இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம்

Published: 24 Apr 2025

(26-4-2025 முதல் 25-11-2026 வரை)

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: 7½ சனிக் காலத்தில், ஜென்ம ராசியில் ஏற்பட்டுள்ளது, இந்தச் சனி - ராகு கூட்டுச் சேர்க்கை! வரவைவிடச் செலவுகளே அதிகமாக இருக்கும். மிகவும் சிக்கனமாக செலவு செய்வது, அவசியம். கூடியவரையில், கடன் வாங்காமல், சமாளிக்கவும்! வட்டியைவிடக் கொடிய விஷம் வேறில்லை!! எத்தனையோ நல்ல குடும்பங்களைக் கடன் என்னும் "தீ" அழித்துள்ளது. கடன் வாங்கித் தயிர் சாதம் உண்பதைவிட, கடன் வாங்காமல் மோர் சாதம் சாப்பிடுவது - மனநிம்மதியை அளிக்கும். கணவர் - மனைவியரிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். ஏதாவதொரு ஓர் உடல் உபாதையும் ஏதோ ஒரு வியாதி உள்ளது என்ற கற்பனையான பயமும் மனதை அரிக்கும். குடும்பத்தில், சிறு பிரச்னை எழுந்தால்கூட, முன்கோபமும், பிடிவாதமும், முகத்தைக் "கடுகடு"வென தூக்கி வைத்துக் கொள்வது போன்ற அனுபவங்கள் ஏற்படக்கூடும். மனப் பயமே உடல்நலனைப் பாதிக்கும். திருமண முயற்சிகளில் வரன் அமைவது கடினமாகும்.

உத்தியோகம்: உத்தியோகத்திற்கு அதிகாரம் படைத்த கிரகம், சனி பகவானே! அவர் ராகுவுடன் ஜென்ம ராசியில் சேர்ந்திருப்பது, நல்லதல்ல!! வேலைப் பார்க்கும் இடத்தில், பல பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டிவரும். சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுகளும், ஒத்துழையாமையும் கவலையை அளிக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, பணிகளில் வெறுப்பை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் கும்ப ராசியினருக்கு, தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்கள், பல காரணங்களினால், தாய் நாடு திரும்பவேண்டியிருக்கும்.

தொழில், வியாபாரம்: ஏழரைச் சனியின் இரண்டாம் பகுதி நடைபெறுகிறது! இப்போது உங்களுக்கு, இதனை ஜென்மச் சனி (வாக்கியப்படி) தோஷம் எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை! வர்த்தகத் துறையினருக்கு, அதிக அலைச்சலையும், வௌியூர்ப் பயணங்களையும் உடல் உழைப்பையும் ஏற்படுத்துவார், சனி பகவான் எனக் கூறுகின்றன, புராதன ஜோதிட நூல்கள், இத்தகைய தருணத்தில், ராகுவும், சனி பகவானுடன் சேர்ந்திருப்பது, பல கஷ்டங்களை உண்டுபண்ணும் என்கிறது, ஜோதிடக் கலை. சந்தை நிலவரம் சாதகமாக இருக்காது. நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். வங்கி போன்ற நிதிநிறுவனங்களும் பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள்.

கலைத் துறையினர்: சனி - ராகு சேர்க்கை, பலவித ஏமாற்றங்களை ஏற்படுத்தும்! எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள், எவ்விதக் காரண-காரியமுமில்லாமல் கைநழுவிப் போகும், மனதளவில் கிலேசத்தை அடைவீர்கள். வருமானம் குறையும். சிலருக்கு, கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்படுத்துவார்கள் சனி பகவானும், ராகுவும்! கிடைக்கும் சில வாய்ப்புகளிலும் எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்காது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு படப்பிடிப்பின்போது ஒப்புக்கொண்டுள்ளபடி கலந்துகொள்ள முடியாமல் தடங்கல்களும், பிரச்னைகளும் ஏற்படும். தயாரிப்பாளர்களுக்கு, எதிர்பார்த்திருந்த நிதியுதவி தக்க தருணத்தில் கிடைக்காமல், ஏமாற்றத்தைத் தரும்.

அரசியல் துறையினர்: பேச்சு, செயல் ஆகியவற்றில் நிதானமாக இருக்க வேண்டிய தருணம் இது என்பதை சனி - ராகுவின் கும்பராசி சேர்க்கை எ ச்சரிக்கை செய்கிறது. பிற கட்சிப் பிரமுகர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசி, சட்டப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள சாத்தியக்கூறு உள்ளதைப் பிரதிபலிக்கிறது தற்போதைய கிரக நிலைகள்! எத்தருணத்திலும், உணர்ச்சிவசப்பட்டு, நிதானத்தை இழந்து பேசிவிடக் கூடாது என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. மேல்மட்டத் தலைவர்களின் உதாசீனப் பார்வையும், அதனால் கட்சியிலும் ஆதரவு குறையக்கூடும்.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலுமின்றி, நீடிக்கும். சிறு, சிறு உடல்உபாதைகள் அவ்வப்போது ஏற்பட்டு, ஓய்வெடுக்க நேரிடும். இதன் காரணமாக, தொடர்ந்து பாடங்களில் கவனம் செலுத்துவது சற்று சிரமமாக இருக்கும். விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றில் கலந்துகொள்ள முடியாதபடி உடல் ஆரோக்கியம் பாதிப்பிற்குள்ளாகும்.

விவசாயத் துறையினர்: வயலில் உழைப்பு கடினமாக இருப்பினும், உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது மன நிறைவையளிக்கும். இரவு நேரப் பணிகளின்போது, சற்று விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். விஷ ஜந்துக்களினால் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். அண்டை நிலத்தாரோடு வரப்பு பிரச்னை அதனால் வாக்குவாதமும், பகையுணர்ச்சியும் மேலிடக்கூடும். தவிர்ப்பது நன்மை செய்யும்.

பெண்மணிகள்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ஆகவே, ஆரோக்கியத்தில் கவனமாகவும், கண்ட இடங்களில் உணவருந்துவதையும் தவிர்த்தல் வேண்டும். குடும்பக் கவலைகள், குழந்தைகளின் கல்வி, மகளின் திருமணம் ஆகியவை பற்றிய கவலைகள் மனநிம்மதியைப் பாதிக்கும். இரவு - பகல் எந்நேரமும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் உடல் நலனைப் பாதிக்கும். பல கவலைகள் கற்பனையானவையே. மணமாலைக்குக் காத்துள்ள வனிதையருக்கு வரன் அமைவதில் கால தாமதமும், தடங்கல்களும் தவிர்க்க இயலாதவைகளாகி விடும்.

அறிவுரை: கூடிய வரையில், மனதை யோகா மூலம் அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். உணர்ச்சிவசப்பட்டு, பிறரிடம் உங்கள் மனக் குறைகளை வெளிப்படுத்த வேண்டாம்.

பரிகாரம்: சனி, ராகு இருவருக்குமே பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும். திருக்கோயில் ஒன்றில், சனி, செவ்வாய்க் கிழமை மாலையில், ஐந்து தீபங்கள் ஏற்றிவருவது கண்கண்ட பரிகாரமாகும். ஒவ்வொரு தீபத்திற்கும் அளவற்ற பரிகார சக்தி கொண்டது.

பிறந்தநாள் பலன்கள்