(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: மிதுன ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய கும்ப ராசிக்கு ராகு மாறி, முன்னமேயே அங்குள்ள சனி பகவானுடன் சேர்கிறார். இந்தக் கிரகச் சேர்க்கை, நன்மை செய்யாது எனப் புராதன ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே தருணத்தில், மிதுன ராசியில் அமர்ந்துள்ள கேது, நன்மை செய்வார்.குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார், ராகு! "கைப் பணம் எவ்வாறு கரைந்தது, அதற்குள்ளாக…?!" என நீங்களே வியக்கும்வண்ணம் விரயத்தை ஏற்படுத்திவிடுவார், ராகு!! "இது போதாதென்று…" என்பது போல், சனி பகவானும் தன் பங்கிற்கு செலவுகளை உண்டாக்கிவிடுவார்! சித்திரை 28-ம் தேதி முதல் (11-05-2025) ராகு - சனியை, குரு, தனது 9-ம் சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், செலவுகள் பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும்,கேதுவின் நிலையினால், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்்ச்சிகளும், சுப விரயங்களையும் ஏற்படுத்தும். வெளிநாட்டில் வேலை பார்்த்துவரும் பெண் அல்லது பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் வரவு, குதூகலத்தை உண்டுபண்ணும். திருமண முயற்சிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு, அதன் பிறகு வரன் அமையும்.தாயின் உடல்நலனில் கவனமாக இருத்தல் நல்லது.
உத்தியோகம்: வேலை பார்க்கும் இடத்தில் பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். இருப்பினும், சிறு ஊதிய உயர்வு, பதவி உயர்வைத் தருவார்கள். சனி பகவானும், ராகுவும் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர்! மேலதிகாரிகள், சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை, சனி - ராகுவின் சேர்க்கை எடுத்துக்காட்டுகிறது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் மிதுன ராசியினருக்கு வெற்றி கிட்டும். அலுவலகப் பொறுப்புகளினால் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல நேரிடும்.
தொழில், வியாபாரம்: சனி, ராகு ஆகிய இருவருக்குமே வர்த்தகத் துறையுடன் தொடர்புள்ளது. இதனை, "கால ப்ரகாஸிகா", "ஜோதிடப் பாரிஜாதம்", "உத்ர காலாம்ருதம்" போன்ற உயர்ந்த ஜோதிட நூல்கள், விவரித்துள்ளன. இந்தக் கிரகச் சேர்க்கை மிகவும் அபூர்வமானது. வியாபாரிகளுக்கு மிகவும் அரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடியது. எதிர்பார்ப்பதைவிட, லாபம் சற்று அதிகமாகவே இருக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். சிலர் வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உள்ளது. புதிய துறைகளில் துணிந்து முதலீடு செய்யலாம். விற்பனைக் கிளைகளை அதிகரிக்கச்செய்ய அனைத்து உதவிகளும் கிட்டும்.
கலைத் துறையினர்: போதுமான அளவிற்கு மட்டுமே வருமானம் வரும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சுக்கிரன், புதன் ஓரளவே அனுகூலமாக உள்ளனர். வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூடியவரையில், ஆடம்பரச் செலவுகளையும், வேலையாட்களுக்காக செலவு செய்வதையும் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். செவ்வாயின் நிலைகளினால், கடன் வாங்குவது - பழக்கமாகிவிடக்கூடும், ஜாக்கிரதை! ஜென்ம ராசியில் குரு மாறியிருப்பதை மறந்துவிடாதீர்கள்! கலைத் துறை அன்பர்கள் ஆடம்பரச் செலவு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளதால், சற்று நிதானமாகச் செலவு செய்வது நல்லது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல் துறையினர்: கட்சியில் ஆதரவு சிறிது குறையக்கூடும். உயர்மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணிக்கக்கூடும். இத்தகைய தருணங்களில், தீவிர அரசியலில் ஈடுபடாமலும், அதே சமயத்தில் உயர் மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் விசுவாசத்தில் சந்தேகம்ஏற்படாமலும் நடந்துகொள்வது மிகவும் அவசியம். சாதுர்யம் மிகவும் அவசியம்.
மாணவ - மாணவியர்: படிப்பில் மனத்தை முழுமையாகச் செலுத்த இயலாதபடி, குடும்பக் கவலைகள் மனதை அரிக்கும். தாய் - தந்தையர் படும் பிரச்னைகள் உங்கள் மன-அமைதியைப் பாதித்து, படிப்பில் கவனக் குறைவு ஏற்படும். இந்நிலை தற்காலிகமானதே. மற்றபடி பள்ளி மற்றும் கல்லூரி சூழ்நிலை உற்சாகத்தைத் தரும். விடுதியில் தங்கி, படித்துவரும் மாணவ - மாணவியருக்கு, சக-மாணவர்கள், உதவி செய்வார்கள். கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நீடிக்கிறது.பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி உங்களுக்ேக! என உறுதியளிக்கின்றது, சனி - ராகு கூட்டணி!
விவசாயத் துறையினர்: விவசாயப் பணிகளிலும், கால்நடைகளின் பராமரிப்பிலும் அதிகம் செலவாகும். என்றோ பட்ட கடன்கள் தொல்லை தரும்.
பெண்மணிகள்: சனி பகவானும், ராகுவும் சேர்ந்திருப்பது, உங்களுக்கு பாக்கிய ஸ்தானமாகும். பல வழிகளிலும் பணம் விரயமாகும். வேலை பார்த்துவரும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில், நிம்மதி குறையும். சக-ஊழியர்களினால், மன அமைதி பாதிக்கப்படும். கூடியவரையில், அவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருத்தல் நன்மை செய்யும்.
அறிவுரை: உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு, சக்திக்கு மீறிய வாக்குறுதிகளைக் கொடுத்து, பின்பு அவதிப்பட வேண்டாம். பிறர் பிரச்னைகளில் தலையிடுவதையும் தவிர்க்கவும்.
பரிகாரம்: சனி, ராகுவிற்கு பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இது உதவும். தினமும் காலை - மாலை இருவேளைகளிலும், "ஓம் நமசிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தையும், "ஓம் நமோ நாராயணாய" எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தையும் 108 அல்லது 48 தடவைகள் சொல்லி வந்தால், பலன் கைமேல்! 2. அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைதோறும், பிரதோஷகாலமாகிய மாலை 4.30 முதல் 6.30-க்குள்ளாக முன்று மண் அகல் விளக்குகளில், பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவந்தால், போதும்.ஒவ்வொரு துளி எண்ணெய்க்கும் மகத்தான சக்தி - பலனுண்டு.