search-icon-img
featured-img

கன்னி

Published :

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: ஜென்ம ராசியில், அக்னி கிரகமான செவ்வாயும், விரய ஸ்தானத்தில், சூரியனும் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையினால் குணம் ஆகும். வருமானம் திருப்திகரமாக இருப்பினும், செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். தசா, புக்திகள் அனுகூலமில்லாமல் இருப்பின், மாதக் கடைசியில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். தவிர்ப்பது நல்லது. திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், வரன் அமைவது கடினம். வருவாயை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும்.

உத்தியோகம்: கும்ப ராசியில் சனி - ராகு இணைந்திருப்பது, வேலை பார்க்கும் இடத்தில், நன்மைகள் ஏற்படவிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலதிகாரிகளும், சக-ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு சென்று, பணியாற்றும் ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். எளிதில், வெற்றி கிட்டும். சிலருக்கு, பதவி உயர்வும், வெளியூர் மாற்றலும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். புதிதாக, வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, நல்ல செய்தி காத்துள்ளது.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்கும், விற்பனைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஏற்ற மாதம் இந்த ஆவணி என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. புதிய விற்பனைக் கிளைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு எளிதில் கிட்டும். ஏற்றுமதித் துறையினருக்கு, வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். புதிய முதலீடுகளில் துணிந்து ஈடுபடலாம்.

கலைத்துறையினர்: லாபகரமான, புதிய வாய்ப்புகள், அதிக முயற்சியின்றி, உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள உகந்த மாதமிது! வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள், சங்கீத வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ற மாதமாகும் என்பதை, சுக்கிரன் உள்ளிட்ட மற்ற கிரகங்களும் எடுத்துக்காட்டுகின்றன. சிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். திரைப்படத் துறையினருக்கு, தொடர்ந்து சில வருடங்களாகவே ஏற்பட்டு வந்த பின்னடைவு, இப்போது நீங்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் படைத்த சுக்கிரனும் மற்ற கிரகங்களும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உயரும். உயர்மட்டத் தலைவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள்! தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், கட்சியில் முக்கிய பதவியொன்றை ஏற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது கிரகநிலைகளின்படி!

மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும், உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ளதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். ஆசிரியர்களின் ஆதரவு படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வெளிநாடு சென்று, பிரத்யேக உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். முயற்சி செய்தால், “ஸ்காலர்ஷிப்” கிடைப்பதற்கும் கிரக சஞ்சார நிலைகள் சாதகமாக அமைந்துள்ளன.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தனது அதிகாரத்திற்குள் வைத்துக் கொண்டுள்ளது செவ்வாய் கிரகம்! ஆதலால்தான் அவரை, “பூமிகாரகர்” எனப் புகழ்கிறது, ஜோதிடக் கலை. அவர், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், நல்ல விளைச்சலும், வருமானமும் உங்களுக்குக் கிடைக்கும். வயல் பணிகளுக்கு, அவசியமான இடுபொருட்கள், தண்ணீர் வசதி, உரம், விதை மற்றும் நாற்றுகள் அனைத்தும் எவ்வித தடங்கலுமின்றி கிடைக்கும்.

பெண்மணிகள்: ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் குரு - சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டிருப்பதால், குறிப்பாக, வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, உற்சாகமான மாதமாகும். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் மாதம் இது.

அறிவுரை: ஜென்ம ராசியில், உஷ்ண கிரகமான செவ்வாய் அமர்ந்திருப்பதால், வெயிலில் அலைவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு வகைகளையும், குளிர் பானங்களையும், கனி வகைகளையும் (பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள்), ஐஸ்கிரீம், ஐஸ் சேர்த்த குளிர்ப்பானங்கள் போன்றவைகளைத் தவிர்த்தல் வேண்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில், அம்பிகை, ஸ்ரீமகாலட்சுமி, நவக்கிரக சந்நதிகளில் மாலையில், நெய் தீபம் ஏற்றி வருவது நல்ல பலனையளிக்கும். அம்மன் மற்றும் தாயார் சந்நத்ிகளில், காலை - மாலை இருவேளைகளிலும் குடங்களில் குளிர் நீர் கொண்டு, தீர்த்தம் தெளித்தல்.

2. குளிர்ந்த நீரை தெளித்த வெட்டிவேர் மாலை சாற்றி வழிபடலாம்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 2-4, 8-11, 15-18, 22-24, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 25 இரவு முதல் 27 வரை.