இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம்

Published: 24 Apr 2025

(26-4-2025 முதல் 25-11-2026 வரை)

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: ராகுவும் - சனியும் இணைந்துள்ள கும்ப ராசி, துலாம் ராசி அன்பர்களுக்கு, பூர்வ - புண்ணிய, புத்திர ஸ்தானமாகும்!கோள் சார விதிகளின்படி, இந்தச் சேர்க்கை நன்மை செய்யாது. இது ஒரு பொது விதிதான் - துலாம் ராசியினரைப் பொருத்தவரையில்…! ஏனெனில், துலாம் ராசி, சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாகும். அந்த ராசியில்தான், அவர், "உச்ச பலம்" பெறுகிறார். "ஜெனன காலத்தில் துலாம் ராசியில் சனி பகவான் அமர்ந்திருப்பின், அவர்கள் பெயர், புகழ், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற்று 100 வயது வாழ்வர்" -எனக் கூறுகிறது, "ஜோதிடப் பாரிஜாதம்" எனும் புகழ்பெற்ற வடமொழி ஜோதிட வானியல் கிரந்தம்.அதே தருணத்தில், கேதுவும், ராசிக்கு லாப ஸ்தானமாகிய சிம்மத்தில் அமர்ந்திருப்பது மிக நல்ல கிரக நிலையாகும்.ராகு - சனி சேர்க்கையினால், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. குழந்தைகளின் உயர்கல்விக்காக அதிக பணம் செலவழியும். உத்தியோகம் அல்லது உயர்கல்வி காரணமாக, குழந்தைகள், தற்காலிகமாக, குடும்பத்திலிருந்து, பிரிந்திருக்க நேரிடும் - அவர்களின் எதிர்கால நன்மைக்காகவே! இருப்பினும், பிரிவு - வேதனையைத் தரும்!!

உத்தியோகம்: புதிய வேலைக்கு முயற்சிக்கும் துலாம் ராசி அன்பர்களுக்கு, பூர்வ - புண்ணிய ராசியான கும்ப ராசியில் ஜீவனகாரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்திருப்பது மிக நல்ல சேர்க்கையாகும். மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். ஆயினும், வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோதான் கிடைக்கும். அதன் காரணமாக, குடும்பத்திலிருந்து பிரிந்திருக்க நேரிடும். பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு, அன்றாடப் பணிகளில் உற்சாகத்தையளிக்கும்.

தொழில், வியாபாரம்: இந்த இரண்டு துறைகளுமே சனி மற்றும் ராகு ஆகிய இரு வீரியம் நிறைந்த கிரகங்களின் நேர் ஆதிக்கத்தில்தான் உள்ளன. சந்தையில் போட்டிகள் கடுமையாக இருப்பினும். உங்கள் விற்பனை, திருப்திகரமாகவே இருக்கும். லாபமும் எதிர்பார்க்கும் அளவிற்கு சற்று அதிகமாகவே இருக்கும். கூட்டாளிகள், வங்கிகள் ஆகியோரால் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆயினும், உங்கள் விற்பனையையும், வருமானத்தையும் அவை பாதிக்காது. புதிய துறைகளில் அளவோடு முதலீடு செய்யலாம்.

கலைத் துறையினர்: வருமானம் நீடிக்கும் அளவோடு! வாய்ப்புகள் நீடித்தாலும், எதிர்பார்க்கும் அளவிற்கு இராது என ராகு - சனிக் கூட்டணி குறிப்பிட்டுக் காட்டுகிறது. சித்திரை 28 (11-5-2025) அன்றிலிருந்து, சனி - ராகுவிற்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால், அன்றைய தினத்திலிருந்து, வாய்ப்புகளும், வருமானமும் உயரும். பலருக்கு வெளிநாடு சென்று வரும் யோகத்தையும் ஏற்படுத்தித் தருவார்கள், சனி பகவானும், ராகுவும்!

அரசியல் துறையினர்: சனி - ராகுவின் கூட்டணியினால், அதிக நன்மைகளைப் பெறுவதில், அரசியல் துறையினரே முன்னணியில் நிற்கின்றார்கள். மக்களிடையே செல்வாக்கும், புகழும் உயரும். ஜெனன கால தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ முக்கிய பதவி ஒன்று வகிக்கும் வாய்ப்பு தேடி வரும்.

மாணவ - மாணவியர்: துலாம் ராசிக்கு யோககாரகராவார் சனி பகவான்! வித்யா (கல்வி) காரகரான புதன், சனிக்கும், ராகுவிற்கும் நட்புக் கிரகங்களாவார். ஆதலால், இப்போது ஏற்பட்டுள்ள சனி - ராகு சேர்க்கை, மாணவர்களுக்குப் பல நன்மைகளை வழங்கவிருக்கிறது. பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். உயர் கல்விக்கு நிதியுதவி எளிதில் கிட்டும். வெளிநாடு சென்று, பிரத்யேக உயர்கல்வி பயிலஆர்வமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளை இப்போது மேற்கொள்ளலாம். மகத்தான வெற்றிபெறுவீர்கள்!

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் உற்சாகம் மேலிடும். அடிப்படை வசதிகள் குறைவின்றி கிடைக்கும். ஆயினும், உழைப்பு கடுமையாக இருக்கும். "வேலை வாங்கிக் கூலி கொடுப்பவர் சனி பகான்…! " என்றொரு மூதுரையும் உண்டு! கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்களிலிருந்து, உங்களை விடுவித்துவிடுவார்கள், சனி பகவானும், ராகுவும்!

பெண்மணிகள்: சனி - ராகு சேர்க்கையினால் பெரும்பாலும் உங்களுக்கு நன்மைகளே ஏற்படும். இருப்பினும், உங்கள் குழந்தைகளுக்கு சிறு ஆரோக்கியக் குறைபாடு ஏற்படக்கூடும். முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு கங்கா ஸ்நான பாக்கியம் கிட்டும்.

அறிவுரை: அதிக அலைச்சல்களைத் தவிர்க்கவும். குழந்தைகளின் விஷயங்களில் கவனமாக இருங்கள். கற்பனையான கவலைகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: இருபத்தி நான்கு சனிக்கிழமைகள் தோறும், உங்கள் அருகாமையிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டின் பூஜையறையிலோ, தினமும் ஏற்றிவரும் தீபத்துடன், பரிகார தீபமாக மண் அகலில், எள் எண்ணெய் தீபம் ஒன்று ஏற்றிவருவது, கைமேல் பலனளிக்கும்.

  1. மேற்கூறிய பரிகாரத்தைச் செய்ய இயலாதவர்கள், நெய், பருப்பு, எள் கலந்த சாத உருண்டைகளைக் காகத்திற்கு வைப்பதும் மகத்தான புண்ணிய பலன்களை அள்ளித் தருவதுடன், தோஷங்கள் அனைத்தையும் போக்க வல்ல மிகச் சிறந்த பரிகாரமாகும்.
  2. அதுவும் முடியாதவர்கள், லிகித ஜபமாகப் போற்றிக் கொண்டாடப்படும், "ÿ ராமஜெயம்" எனும் தாரக மந்திரத்தை, பக்தி - சிரத்தையுடன் கூடிய மனதுடன், நோட்டுப் புத்தகங்களில் 1008 முறை எழுதிவந்தாலும் போதும், உங்கள் துயரங்கள் எல்லாம் பகலவனைக் கண்ட பனி போல் மறைவதுடன், தோஷங்களனைத்தும், சந்தோஷமாக மாறப்போவது திண்ணம். இதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

பிறந்தநாள் பலன்கள்