்மூவரும் இந்த ராசியினருக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், கட்சியில் பரிபூரண ஆதரவு உள்ளது. முயற்சிகள் அனைத்திலும், வெற்றி கிட்டும். மக்களிடையே செல்வாக்கு உயரும்.

மாணவ - மாணவியர்: "வித்யாகாரகர்" -என பூஜிக்கப்படும் புதனும், கல்வித் துறையுடன் இணைந்துள்ள மற்ற கிரகங்களும், சுப பலம் பெற்று தோஷமின்றி சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவது நிச்சயம். உயர் கல்விக்கு உங்கள் விருப்பம்போல், பிரபல கல்லூரியில் இடம் கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், உயர் கல்விக்கு நிதியுதவியும் கிடைக்கும். கிரக நிலைகளின் அடிப்படையில் இம்மாதம் மாணவ - மாணவியருக்கு ஓர் அரிய சந்தர்ப்பமாகும். பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறமையில்தான் உள்ளது!

விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாயும், விவசாயத் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், நல்ல விளைச்சலும், வருமானமும் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வயல்கள், செழித்து வளரும். விவசாயத் துறைக்கு அவசியமான, அடிப்படை வசதிகள் குறைவின்றிக் கிடைக்கும். வயல்களின் செழுமை மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு, ஆதரவாக நிற்கும் சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருகின்றன, இம்மாதம் முழுவதும்! பெண்மணிகளுக்கு நினைத்தவைகள் நடக்கும். திருமண மாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கு உகந்த மணாளன் அமைவார். திருமணமாகியுள்ள பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு ஏற்ற மாதம் இந்த கார்த்திகை!

அறிவுரை: அஷ்டம ஸ்தானத்தில் (8-ம் இடம்) குரு சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம், மேலும் வீண் செலவுகளையும் தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பகலுணவு மட்டும் அருந்தி, இரவில் பால் - பழம் மட்டும் அருந்தி வந்தால் போதும். நல்ல பரிகாரப் பலன் கிடைக்கும்.

2. தினமும் காகத்திற்கு சிறிது நெய், பருப்பு, எள் கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வரவும். நல்ல பலன் கிடைக்கும்.

3. வியாழக் கிழமைகளில் தாயார், அம்பிகை, அம்மன், விநாயகப் பெருமான் சந்நதிகளில் மாலையில் மண் அகலில் நெய் தீபம் ஏற்றிவருதல் கைமேல் பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 1, 2, 6-10, 14-17, 21, 25, 26, 29.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 22-ந் தேதி முதல். 24-ந் தேதி காலை வரை.

பிறந்தநாள் பலன்கள்