(26-4-2025 முதல் 25-11-2026 வரை)
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: சிம்ம ராசி அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானம் எனப்படும் கும்ப ராசியில் சனி - ராகு சேர்க்கை ஏற்படுகிறது. ஜென்ம ராசியில் கேது! ஜாதகத்தில், 7-ம் இடம் கணவர் - மனைவியரிடையே ஏற்படும் பரஸ்பர அந்நியோன்யம், அன்பு, ஒற்றுமை, உடலுறவு, ஆகிய அம்சங்களைக் குறிக்கிறது. புத்திர ஸ்தானத்திற்கும், களத்திர - காம ஸ்தானமாகிய 7-ம் இடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை, "பிருஹத் ஸம்ஹிதை", "பூர்வ பாராசர்யம்" ÿவாத்ஸ்யாயன மகரிஷியின், "காம சாஸ்திரம்" ஆகிய பண்டைய நூல்கள் விவரித்துள்ளன.திருமண வாழ்க்கையின் வெற்றிக்கும், மன நிறைவிற்கும் ஸப்தம (7) ஸ்தானம் மிக, மிக முக்கியமானதாகும்! வரும் சுமார் ஒரு வருட காலத்திற்கு பெண் அல்லது பிள்ளையின் திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது, 7-ம் இடப் பொருத்தத்தை அதிஜாக்கிரதையாகக் கணித்துப் பார்த்து, வரனை நிச்சயிப்பது அவசியம். கணவர் - மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும், தாம்பத்தியத்தில், சுகக் குறைவும் ஏற்படக்கூடும். கணவர், சிம்ம ராசியானால், மனைவிக்கும், மனைவி சிம்ம ராசியானால், கணவருக்கும் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். அதிர்ஷ்டவசமாக, பரிகாரத்திற்கு உட்பட்டதே இந்தத் தோஷம்!
உத்தியோகம்: அலுவலகத்தில், உழைப்பு அதிகமாகும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும், உயரதிகாரிகளின் நியாயமான போக்கும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தை அளிக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றத்தையும், சிறு பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு, முயற்சியில் வெற்றி கிட்டும். இருப்பினும், வெளியூரில்தான் கிடைக்கும். வெளிநாட்டுப் பணிக்கு முயற்சிக்க, ஏற்ற தருணம் இது. கணவர் - மனைவியர் இருவருமே வேலையில் இருப்பின், ஒருவருக்கு இடமாற்றம் ஏற்படுவதால், கணவர் - மனைவி தம்பதியினர் தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில், உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான (8) குரு பகவான் அமர்ந்துள்ள நிலையில், சனி - ராகு கூட்டுச் சேர்க்கை நிகழ்கிறது! வியாபாரம் சம்பந்தமாக, வெளியூர்ப் பயணங்களினால், குடும்பத்தை விட்டு அடிக்கடி பிரிந்திருக்க நேரிடும். தொழில் ஸ்தானத்தில், குரு பகவான் அமர்ந்திருப்பது, நன்மை தராது. அதற்கு மாறாக, விற்பனையில் கடினமான போட்டிகளையும், தரக் குறைவான செயல்களையும் சமாளிக்க வேண்டிவரும்.
கலைத் துறையினர்: கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாகும். கலைத் துறைக்கு அதிபதியான சுக்கிரனும், சனி பகவானும் நட்புக் கிரகங்களாவர். நிழற் கிரகமான ராகுவை, சனிக்குச் சமமாகக் கருதியே, பலனை நிர்ணயிக்க வேண்டும் எனக் கூறுகின்றன அனைத்து புராதன ஜோதிட நூல்களும். சிம்ம ராசியில் பிறந்துள்ளவர்களுக்கு, இந்தச் சனி - ராகு சேர்க்கையும், ஜென்ம ராசி கேதுவும் அளவோடு நன்மைகளைச் செய்வார்கள். பலருக்கு தீர்த்த, தல யாத்திரையும் மகான்கள் தரிசனமும் கிடைக்கும். திருமணமான கலைத் துறையினர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்து கொள்வது நல்லது. சிறு கருத்து வேறுபாடும், வாக்குவாதத்தில் கொண்டுவிடக்கூடும். அது, திருமண முறிவிற்கு வழிவகுத்துவிடக்கூடும்.
