(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
18-10-2025 முதல் 16-11-2025 வரை
குடும்பம்: குரு, சுக்கிரன், வக்கிர சனி மற்றும் ராகு ஆகிய நால்வரும் சாதகமாக சஞ்சரிப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! லாப ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று நிலை கொண்டுள்ளதால், திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும், குடும்பத்தில், பரஸ்பர அந்நியோன்யம் நிலவும், சப்தமாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், திருமணமான பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு அமைந்துள்ளது. ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சொந்தவீடு அமையும் பாக்கியமும் உள்ளது. குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும்‘ சமாளிப்பதில் சிரமம் ஏதும் இராது. வெளியூர்ப் பயணங்களில், சென்ற காரியம் நிறைவேறும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறையை தனது அதிகாரத்தில் கொண்டுள்ள சனி பகவான், வக்கிர கதியில், ராகுவுடன் சேர்ந்து அனுகூலமாக நிலை கொண்டுள்ளதால், வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகள் மற்றும் சக-ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு, அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வு மற்றும் சிறு பதவியுயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது, ஒருசிலருக்கு பதவியுயர்வும், வெளியூர் மாற்றமும் ஏற்படக்கூடும், வேலையில்லாமல் கவலையுற்றிருக்கும் இளைஞர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் மனத்திற்கு உகந்த பணி கிடைக்கும். சொந்த வியாபாரம் ஆரம்பிப்பதற்கு, ஏற்ற மாதம் இந்த ஐப்பசி!
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம், மிகவும் சாதகமாக அமைந்துள்ளது, இம்மாதம் முழுவதும்! உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். போட்டிகள் கடுமையாக இருப்பினும், அவற்றைச் சமாளித்து, லாபம் காண்பீர்கள். அளவோடு முதலீடு செய்து, வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம். புதிய விற்பனைக் கிளைகள் ஆரம்பிப்பதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்று வலம் வருகின்றன. இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
கலைத் துறையினர்: கலைத் துறையின் பெரும் பகுதியை, தனது அதிகாரத்தில் கொண்டுள்ள சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், கலைத் துறை அன்பர்களுக்கு, லாபகரமான மாதமாகும் இந்த ஐப்பசி! நல்ல வாய்ப்புகள் கிடைத்து, வருமானம் உயரும். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் கிட்டும். மக்களிடையே செல்வாக்கு உயரும். கர்நாடக சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் ஆகியோருக்கு, நல்ல வாய்ப்புகளும், வரவேற்பும் கிட்டும், வருமானமும் உயரும், திரைப்பட நடிகர் - நடிகைகள், புகைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், சின்னத் திரைத் தயாரிப்பாளர்கள் ஆகியோர் சுக்கிரனின் சுப பலன்களை அனுபவிப்பார்கள்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையின் பெரும் பகுதியைத் தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ளவர், சுக்கிரன் எனக் கூறுகிறது, சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" எனும் ஒப்பற்ற நூல்! அத்தகைய பெருமை பெற்ற சுக்கிரன், அனுகூலமாக வலம் வருவதால், அரசியல் துறை அன்பர்களுக்கு, பல நன்மைகள் ஏற்படவுள்ளன, இந்த ஐப்பசி மாதத்தில்!
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை, தனது அதிகாரத்தில் கொண்டுள்ளது, "வித்யா காரகர்" என ஜோதிடக் கலை புகழாரம் சூட்டும் புதன் கிரகம்! அவர், சுப பலம் பெற்று வலம் வருகிறார், இம்மாதத்தில்! கல்வித் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும் அனுகூலமாக இருப்பதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும், கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று, கல்வித் துறையில் பிரத்யேக தகுதி பெற வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இம்மாதம் முயற்சிக்கலாம். முயற்சி திருவினையாக்கும்!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தனது நேரிடையான கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் இரண்டு! ஒன்று, சூரியன் மற்றொன்று செவ்வாய்!! மற்ற கிரகங்களுக்கும், ஓரளவு விவசாயத் துறையின் மீது ஆதிக்கம் உள்ளது. இவ்விரு கிரகங்களில், சூரியன் இம்மாதம் பலம் குறைந்துள்ளார்! ஆதலால், வயல் பணிகள் சற்று கடினமாக இருக்கும். கடும் வெயிலில் உழைக்க வேண்டிவரும். இருப்பினும், பலன் திருப்திகரமாகவே இருக்கும். விளைச்சல் மனநிறைவையளிக்கும்.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், விருப்பங்கள் நிறைவேறும்! வக்கிர சனி, ராகுவுடன் இணைந்திருப்பதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகளும், சரும பாதிப்பும் கவலையை அளிக்கும். புதன் சாதகமாக இருப்பதால், எளிய மருத்துவ சிகிச்சையால் பூரண குணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வரன் அமைவதில் தாமதம் ஏற்படும்.
அறிவுரை: கடின உழைப்பையும், உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பண்டங்களை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, தரிசித்துவிட்டு வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
ஐப்பசி : 1, 2, 6-8, 13-15, 21-23, 27-29.
சந்திராஷ்டம தினங்கள் ஐப்பசி : 18 முற்பகல் முதல், 20 பிற்பகல் வரை.