search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: அர்த்தாஷ்டக ராசியில், வக்கிர கதியில் உள்ள சனியுடன் ராகுவின் சேர்க்கையும் 8-ம் இடத்தில் (அஷ்டமம்) குரு - சுக்கிரன் சேர்க்கையும் உடல் நலனைப் பாதிக்கும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. சிறு விஷயங்களுக்குக்கூட அதிக அலைச்சலும், கடின உழைப்பும், தேவைப்படும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்படும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில், தடங்கல்கள் உண்டாகும். கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் பாதிக்கப்படும். மாதக் கடைசியில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். கூடியவரையில், திட்டமிட்டு செலவு செய்தால் நல்லது.

உத்தியோகம்: பாடுபட்டு உழைத்துங்கூட, மேலதிகாரிகளைத் திருப்தி செய்ய இயலாது. உங்கள் அன்றாடக் கடமைகளில் ஏதாவதொரு குற்றங் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். சனி - ராகு கூட்டுச் சேர்க்கை, அர்த்தாஷ்டக ராசியில் ஏற்பட்டுள்ளது. அன்றாடப் பணிகளில், கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இருப்பினும், கும்ப ராசியில் இணைந்துள்ள சனி மற்றும் ராகுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், பாதிப்பு குறைவாகவே இருக்கும். உங்கள் பணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காத்தருள்வார் பூரண சுப கிரகமான, குரு! மேலதிகாரிகளின் அளவிற்குமீறிய கண்டிப்பு, கவலையை அளிக்கும். கூடியவரையில், வளைந்து கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது அவசியம்.

தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வியாபாரத் துறைகளுக்கும் அதிகாரி கிரகம் சனி பகவான்தான்! கோள்சார விதிகளின்படி, ராசிக்கு 4-ம் இடத்தில் (அர்த்தாஷ்டகம்) சனியும், ராகுவும் இணைந்திருப்பது, நன்மை தராது. சந்தையில் உங்கள் பொருட்களுக்கு, எதிர்பார்த்திருந்த விலை கிடைப்பது மிகவும் கடினம். மேலும், நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். இந்நிலையில், கூட்டாளிகளும் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், குறையும். பல சிக்கல்களை ஒரே தருணத்தில் சந்திப்பது, உங்கள் பொறுமைக்கு சோதனையாக அமையும். உணர்ச்சிவசப்படாமல், பிரச்னைகளை சமாளிக்க வேண்டும்.

கலைத்துறையினர்: “நிச்சயமாக நமக்குக் கிடைக்கும்....!” என்று உறுதியாக எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள், கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். ஏமாற்றத்தைத் தரும். வருமானமும் சற்று குறையக்கூடும். வெளிமாநில நிகழ்ச்சிகளிலும் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் கிடைக்காது. அதிக அலைச்சலினாலும், வசதி குறைவினாலும், உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். உங்கள் நலன் உங்கள் கையில்தான் உள்ளது!

அரசியல் துறையினர்: கட்சியில் அனைவருடனும் சுமுகமாக பழகுவது, மிகவும் அவசியம். உங்கள் எதிர்கால நலனிற்கு எதிராக சிலர் செயல்பட்டு வருவதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. “அரசியலில், வெற்றி பெற வேண்டுமென்றால், அனைவரையும் சந்தேகக் கண்களுடன்தான் பார்க்க வேண்டும்...! எவரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது....” எனக் கூறுகிறது, சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம். வார்த்தைகளை அதிஜாக்கிரதையாக உபயோகப்படுத்துங்கள். ஏனெனில், தற்போது கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன எனக் கூற முடியவில்லை.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டு்ள்ள கிரகங்கள் ஓரளவே உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். புத்தகத்தைக் கையிலெடுத்தாலே, சோர்வு மேலிடும். கூடியவரையில், நண்பர்களுடன் வெளியில் சுற்றுவதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என கிரக நிலைகள்குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

விவசாயத் துறையினர்: அதிக வெயிலினாலும், தண்ணீர்ப் பற்றாக்குறையினாலும் பயிர்கள் பாதிக்கப்படக்கூடும். கால்நடைகளின் பராமரிப்பிலும், செலவுகள் அதிகமாகி புதிய கடன்களை ஏற்க நேரிடும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகள், மிகவும் பொறுமையுடன் இருக்கவேண்டிய மாதமிது என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. அடிக்கடி ஏதாவதொரு வலியும், சோர்வும் உடலை வருத்தும். மாதவிடாய்க் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி, மூட்டுவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல் ஆகிய உபாதைகள் உடல்ஓய்விற்குக் கெஞ்சும். படுத்தால் போதும் என்ற உணர்ச்சி மேலோங்கும்.

அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி தகுந்த சிகிச்சை பெறுங்கள்.

பரிகாரம்: தினமும் காலை - மாலை இருவேளைகளிலும், கந்தர சஷ்டி கவசம் படித்துவரவும்.

2. தினமும் ஒரு சர்க்கம், ஸ்ரீமத் சுந்தர காண்டம் பாராயணம் செய்து வரவும்.

3. தினமும் காலையில் எள், பருப்பு, நெய் கலந்த மூன்று சாத உருண்டை காகத்திற்கு வைத்து வரவும்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 1, 5-8, 12-14, 19-21, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 2 மாலை முதல், 4 இரவு வரை. மீண்டும் 29 பின்னிரவு முதல், 31 வரை.