(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: கடக ராசி அன்பர்களுக்கு ராகு, "அஷ்டம ஸ்தானம்" எனப்படும் 8-ம் இடத்திற்கு மாறியிருக்கிறார். 8-ம் இடம் என்பது ஆயுள் ஸ்தானமாகும். உடல்நலன், ஆரோக்கியம், அலைச்சல் ஆகியவற்றைக் குறிக்கும் ராசி! அங்கு சனி, ராகு சேர்ந்திருப்பது அடுத்துவரும் சுமார் 1½ ஆண்டுகளுக்கு அதிக அலைச்சலையும், சிறு, சிறு உடல் பின்னடைவையும் ஏற்படுத்துவார் என விவரிக்கின்றன, பழைமையான, ஜோதிட கிரந்தங்கள் (ஓலைச்சுவடிகள்) விவரித்துள்ளன. விலைமதிப்பிட முடியாத மிக, மிகப் பழைமை வாய்ந்த "அறிவுப் பொக்கிஷங்கள்" எனப் பெரியோர்களால் போற்றப்படும். இச்சுவடிகளில் ஏராளமானவை தற்போது உடுப்பி, கோரக்பூர் கீதாமந்திர், காசி சர்வ கலா சாலை போன்ற இடங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இவையனைத்தும், வட மொழியில்தான் உள்ளன. ஏனெனில், புராதன காலத்தில் சமஸ்கிருதமே, பாரத மக்களின் அன்றாட பேசும் மொழியாக இருந்து வந்துள்ளது.சித்திரை 28 (11-5-2025)-லிருந்து சனி, ராகுவுக்கு குரு பகவானின் சுபப்பார்வை கிடைப்பதால், அவற்றின் அஷ்டமாதிபத்ய தோஷம் பெரும் அளவில் குறைகிறது. உடல்நலனில் அபிவிருத்தி ஏற்படும். குடும்பப் பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
உத்தியோகம்: அலுவலகத்தில் பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும். ஒரு சிலருக்கு விருப்பத்திற்கு மாறான இடமாற்றமும் ஏற்படக்கூடும். அந்நிய நாடுகளில் வேலைபார்த்துவரும் கடக ராசியினர், தங்கள் அன்றாட வேலையில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. வேலைக்கு முயற்சி செய்வவோர் இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து, ஏமாந்துவிடக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.
தொழில், வியாபாரம்: வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றை உடல்நலக் குறைவு காரணமாக மறுக்க நேரிடும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கும். சினிமாத் துறையினர் நிதிப் பற்றாக்குறையினால், மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும். திருமணமாகியுள்ள நடிகர் - நடிகைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை முற்றி, விவாக ரத்தில் முடியக்கூடும் என்ற சூட்சுமத்தை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
கலைத் துறையினர்: சனி மற்றும் ராகு ஆகிய இரு கிரகங்களினாலும், அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம் ஏற்பட்டுள்ளது. வருமானம் குறையக்கூடும். கையிலிருப்பதைக் கொண்டு, சமாளிக்கவேண்டிய நிலை உள்ளது.அரசியல் துறையினர்: அரசியல் துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள சனிபகவானும் - ராகுவும் அஷ்டம ஸ்தானத்தில் இணைந்திருப்பது, எதிர்பாராத பிரச்னைகளை, அவர்களுக்கு ஏற்படுத்தும். கட்சி பொறுப்புகள் சம்பந்தமாக வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கை அவசியம். குறிப்பாக, இரவு நேரப் பயணங்கள், வாகனம் ஓட்டுதல், தனியே செல்லுதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் மிகவும் முக்கியம். உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமையும் ஏற்படக்கூடும். அஷ்டம ஸ்தானத்தில் சனி - ராகு சேர்க்கை ஏற்படுவதை, "காராக் கிரக தோஷம்" எனக் கூறுகிறது, "பிருஹத் ஸம்ஹிதை"! அதாவது, சிறைப் பயம் ஏற்படக்கூடும் என்பது பொருள். பொது மேடைகளில் பேசும்போதும், அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். தோஷம் சற்று கடுமையாக உள்ளது.
மாணவ - மாணவியர்: கல்விக்கு உரிய கிரகங்கள் சுப பலம் பெற்றுள்ளதால், படிப்பு பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், சக-மாணவர்களுடன் வாக்குவாதம் செய்வது, ராக்கிங் (Ragging) எனும் ெகாடிய, அநாகரீக பழக்கத்தில் ஈடுபடுவது, ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாத மாணவர்களுடன் பழகுவது, ஆகியவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். சனி - ராகுவினால் ஏற்படும் அஷ்டம ஸ்தான சஞ்சார தோஷம் சற்று கடுமையானது, மறந்துவிடாதீர்கள்!
விவசாயத் துறையினர்: வயல் பணிகளின்போது, விழிப்புடன் செயல்படுவது மிக, மிக முக்கியம். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். என்றோ பட்ட கடன்கள் இப்போது சிரமத்தை ஏற்படுத்தும். நீங்கள் செலுத்தும் வட்டியில், உங்கள் வருமானம் கரையும். அதிக மழையினால் பயிர்கள் பாதிக்கப்படும்.
பெண்மணிகள்: ராகு - சனியுடன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகிய கும்பத்தில் சேர்வது, எதிர்பாராத சில பிரச்னைகளை, பெண்மணிகளுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, கை - கால்களில் மூட்டு வலி, இரத்த அழுத்தம் உயர்தல், தலைச் சுற்றுதல், மாதவிடாய்க் கோளாறுகள் கவலையை அளிக்கும். தசா, புக்திகள் அனுகூலமில்லாமல் இருப்பின், கர்ப்பப் பைக் கோளாறுகளினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வயதில் மூத்த பெரியவர்கள், மாடிப்படி ஏறி - இறங்கும் போதும், குளியலறையில் கால் பதிக்கும் போதும், மிகவும் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். நிரந்தர நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கடக ராசியினர், மறந்துவிடாமலும், நேரந்தவறாமலும், மருத்துவர் கூறியபடி மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், தவறாமல் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது பசு நெய் அல்லது செக்கிலாட்டிய நல்லெண்ணெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வந்தால், மிகச் சிறந்த பலன் கிட்டும் (ஆதாரம்: "பரிகார ரத்னம்" -எனும் மிகப் புராதன நூல்.) எந்தத் தபால் பெட்டியில் கடிதத்தைச் சேர்த்தாலும், உரியவர்களுக்குச் சரியாகப் போய் சேர்ந்துவிடுமல்லவா? ("பக்தி" -எனும் விலாசம் சரியா இருந்துவிட்டால், போதும்! ஆசாரம், அனுஷ்டானம் என்னும் தபால் தலை இல்லாவிட்டாலும்…!) அதைப் போன்றதுதான், எந்தக் கோயில் தீபத்்தில் எண்ணெய் சேர்த்தாலும், பலன் கிட்டும். ஒவ்வொரு துளி நெய், எண்ணெய்க்கும் மகத்தான பரிகார சக்தி உள்ளது.