(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் இருந்து வந்த ராகு, இனி லாப ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு மாறுவது மிகவும் அனுகூலமான மாறுதலாகும்! ஏற்கனவே நாங்கள் கூறியுள்ளபடி, "கொடுப்பதில் ராகுவிற்கு இணை அவரே…!" வரும் சுமார் ஒன்றரை வருடக் காலத்தில், நிதி நிலைைமயில் மிக நல்ல மாற்றம் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம். வருமானம், தற்போது நடைபெறும் தசா, புக்திகளுக்கு ஏற்ப உயரும். இதுவரை விரய ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருந்ததால், தொடர்ந்து ஏற்பட்டுவந்த வீண் செலவுகள் குறையும். ஒரு சிலருக்கு, எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை, ராகுவின் நிலை எடுத்துக் காட்டுகிறது. சென்ற பல வருடங்களாக, மனத்தை அரித்து வந்த கடன்களை அடைத்து, நிம்மதி பெற வழிபிறக்கும். பணப் பற்றாக்குறையினால், தாமதமாகியிருந்த பெண்ணின் திருமணம் நடைபெற வழிவகுத்தருள்வார், ராகு! இதுவரையில், உங்கள் ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், சஞ்சரித்துவந்த கேது, இனி, பூர்வ புண்ணிய - புத்திர ஸ்தானமாகிய சிம்ம ராசிக்கு மாறுவது, ஓரளவு நன்மைகளை அளிக்கும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக, பணம் செலவழியும். தீர்த்த, தல யாத்திரை சித்திக்கும். மகான்கள், பெரியோர்களின் ஆசியும் கிட்டும். ஒரு சிலருக்கு, பூர்வீகச் சொத்து ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: ராகுவின் கும்ப ராசி சஞ்சாரம், உயர்ந்த நற்பலன்களை அளிக்கக்கூடியதாகும். இதுவரை மறுக்கப்பட்டுவந்த, பதவி உயர்வு,ஊதிய உயர்வு ஆகியவற்றை இனி எதிர்பார்க்கலாம். கேதுவின் நிலை காரணமாக, பலருக்கு, ஊதிய உயர்வுடன், இடமாற்றமும் ஏற்படக்கூடும். தசா, புக்திகளுக்கு ஏற்ப, வேலையிலும் நல்ல மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளதை ராகுவின் நிலை மாறுதல் எடுத்துக்காட்டுகிறது.
தொழில், வியாபாரம்: பல ஆண்டுகளாக, பின்னடைவினால் சிரமப்பட்டு வந்த உங்களுக்கு, ஆதரவாக மாறியிருக்கிறார், ராகு! அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கும் காலத்தில் ராகு, கணக்குப் பார்க்காமல், லாபத்தை அள்ளிக் கொடுப்பார். உங்கள் வியாபாரத்தையும், தொழிலையும் விருத்தி செய்துகொள்ள வழிவகுத்தருள்கிறார், இப்போது ராகு!! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய தொழிற்சாலையை வாங்கும் யோகமும் உள்ளது. இதுவரை நஷ்டத்தைச் சந்தித்து வந்த கிளைகள்கூட, இனி படிப்படியாக லாபத்தைப் பெற்றுத் தரும். இருப்பினும், ராகுவிற்கு நேரெதிராகச் சஞ்சரிக்கும் கேதுவினால், அடிக்கடி உடல் ஆரோக்கியக் குறைவும், வியாபாரம் சம்பந்தமாக, அதிக அலைச்சலும் வெளியூர்ப் பயணங்களும் சோர்வை ஏற்படுத்தும். சிம்மம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகத் திகழ்வதால், குடும்பத்தினருடன் பிரபல திருத்தல தரிசனமும், தீர்த்த-தல யாத்திரை யோகமும், மகான்களின் தரிசன பாக்கியமும் கிட்டும். இருப்பினும், சிம்ம ராசி, புத்திர ஸ்தானமாகவும், விளங்குவதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கேதுவின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.
கலைத் துறையினர்: சித்திரை 28-ம் தேதியிலிருந்து, (மே மாதம் 11-ந் தேதி) ராகுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பது, மேலும் பல நன்மைகளை உங்களுக்கு வாரிவழங்கக்கூடிய கிரக நிலையாகும்! சிலருக்கு வெளி நாடு சென்று - வரும் யோகமும், அதன் மூலம் வருமான உயர்வும் ஏற்படவுள்ளது. கர்நாடக சங்கீத வித்வான்கள், நாதசுவர வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், ஆன்மிக உபன்யாசகர்கள் ஆகியோருக்கு லாபகரமான காலகட்டம் ஆரம்பமாகிறது! பலருக்கு, சொந்த வீடு கட்டும் பேறு உள்ளதையும், பூமி காரகரின் சஞ்சார நிலை குறிப்பிடுகிறது. கேதுவின் நிலையினால், மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும்.
அரசியல் துறையினர்: ராகுவிற்கு அரசியல் துறையின்மீது நேரிடையான ஆதிக்கம் உள்ளதை, சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" சான்று கூறுகிறது. நவநந்தர்களைத் தன்னந்தனியாக நின்று, பல அரசியல் சூழ்ச்சிகளையும் முறியடித்து, அவர் வெற்றி பெற்றதற்கு, அவரது ஜாதகத்தில், ராகுவின் நிலையே முக்கிய காரணமாகும் என்பதை அவரே, தனது நூலில் விவரித்துள்ளார். அடுத்து வரும் சுமார் 18 மாதங்களுக்கு, ராகு உங்களுக்குத் துணை நிற்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முயற்சிகள் அனைத்திலும், வெற்றி பெறுவீர்கள்.
மாணவ - மாணவியர்: கும்பம், உங்கள் ராசிக்கு, லாப ஸ்தானமாகும்! சிம்மம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகத் திகழ்கிறது!! ஆதலால், இந்த ராகு - கேது பெயர்ச்சி, சிறந்த கல்வி முன்னேற்றத்தை உங்களுக்கு அளிக்கவுள்ளது. உயர் கல்விக்கு, உங்கள் விருப்பம்போல் பிரபல கல்லூரியில் இடம் கிடைக்கும். தேவையான நிதியும் கூட அதிக சிரமப்படாமலேயே, நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உதவ முன்வரும்.
விவசாயத் துறையினர்: உங்கள் ராசிக்கு, கும்பம் லாப ஸ்தானமாக அமைந்திருப்பதால், ராகுவினால் நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். சித்திரை 28-ம் தேதி, மிதுன ராசிக்கு மாறும் குருவின் சுபப் பார்வை ராகுவிற்குக் கிடைப்பதால், மேலும் பல நன்மைகள் ஏற்படும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். தற்போது நடைபெறும் தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகத்தையும் தந்தருள்கிறார், ராகு! இதே தருணத்தில், கேது ஓரளவே அனுகூலமாக நீடிப்பதால், கால்நடைகள் அபிவிருத்தியடையும். ஆயினும், கேதுவினால் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: இந்த ராகு - கேது ராசி பெயர்ச்சி, உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியதாகும். பலருக்கு வசதியான வீடு அமையும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு ஊதிய உயர்வு கிட்டும்.
அறிவுரை: கேதுவின் சஞ்சார நிலையினால், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படக்கூடும்.
பரிகாரம்: செவ்வாய்க் கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் ேசர்த்து வருவது, மிகச் சிறந்த பரிகாரம்.