இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்

Published: 16 Sep 2025

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: சூரியன், புதன் ஆகிய இரு கிரகங்களைத் தவிர, மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை! அஷ்டம ராசியில் குரு பகவானும், அர்த்தாஷ்டகத்தில் வக்கிர சனியும் - ராகுவும் சஞ்சரிப்பது, அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. எப்பொழுதெல்லாம், நாம் எந்தெந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை, முன்கூட்டியே நமக்கு எடுத்துக் காட்டும் அற்புதக் கலை ஜோதிடம்! "வெள்ளம் வரும் முன் அணை கட்டுதல் வேண்டும்" எனும் அரிய பாடத்தை நமக்குக் கற்பிக்கிறது, இத்தெய்வீகக் கலை!! இரவு நேரப் பிரயாணங்களையும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்தல் அவசியம். ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். மாத ஆரம்பத்திலிருந்தே குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில், மாதக் கடைசியில் பிறர் உதவியை நாட வேண்டி வரும். கைப் பணத்தை, எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். பிறருடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்தல் மிக அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, பண - பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் அவசியம். திருமண முயற்சிகளில், தீர விசாரித்து வரனை முடிவு செய்தல் மிக, மிக அவசியம். ஏனெனில், தவறான வரனை நிச்சயித்துவிட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நீதி மன்றம் செல்லவேண்டிய அவசியம் ஏற்படக்கூடும்.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், வக்கிர கதியில் ராகுவுடன் சேர்ந்து, அர்த்தாஷ்டக ராசியில் சஞ்சரிப்பதால், உங்கள் அன்றாடப் பொறுப்புகளிலும், பணிகளிலும் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். பணியில் இருக்கும்போது, வேறு சிந்தனைகள் கூடாது. மேலும், உயரதிகாரிகளுடன் பணி சம்பந்தமாக விவாதிக்கும்போது, உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகப் பேசுவது மிகவும் அவசியம். எத்தகைய தருணங்களில் நாம், எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் - எங்கு ஆபத்து காத்துள்ளது? - எப்போது நாம் நம்மையுமறியாமல், தவறுகள் செய்துவிடக்கூடும் என்பதை மிகத் துல்லியமாக, சிறிதளவும் தவறாது எடுத்துக் காட்டி, வழிகாட்டும் எச்சரிக்கை ஒளியாகும் "ஜோதிடம்" எனும் வானியல் கலை! வேதகால ஜோதிடக் கலையின் (Vedic Astrology) பெருமையை மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானிய அறிஞரும், அணு சக்தியைக் கண்டுபிடித்தவருமான ஓப்பன் ஹைமர் ஆகியோர் புகழ்ந்து, பாராட்டியுள்ளனர்.

தொழில், வியாபாரம்: வக்கிர சனி மற்றும் ராகுவின் அர்த்தாஷ்டக ராசி சஞ்சார தோஷத்தினால், சந்தையில் கடும் போட்டிகளைச் சமாளித்து, லாபம் அடைவீர்கள். நிதி நிறுவனங்களின் ஆதரவு கைகொடுக்கும். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி. தசா, புக்திகள் ஆதரவாக இருப்பின், வெளிநாட்டின் பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலைத்துறையினர்: கலைத்துறைக்கு, அதிகாரம் படைத்த சுக்கிரன் ஓரளவே சாதகமாக உள்ளார். இத்துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும், அளவுடன்தான் சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால், வருமானமும் வாய்ப்புகளும் ஒரே சீராக இருக்கும். வருமானம் நீடிக்கும். ஆயினும், அது ஓரளவே கைகொடுக்கும். திட்டமிட்டுச் சிக்கனமாக செலவு செய்தால், மாதக் கடைசியில் சிரமப்படாமலிருக்கலாம். புரட்டாசி 22-ம் தேதி குருபகவான், கடக ராசிக்கு மாறுகிறார். கடகம், குரு பகவானுக்கு உச்ச ராசியுமாவார். அவ்வாறு மாறியவுடன், உங்கள் ராசிக்கு அவரது சுபப் பார்வை கிடைக்கிறது. அதன் நற்பலன்களை அனுபவத்தில் பார்க்கலாம்.

அரசியல் துறையினர்: புரட்டாசி 23-ம் தேதி வரை அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக இல்லை! பேச்சில், நிதானம் அவசியம். பிற கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம். மேல்மட்டத் தலைவர்கள் உங்கள் விசுவாசத்தைச் சந்தேகிக்கக்கூடும்.

மாணவ - மாணவியர்: புரட்டாசி 12-ம் தேதி வரை, கிரக நிலைகள் உங்களுக்கு அனுகூலமாக உள்ளதால், கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும். தேர்வுகளில், நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நேர்முகத் தேர்வுகளில், வெற்றி பெறுவது உறுதி! புரட்டாசி 13-ம் தேதியிலிருந்து, கிரகங்கள் ஓரளவே சாதகமாக உள்ளன. படிப்பில் நாட்டம் குறையக்கூடும். சகவாச தோஷம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தவிர்ப்பது மிகவும் அவசியம். இன்றைய தவறு, நாளைய உங்கள் நன்மைகள் பாதிக்கப்பட கூடும்.

விவசாயத் துறையினர்: விவசாயத்தைக் கட்டுப்படுத்தும் கிரகங்களின் சஞ்சார நிலைகள் இம்மாதத்தின் கடுமையான உழைப்பினை எடுத்துக்காட்டுகின்றன. அதிக வெயில், குறைந்த தண்ணீீர் வசதி, ஆடுகள், மாடுகள் ஆகியவற்றின் பராமரிப்பில் அதிகரிக்கும் செலவுகள் ஆகியவற்றால், புதிய கடன்களை ஏற்கவேண்டிவரும். கூடியவரையில் தவிர்க்க முயற்சியுங்கள்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் பெரும்பான்மையான நன்மை - தீமைகளைத் தீர்மானிப்பது குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களே! இவ்விரு கிரகங்களும், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை!! அர்த்தாஷ்டகத்தில் சஞ்சரிக்கும் சனி மற்றும் ராகுவும் சாதகமாக இல்லை. குடும்ப நிர்வாகத்தில், கவலை அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை, பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அறிவுரை: பொறுமை, நிதானம், பிறருடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுதல் அவசியம்.

பரிகாரம்: ஏழை ஒருவருக்கு, சனிக்கிழமையில் உடுக்க வஸ்திரம் கொடுப்பது, மிகச் சிறந்த பரிகாரம்.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 3-5, 9-12, 16-19, 23-25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 26 காலை முதல், 28 முற்பகல் வரை.

பிறந்தநாள் பலன்கள்