அரசியல் துறையினர்: ராகு - சனி சேர்க்கை அரசியல் துணை அன்பர்களுக்கு நன்மை செய்யாது. கட்சியில் உள்ள தொண்டர் ஒருவரால் வீண் அபவாதமும், நற்பெயருக்குக் களங்கமும் ஏற்படக்கூடும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், பெரும் பிரச்னையில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும் (ஆதாரம்: அர்த்த சாஸ்திரம்). மக்களிடைேய செல்வாக்கும் பாதிக்கப்படும். கட்சியில் ஆதரவு குறையும், உள்கட்சிப் பூசல்களினால், கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்துவார்கள், சனி பகவானும், ராகுவும்.
மாணவ - மாணவியர்: சயன -காம - களத்திர ஸ்தானமாகிய 7-ம் இடத்தில், இரு சக்தி வாய்ந்த கிரகங்களான சனி பகவானும், ராகுவும் இணைந்திருப்பதாக மனதில் சபலங்களும், தகாத எண்ணங்களும் ஏற்படக்கூடும் என காளிதாஸரின் பிரசித்திப் பெற்ற, "உத்திர காலாம்ருதம்" எனும் நூல் கூறியுள்ளது. பிற மாணவியருடன் நெருங்கிப் பழகாமல் இருப்பதும், அவர்களது சொந்தப் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்.
விவசாயத் துறையினர்: வயலில் உழைப்பு கடுமையானதாக இருக்கும். விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்கள் எவ்வித தட்டுப்பாடுமின்றிஆயினும், விளைச்சலும், வருமானமும், மனதிற்கு உற்சாகத்தையும், நிறைவையும் அளிக்கும், சனி - ராகு கூட்டணி, உங்கள் நெடுங்கால கடன் பிரச்னைகளை நல்லபடி தீர்த்து வைப்பார்கள். நிம்மதி பிறக்கிறது, உங்கள் மனதில்! மனது வைத்தால், சேமிப்பிற்கும் இடமுள்ளது. புதிய விளை நிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.
பெண்மணிகள்: திருமணமான பெண்மணிகள், கணவருடன் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். இது கணவருக்கும் பொருந்தும்! 7-ம் இடம் கணவர் - மனைவியரிடையே நிலவும் உறவைத் தீர்மானிக்கிறது. அந்த ராசியில் ஏற்படும் சனி - ராகு சேர்க்கை, அந்த ஒற்றுமையைக் கடுமையாக பாதிக்கும். பல சிம்ம ராசி பெண்மணிகளுக்குக் கருப்பை சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். திருமணப் பொருத்தங்களில் 7-ம் இடப் பொருத்தத்தைத் தீர ஆராய்ந்த பின்னரே வரனை நிச்சயிக்க வேண்டும்.
அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். சிறு உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி, தகுந்த யோசனை பெறுவது மிகவும் நல்லது. நெருங்கிய உறவினர்களுடனும், சக-நண்பர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிருங்கள்.
பரிகாரம்: திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, நாகமங்களா, திருப்பாம்புரம், மங்களகிரி (ஆந்திரா) தரிசனம் சிறந்தது. திருத்தலங்களுக்குச் ெசல்லும்போது, மறவாமல் பசு நெய் அல்லது எள் எண்ணெய், மண் அகல் விளக்கு - இவற்றை எடுத்துச் செல்ல மறக்க வேண்டாம். மேற்கூறிய பரிகாரங்களைச் செய்ய இயலாவிட்டால், வீட்டின் பூஜையறையில், சனிக்கிழமைகளில், பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில், ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றி வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.