search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

17-9-2025 முதல் 17-10-2025 வரை

குடும்பம்: வருமானம் திருப்திகரமாக உள்ளது. செலவுகளும் அதற்கேற்ப இருப்பதால், சேமிப்பிற்கு வாய்ப்பில்லை! குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். "திருதீய குரு வனத்திலே...!" என்றொரு மூதுரையும் உள்ளது. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராமபிரான் வனவாசம் சென்றபோது, அவரது ஜாதகத்தில், குரு பகவான் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் சஞ்சரித்ததாக ஜோதிடக் கலை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, வனவாசத்திற்குச் சமமான துன்பங்களும், பிரச்னைகளும் ஏற்படும் என்பது பொருள். மாத ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்யாவிடில், மாதக் கடைசியில், சிரமப்பட வேண்டியிருக்கும். அல்லது, கடன் வாங்க வேண்டிவரும். களத்திர ஸ்தானத்தில், செவ்வாய் நிலைகொண்டுள்ளதால், கணவர், மனைவியரிடையே ஒற்றுமையின்மையும், அந்நியோன்யக் குறைவும் ஏற்படும். குடும்ப விஷயங்களில், பிறர் தலையிடுவதால், பிரச்னைகள் அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, அவர் பார்த்துவரும் பணியில், பிரச்னைகள் ஏற்படும்.

உத்தியோகம்: ஜீவனகாரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உத்தியோகத்தினருக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய கிரக சஞ்சார நிலையாகும். வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம், புதிய வேலைக்கு முயற்சித்துவரும் ரிஷப ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: லாப ஸ்தானத்தில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கையினால், வர்த்தகத் துறையினருக்கு நல்ல லாபம் ஏற்படும். சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது! ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கலைத் துறையினர்: கலைத் துறைக்குப் பூரண அதிகாரம் பெற்றுள்ள சுக்கிரன், சுப பலம் பெற்று சஞ்சரிக்கிறார். வருமானமும், வாய்ப்புகளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உருவாகும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள ஏற்ற மாதம் இது.

அரசியல் துறையினர்: அரசியல் துறை, சுக்கிரனின் பிடியில்தான் உள்ளது. இதனைச் சாணக்கியரின் "அர்த்த சாஸ்திர"மும் விவரித்துள்ளது. கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு மிகுந்த மந்திரி ஒருவரின் நட்பு, உங்களுக்குப் பக்கபலமாக உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபலமான அரசியல் கட்சியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். எந்த முடிவானாலும், ஆழ்ந்து சிந்தித்து, முடிவெடுப்பது உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாகும்.

மாணவ - மாணவியர்: புதன் கிரகமே "வித்யா காரகர்" என விவரிக்கிறது, ஜோதிடக் கலை! மற்ற கிரகங்களுக்கும், ஓரளவு கல்வித் துறையுடன் தொடர்பு இருப்பினும், புதன் கிரகமே பிரதான கிரகமாக விவரிக்கிறது, ஜோதிடக் கலை! அந்தப் புதன், இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், மாணவ - மாணவியருக்குக் கல்வியில் நல்ல முன்னறே்றம் ஏற்படும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். விசேஷ உயர் கல்வி பெறுவதற்கு வெளிநாடு சென்று வரும் ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். அனைத்து உதவிகளும், எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள செவ்வாய், குரு பகவானின் சுபப் பார்வை பெற்று சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறுவதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன.

பெண்மணிகள்: குரு - சுக்கிரன் ஆகிய இருவரும் பெண்மணிகளுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி! வேலைக்குச் சென்று வரும் வனிதையருக்கு, அலுவலகத்தில், நிம்மதியான சூழ்நிலை நிலவும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்களும் வேலைப் பளுவைச் சுலபமாக்கும். மேலும், பணிகளில் உற்சாகத்தை அதிகரிக்கும். கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யத்தில் குறைவிராது. மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகரிக்கும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.

அறிவுரை: ரோக ஸ்தானத்தில், செவ்வாய் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான பிணிகள் ஏற்படக்கூடும். எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கணவர் - மனைவியரிடையே நிலவும் அந்நியோன்யக் குறைவிற்கு, இருவருள் ஒருவர் சற்று விட்டுக்கொடுத்தும், நிதானத்துடனும் செயல்பட்டால் குடும்பப் பிரச்னையில் ஏதுவித விரிசல்களும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் உகந்த நற்பயன்களைத் தரவல்லது அல்லவா?

பரிகாரம்: செவ்வாய்க் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிதளவு பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்

புரட்டாசி : 3- 5, 9-11, 16-18, 23-25, 28-30.

சந்திராஷ்டம தினங்கள்

புரட்டாசி : 12 பின்னிரவு முதல், 15 பிற்பகல் வரை